PUBLISHED ON : பிப் 18, 2026

குறைவான நீர்த்தேவையுடன் அதிக புரதச்சத்து நிறைந்த உளுந்து பயிர் பொருளாதார முக்கியத்துவம் கொண்டது. உளுந்து பயிரின் வளர்ச்சி காலம் 60 முதல் 90 நாட்கள். இதை ஆடி (ஜூன், ஜூலை), புரட்டாசிபட்டத்தில் (செப்., அக்.,) பயிரிடலாம். குறுகிய காலமாக 65 முதல் 75 நாட்கள் வயதுடைய வம்பன் 8, 11 ரகங்கள் ஒரே நேரத்தில் முதிர்ச்சியடைந்து அறுவடைக்கு தயாராகும்.
மேலும் மஞ்சள் தேம்பல் நோய் எதிர்ப்புத் தன்மையுடையது. ஏக்கருக்கு 375 கிலோ முதல் 400 கிலோ வரை மகசூல் தரும். வம்பன் 12 ரகம் 75 முதல் 80 நாட்களில் 350 கிலோ மகசூல் தரும், தரிசு நிலத்திற்கு உகந்தது. வம்பன் 9 ரகம் நெல் தரிசுக்கு உகந்தது.
உழவும் விதைப்பும்
முதலில் சட்டி கலப்பையில் ஒருமுறை உழவேண்டும். அடுத்ததாக ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் பரப்பி கொக்கி கலப்பையால் இருமுறை உழ வேண்டும். ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவை. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் அல்லது 4 கிராம் டிரைகோடெர்மாவிரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கலந்து விதைப்புக்கு 24 மணி நேரத்திற்கு முன் பூஞ்சாண கொல்லி விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
அதன்பின் உயிர் உரங்களான 200 கிராம் ரைசோபியம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியாவை ஆறவைத்த அரிசிக்கஞ்சியுடன் கலந்து மீண்டும் விதைநேர்த்தி செய்து 4 மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். 30க்கு 10 செ.மீ., இடைவெளியில் 33 செடிகள் / செ.மீ.க்கு இருக்க வேண்டும்.
முதல் உழவு செய்யும்போது ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், அடியுரமாக 60 கிலோ வேப்பம் புண்ணாக்கை இடுவதன் மூலம் வேரழுகல் நோயைத் தடுக்கலாம். இறவை பாசனமாக இருந்தால் ஏக்கருக்கு 5 கிலோ யூரியா, 45 கிலோ டி.ஏ.பி., 18 கிலோ பொட்டாஷ் உரமும் மானாவாரியாக இருந்தால் 2.5 கிலோ யூரியா, 22 கிலோ டி.ஏ.பி., 10 கிலோ பொட்டாஷ் உரமிட வேண்டும்.
இதனுடன் ஏக்கருக்கு 2 கிலோ பயிர் நுண்ணுாட்டச் சத்து, 10 கிலோ ஜிங்க் சல்பேட் நுண்ணுாட்டச் சத்து இட வேண்டும்.
இலைவழி தெளிப்பு
ஏக்கருக்கு 2 கிலோ டி.என்.ஏ.யு., பயறுவகை ஒண்டரை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். ட்ரோன் மூலம் தெளிப்பதாக இருந்தால் ஒரு லிட்டர் பயறு ஒண்டரை 19 லிட்டர் தண்ணீருடன் ஒட்டும் பசை கலக்க வேண்டும்.
15 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை தெளிக்கலாம். பயறு ஒண்டர் இல்லையெனில் 4 கிலோ டி.ஏ.பி., உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும். அதை 190 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 25 வது, 40 வது நாளில் தெளிக்க வேண்டும். 2 கிலோ யூரியாவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 30வது, 45வது நாட்களில் தெளிக்க வேண்டும்.
களை நிர்வாகம்
விதைத்த 3ம் நாளில் லிட்டருக்கு 5 மில்லி பென்டிமெத்தலின் வீதம் ஏக்கருக்கு ஒரு லிட்டர் அளவில் தெளிக்க வேண்டும். 25 ம் நாள் ஒருமுறை களை எடுக்க வேண்டும். பயிர் வளர்ச்சி பருவத்தில் ஊசி இலை களைகள் இருந்தால் 400 மில்லி இமாஸ்திபயர், அகன்ற இலை களைகள் இருந்தால் 200 மில்லி குயிசல்பாப் இதைல் மருந்தை தெளிக்க வேண்டும்.
வெள்ளை ஈ, காய்ப்புழு, அசுவினி பூச்சி மேலாண்மைக்கு லிட்டர் 2 மில்லி வேப்ப எண்ணெய் வீதம் ஏக்கருக்கு 1000 மில்லி தெளிக்க வேண்டும். 6 மஞ்சள் வண்ண ஒட்டு பொறி, 5 இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும்.
இமிடாகுளோபிரிட் 7.8 சதவீத எஸ்.எல்., 40 மில்லி அல்லது 50 மில்லி ஸ்பின்னோசேட் தெளிக்க வேண்டும். மஞ்சள் தேம்பல் நோய்க்கு ஏக்கருக்கு 100 கிராம் அசிட்டம்பிரைடு 20 எஸ்.பி., தெளிக்க வேண்டும்.
இலைச்சுருள் நோய்க்கு டைமிதோயேட் 30 இ.சி., 200 மில்லி அல்லது மீதைல்டெமட்டான் 25 இ.சி., 200 மில்லி தெளிக்க வேண்டும். விதைத்த 30 நாட்களில் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் அல்லது டிரைகோடெர்மா விரிடி ஒரு கிலோ, 20 கிலோ மணல் அல்லது மட்கிய தொழு உரத்தை சேர்த்து மண்ணில் இட்டால் வேரழுகல் நோயைத் தடுக்கலாம்.
-சரவணன்
தொழில்நுட்ப வல்லுநர் (உழவியல்)
வேளாண் அறிவியல் மையம்,
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலை,
திண்டுக்கல்

