PUBLISHED ON : ஆக 15, 2018

வேளாண் துறை சார்பில் 2018 ல் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் கூட்டுப்பண்ணையம் எனும் புதிய சிறப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் நோக்கம் சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து குழுக்களாக செயல்பட்டு, உழவர் ஆர்வலர் குழுவாக அமைப்பது.
இதன்பின் உழவர் உற்பத்தியாளர் குழுக்களாக மாறுவதன் மூலம் உயர் தொழில்நுட்பங்கள், நிதி ஆதாரத்திற்கான வழிவகை பெறுதல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட விளை பொருள் விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க செய்வதாகும்.
ஒரு கிராமத்தில் அருகருகே ஒரே பயிர் செய்யும் நிலம் உள்ள 20 சிறு, குறு விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். ஒவ்வொருவரும் ஆயிரம் ரூபாய் மட்டும் துவக்க சேமிப்பு நிதியாகவும், 100 ரூபாய் மட்டும் நுழைவு அனுமதி கட்டணமாக செலுத்தி, புதிய வங்கி கணக்கு துவக்கி, உழவர் ஆர்வலர் குழுவாக செயல்படுவர்.
இக்குழுவின் விவசாயிகள் ஒருங்கிணைந்து, இடுபொருட்களை கூட்டமாக குறைந்த விலையில் கொள்முதல் செய்தல், பண்ணை கருவிகளை பயன்படுத்துதல், சிக்கன நீர் பராமரிப்பு மேற்கொள்ளுதல் மற்றும் மதிப்புக்கூட்டி விளை பொருட்களை விற்பனை செய்தல் ஆகிய வேளாண் பணிகளை மேற்கொள்வர். நுாறு சிறு, குறு விவசாயிகளை உள்ளடக்கிய ஐந்து உழவர் ஆர்வலர் குழுக்கள் ஒருங்கிணைத்து, ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுவாக அமைக்கப்படும்.
அரசு நிதி ரூ.5 லட்சம்
ஒரே குழுவிற்கு தமிழக அரசு வழங்கும் நிதி ஐந்து லட்சம் ரூபாயை பெற்று பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிதியானது வேளாண் தொழிலுக்கு தேவையான பொதுவான உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது.
வேளாண் சார்பு தொழில் மேற்கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை சேமித்தல், உறுப்பினர்களுக்கிடையே உள்கடன் வழங்குதல் மற்றும் தொழில் மேம்பாட்டிற்காக வங்கி கடன் பெறுதல் போன்ற பயன்களை அடைய இத்திட்டம் விவசாயிகளுக்கு வழிவகுக்கிறது. வேளாண் சார்பு தொழில் மேற்கொள்ளும் பத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஒருங்கிணைத்து ஆயிரம் விவசாயிகளை உள்ளடக்கிய ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்கப்படும்.
இந்நிறுவனத்திற்கான பயன்கள் அனைத்தையும் உறுப்பினர்களாக உள்ள சிறு, குறு விவசாயிகள் பெற முடியும்.
த.விவேகானந்தன்,
துணை இயக்குனர்,
நீர் மேலாண்மை பயிற்சி நிலையம், மதுரை.

