PUBLISHED ON : ஜன 25, 2012

வளர்ப்பு முறைகள்: புறக்கடையில் கோழிவளர்ப்பு முறை: மிக தீவிர முறை: மிக தீவிர முறையில் இறைச்சிக்கோழிகள் மற்றும் முட்டைக்கோழிகளை ஒரே இடத்தில் வைத்து அதற்குத் தேவையான தண்ணீர் மற்றும் தீவனங்கள் அளித்து வளர்க்கப்படுகிறது. தீவனத்தின் செலவினம் கோழிவளர்ப்பின் 70-80 விழுக்காடுகள் இருப்பதால், நாட்டுக்கோழி உற்பத்தி செலவீனம் அதிகமாக இருக்கும்.
தீவிர முறை - உலாவு தளத்துடன் கூடிய கூண்டுமுறை: உலாவு தளத்தின் உட்புறத்தளம், காரை, மண் போன்றவைகளால் நிரப்பப் பட்டு கெட்டிப்படுத்தப்பட்டு, பசுஞ்சாணியால் மெழுகி விடப்படும். மழைக்காலங்களில் தரை, நனையாத முறையில் பாலிதீன் அல்லது உரச்சாக்கு மேற்கூரையாகத் தற்காலிகமாக மறைக்கப்படும். உலாவு தளத்தின் நாற்புறமும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கோழிக்கூண்டுகள் அருகில் வேப்பமரங்கள் வளர்க்கப்பட்டால் நோய்கள், காற்று, வெயில் என்பனவற்றினின்றும் கோழிகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். பாம்புகள் வராமல் தடுக்க நாகதாளிச் செடி, வசம்புச் செடி, சிரியநங்கை மற்றும் பெரியநங்கை செடியையும் ஓரமாகப் பாத்தியமைத்து வளர்த்தால் நல்ல பயனைத் தரும். கோழிகள் சில வேளைகளில் கீரைகள், பசும்புல் போன்றவற்றையும் உணவாக உட்கொள்ளும். அத்தேவையைப் பூர்த்தி செய்ய மண் சட்டிகளில் உரத்தோடு கலந்த மண்ணை நிரப்பிக் கீரைகளை வளர்த்து, வளர்ந்தபின் சட்டியுடன் உலாவுதளத்தின் உட்புறம் நான்கு பக்கமும் வைக்க, அவை ஒரு இயற்கை சூழலை உருவாக்கி, கோழிகளின் இனவிருத்தித் திறனை அதிகப்படுத்தும்.
நாட்டுக்கோழி இனங்கள்: நம் இந்தியாவில் மட்டும் 18 கோழி இனங்கள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன. அவை: குருவுக்கோழி, பெருவிடைக்கோழி, சண்டைக்கோழி அசில்கோழி, கடக்நாத் என்னும் கருங்கால் கோழி, கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி என்னும் நேக்கட் நெக், கொண்டைக்கோழி, குட்டைக்கால் கோழி.
உயர்ரக நாட்டுக்கோழி இனம்: நந்தனம் கோழி ஆராய்ச்சி நிலையத்தில் நந்தனம் ஒன்று மற்றும் நந்தனம் இரண்டு என்ற இருவகை உயரினக் கோழிகள் உற்பத்தி செய்தனர். ஆந்திர மாநிலத்தில் வனராஜா என்ற உயரினக்கோழியை உற்பத்தி செய்தனர். பெங்களூரு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கிரிராஜா மற்றும் சுவர்ணதாரா என்னும் உயரினக் கோழிகளை உற்பத்தி செய்து புறக்கடை முறையில் கோழி வளர்ப்பதற்காக நமக்கு கொடுத்துள்ளனர்.
கோழிகள் தேர்வு: நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில் கவனமுள்ளவையாகவும் இருக்கும். வேகமான நடை, வேகமான ஓட்டம், தேவைக்கேற்ப சில மீட்டர்கள் தூரம் பறத்தல், சில நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக இருக்க வேண்டும். பொதுவாகச் சேவல்கள் இனச்சேர்க்கையில் பிரியமுள்ளவைகளாய் இருக்கும். நல்ல அகலமான நெஞ்சம், நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு உதாரணமாகும். கோழியின் சுகத்தை கொண்டைல் பார் என்பார்கள். நல்ல சிவந்த பளிச்சென்ற கொண்டை நல்ல சுக தேகத்தைக் குறிக்கும். கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்க வேண்டும். நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய ப்ரம்மா ரகக்கோழிகளை தேர்ந்தெடுப்பது நல்லது.
தேவையான அனைத்து உணவுச்சத்துக்களும் அடங்கிய சரிவிகிதத் தீவனத்தையே எப்பொழுதும் உபயோகிக்க வேண்டும். தீவனத் தொட்டியில் போதுமான இடவசதி, கோழிகளுக்குக் கிடைக்கும் வண்ணம் தேவையான எண்ணிக்கையில், தீவனத் தொட்டிகளை வைக்க வேண்டும். முதல் இரண்டு வாரம் வரை 60 செ.மீ. நீளம், 7.5 செ.மீ. அகலம், 3.5 செ.மீ. உயரம் கொண்ட தீவனத் தொட்டிகள் தலா 100 குஞ்சுகளுக்கு மூன்று தீவனத் தொட்டிகளும், மூன்று முதல் ஐந்து வாரம் வரை 90 செ.மீ. நீளம், 12.5 செ.மீ. உயரம் கொண்ட தீவனத் தொட்டிகளும், ஆறு முதல் எட்டு வாரம் வரை 120 முதல் 150 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம், 10 செ.மீ. உயரம் உடைய தீவனத் தொட்டிகள் தலா 100 கோழிகளுக்கு மூன்று வீதம் கொடுக்க வேண்டும். தீவனத் தொட்டியில் நான்கு வாரம் வரை ஒரு கோழிக்குத் தலா 5 செ.மீ. இடவசதியும், 5 முதல் 8 வாரம் வரை 7.5 செ.மீ. இடவசதியும் ஏற்படுத்தித் தரவேண்டும். தீவனத் தொட்டியின் மேற்புற விளிம்பு, கோழிகளின் முதுகுப்புறத்திற்கு இணையான நேர்கோட்டில் இருக்கும்படி வயதுக்கு ஏற்ப தீவனத் தொட்டியின் உயரத்தை மாற்றி அமைத்துவர வேண்டும்.
சரிவர அமைக்கப்பட்ட தீவனத் தொட்டிகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அரைக்கப்பட்ட தீவனத்தைத் தொடர்ந்து பல நாட்களுக்குச் சேமித்து வைக்கக்கூடாது. தீவன மூடைகளை ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி தள்ளி இருக்கும்படிதான் அடுக்கி சேமிக்க வேண்டும்.
டாக்டர் வீ.தவசியப்பன்,
முனைவர் வெ.பழனிச்சாமி,
முனைவர் ரா.தங்கதுரை,
குன்றக்குடி, 04577-264 288.

