விவசாயத்தில் நானோ தொழில்நுட்பம்: நானோ தொழில்நுட்பம் என்பது மூலக்கூறு அல்லது அணு அளவில் ஒரு பொருளினை மாற்றம் செய்வதாகும். இந்தியா விலேயே முதன் முதலாக தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை உருவாக்கியுள்ளது.
மண்வளப்பாதுகாப்பு: மண்வளத்தை பாதுகாப்பது பயிர் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. பயிருக்கு அளிக்கப்படும் சத்துக்களில் பெரும்பாலானவை களிமண்ணில் ஒட்டிக் கொள்வதால் பயிருக்கு சரியான விகிதத்தில் கிடைப்பதில்லை. ஆனால் நானோ தொழில்நுட்பத்தின்மூலம் இதனை மாற்ற முடியும். நானோ துகள்கள் களிமண்ணில் ஒட்டிக்கொள்வதால் பயிர்ச்சத்துக்கள் களிமண்ணில் ஒட்டுவது தடுக்கப்பட்டு பயிருக்கு தேவையான அளவு கிடைக்கிறது.
நானோ உரங்கள்: நானோ உரங்களுக்கு ஜியோலைட் மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் முதற்கட்ட ஆராய்ச்சியில் நானோ உரங்களிலிருந்து பயிருக்கு தேவையான நைட்ரஜன் சத்து நாற்பது நாட்கள் வரையிலும் நானோ உரங்களிலிருந்து சீராக வெளியாகிறது. நானோ உரங்கள் பயிருக்கு தேவையான சத்துக்களை சரியான விகிதத்தில் தக்க முறையில் கிடைக்க வழிசெய்கிறது. மேலும் உரத்துகள்கள் நானோ படலம் கொண்டு பூசுவதால் சத்துக்கள் வெளியாவது தடுக்கப் படுகிறது. பயிர்களின் சரிவிகித சத்து தேவைக்காக எல்லாத்தேவையான சத்துக்களையும் உள்ளடக்கிய நானோ கம்போஸ்ட்டை உருவாக்க முடியும்.
களைக்கொல்லிகள்: விவசாயப் பல்கலைக்கழகத்தில் நானோ களைக்கொல்லிகள் உருவாக்கப் பட்டுள்ளன. களைக்கொல்லியின் மூலக்கூறுகளைத் தேவையான இடத்தில் வெளியிடுவதால் களைகளில் வளர்ச்சி கட்டுப்படுத்தப் படுகிறது. பாலிமர் பொதிந்த களைக்கொல்லிகள் மண்ணில் உள்ள ஈரப்பதத்திற்கேற்ப வெளியாகி அதிலுள்ள வேதிப்பொருட்களை விதைகளின் முளைப்புத்திறனைக் குறைத்துவருகிறது. இதன்மூலம் களைக்கொல்லிகளின் திறன் அதிகரிக்கிறது.
விதைகளின் முளைப்புத்திறன் மேம்பாடு: கார்பன் நானோ குழாய்கள் விதைகளின் தோலை விரிவடையச் செய்தும் நீக்கி கதவுகளாகச் செயல்பட்டு விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்கின்றன. இந்த கார்பன் நானோ குழாய்கள் மண்ணின் ஈரப்பதம் குறைவாக உள்ள நிலையிலும் முளைப்புத்திறனை அதிகரிக்கிறது.
பயிர் நோய்களைக் கண்டறிதல்: நானோ துகள்களை பயிர்களில் நோயின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தேவையான பூசனக்கொல்லியை தேவையான இடத்தில் வெளியிடச்செய்ய முடியும். இதன்மூலம் விளைச்சல் குறைவதைத் தடுக்க முடியும். நானோ சென்சார்கள் மூலம் பயிரில் உள்ள பிரச்னைகளையும் உடனடியாக தெரிந்துகொள்ளலாம். நானோ தொழில்நுட்பத்தின் மூலம் வேளாண் பொருட்களைத் தரப்படுத்துவதும் சாத்தியப்படுகிறது.
நானோ உயிரி தொழில்நுட்பத்தின்மூலம் உணவு, பயிர்ச்சத்துக்களுக்குத் தேவையான மூலக்கூறுகள், புரதத்தைக் கண்டு பிடிப்பதற்கான புதிய உபகரணங்கள் பற்றியும் விலங்குகளின் கழிவிலுள்ள நச்சான பைட்டோ டாக்சிக் நோய்க் காரணிகளைக் கண்டுபிடிப்பதும் சாத்தியமாகும். நானோ தொழில்நுட்பம் உணவியல் துறையில் பெரும்பங்கு வகிக்கிறது.
மண், நீர் மாசுபடுவதை நானோ துகள்கள் மூலம் தடுப்பது குறித்து ஆராய்ச்சிகளும் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. (தகவல்: முனைவர் ப.முருகேசபூபதி, துணைவேந்தர், த.வே.பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641 003)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

