தினை சாகுபடி: தமிழகத்தில் பெரும்பாலும் மானாவாரியாகவே சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக சேலம், ஈரோடு, கோவை, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப் படுகிறது. தினையில் உள்ள சத்துக்கள் நம் அன்றாட உணவில் பயன்படுத்தி வரும் நெல், அரிசி, கோதுமையில் உள்ளதைவிட அதிகமானது.
உயர்விளைச்சல் ரகங்கள்: கோ-6: வயது 85-90 நாட்கள், விளைச்சல் எக்டருக்கு 1500-1700 கிலோ, இறைவை, மானாவாரியாக பயிரிட ஏற்றது. கோ(தி)7: வயது 85-90 நாட்கள், விளைச்சல் எக்டருக்கு 1900-2000 கிலோ. இறைவை மானாவாரியில் பயிரிட ஏற்றது. அதிக விளைச்சலைத் தரக்கூடியது. ஆடி, புரட்டாசிப் பட்டத்தில் மானாவாரியாக எல்லா வகை மண்ணிலும் தினைப்பயிர் நன்கு வளரும். செம்மண், இருமண் கலந்த நிலங்கள் இதற்கு உகந்தது. உயர் விளைச்சலைத் தரக்கூடிய ரகத்தினை பயன்படுத்தும்போது அதிக விளைச்சல் பெறலாம்.
ஒரு எக்டருக்கு வரிசை விதைப்பிற்கு 10 கிலோவும் தூவுவதற்கு 12.5 கிலோவும் விதை தேவைப்படும். கதிர்கள் நன்கு காய்ந்து இலைகள் பழுத்தவுடன் அறுவடை செய்து களத்தில் காயவைத்து அடித்து தானியங்களைப் பிரித்து சுத்தம் செய்ய வேண்டும். உயர் விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்துவதாலும் சீரிய சாகுபடி குறிப்புகளை கடை பிடிப்பதாலும் தோராயமாக எக்டருக்கு 1855 கிலோ தானிய மகசூலும் 5138 கிலோ தட்டை விளைச்சலும் பெறலாம். இவ்வாறு கிடைத்த தானியத்தை சாக்குப் பைகளில் வைத்து நீண்டகாலம் சேமிக்கலாம். மானாவாரியில் தினைப் பயிரை தீவனமாக சாகுபடி செய்தால் ஒரு பணப்பயிரைப்போல லாபம் ஈட்டலாம். மலைவாழ் மக்களால் பெரிதும் விரும்பி பயிரிடப்படும் தினை கடினமான வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது.
மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்: தினையிலிருந்து அரிசி, அவல், உப்புமா, தோசை, புட்டு, முறுக்கு, பக்கோடா போன்ற பல்வேறு வகையான சுவையான உணவுப் பொருட்களைத் தயாரிக்கலாம். கொத்துக்கொத்தாய் தினைப்பயிர் விளைந்து நிற்கும்போது கிளியும் குருவியும் கொத்திக்கொண்டு போகாமல் காக்க வேண்டியது அவசியம். (தகவல்: முனைவர் அ.நிர்மலகுமாரி, முனைவர் சு.ரேவதி, முனைவர் பெ.வீரபத்திரன், சிறுதானியத்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422-245 0507)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

