/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நாத்து வெங்காயம் - நன்னெறி சாகுபடி முறைகள்
/
நாத்து வெங்காயம் - நன்னெறி சாகுபடி முறைகள்
PUBLISHED ON : ஆக 08, 2012

தமிழகத்தில் விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படும் சின்ன வெங்காய இனத்தைச் சேர்ந்த நாத்து வெங்காயம் தாராபுரம், பல்லடம், உடுமலை, ஒட்டன்சத்திரம், ஸ்ரீவில்லிபுத்தூர், நாமக்கல், சேலம், விழுப்புரம், கடலூர், பாவூர்சத்திரம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றது. இதில் ஜண்டா எனப்படும் ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீகாகுளம் பகுதியில் சாகுபடி செய்யப்படும் உள்ளூர் ரகம், கடலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மட்ளூர் ரகம் மற்றும் கோ-ஆன் 5 என பல ரகங்கள் உள்ளன.
கோ-ஆன் 5: இந்த ரகம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் நாணமேடு என்ற உள்ளூர் வகையில் இருந்து கூட்டுவழித் தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஒரு கொத்தில் 3 முதல் 5 காய்கள் வரை இருக்கும். காய்கள் பெரியதாக, சிவப்பு நிறத்தில் உருண்டையாக காணப்படும். மகசூல், மண்வகை, பருவம், கடைபிடிக்கப்பட்ட தொழில் நுட்பங்களைப் பொறுத்து ஏக்கருக்கு 8 முதல் 9 டன்கள் வரை கிடைக்கும்.
விதைப்பு பருவம்: டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை விதைகள் விதைக்கப்படுகின்றது. நாற்றுக்களின் வயது 50 நாட்கள். நடவானது ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை நடவு செய்யப்படுகின்றது.
நாற்றங்கால் தொழில்நுட்பங்கள்: நன்கு வடிகால் வசதியுடைய வளமான மண்ணைத் தேர்ந்தெடுக்கவும். நிலத்தை உழுது பயிர்க்கழிவுகளை அகற்றி சமன் செய்ய வேண்டும். 3 மீ நீளம், 0.6 மீ அகலம், 0.2 மீ உயரமுடைய மேட்டுப்பாத்திகளை அமைத்து நன்கு மக்கிய தூளாக்கப்பட்ட தொழு உரத்தை இடவேண்டும். 100 ச.மீ. நாற்றங்காலுக்கு 12.5 கிராம் டிரைகோடெர்மா விரிடியை 1.25 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து பாத்திகளில் இடவேண்டும் அல்லது பாத்திகளை திரம் அல்லது கேப்டான் 5 கிராம்/ஒரு ச.மீ. என்ற அளவில் விதைப்பிற்கு முன் பாத்திகளில் இட்டு மண் நேர்த்தி செய்யலாம்.
100 ச.மீ. நாற்றங்காலுக்கு 550 கிராம் யூரியா, 3 கிலோ சூப்பர் பாஸ்பேட், 400 கிராம் மூரியேட் ஆப் பொட்டாஷ் என்ற அளவில் உரமிட வேண்டும். விதைகளை வரிசையாக 5 செ.மீ. இடைவெளியில் 2 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். நன்கு மக்கிய தூளாக்கப்பட்ட தொழு உரத்தைக் கொண்டு வரிசையாக விதைக்கப்பட்ட விதைகளை மூடவேண்டும்.
நடவு வயல் தயாரிப்பு: நடவு வயலை கட்டிகள் இல்லாமல் 2-3 தடவை நன்றாக உழவு செய்து கடைசி உழவில் ஏக்கருக்கு 10-15 டன்கள் தொழு உரம் இடவும். பின் பார்வை 45 செ.மீ. (ஒன்றரை அடி) இடைவெளியில் கட்ட வேண்டும். பார்களுக்கு பதில் சமபாத்திகளில் நடவு செய்பவர்கள் பாத்திகளின் அகலம் 1.5 மீட்டருக்கு மிகாலும் 3 முதல் 3மீ நீளம் வரையிலும் அமைக்கலாம்.
உர மேலாண்மை: 2 கிலோ டிரைகோடெர்மா விரிடியை 200 கிலோ மக்கிய குப்பையுடன் கலந்து 30 நாட்கள் வைத்திருந்து அந்த கலவையினை பார் கட்டும் முன் நிலத்தில் இடுவதால் அறுவடை சமயத்தில் வரும் தூரழுகல் நோய் கட்டுப்படுத்தப்படும்.
மேலும் தொடர்புக்கு: கே.பரமேஸ்வரன், ஒட்டன்சத்திரம் (மொபைல்: 98439 07878, 94420 37003)
-கே.சத்யபிரபா, உடுமலை.

