
பாசன நீரின் தரம் மேலாண்மை: பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் நீரானது கரையக்கூடிய உப்புகள், அதிக அளவு இல்லாமலும், மண், பயிர்களை பாதிக்கக்கூடிய குறிப்பிட்ட ரசாயன பொருட்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். தண்ணீரிலுள்ள சோடியம், கார்பனேட் மண்ணின் களர் தன்மைக்கும், குளோரைடு சல்பேட்டு உப்புக்கள் மண்ணின் உப்புத்தன்மைக்கும், போரான், புளூரைட் ஆகியவை பயிர்களில் நச்சுத்தன்மை ஏற்படுத்துவதற்கும் காரணங்களாக இருக்கின்றன.
உப்புத்தன்மையால் ஏற்படும் பாதிப்பு: பாசன நீரில் அதிக அளவில் கரையக்கூடிய உப்புக்கள் இருந்தால் வேர்பாகத்தில் அவை சேர்க்கப்படுகின்றன. அதிக அளவு கரையக்கூடிய உப்புக்களால் மண் திரவத்தின் அழுத்தம் அதிகரித்து பயிர்கள் மண்ணிலிருந்து நீரை எடுத்துக்கொள்ள மிகவும் சிரமப்பட வேண்டி இருப்பதால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. பாசனநீரின் உப்புத்தன்மை மின்கடத்தும் திறனால் அளக்கப்படுகிறது.
களர் தன்மையால் ஏற்படும் பாதிப்பு: உப்புத்தன்மை குறைவாக உள்ள நீர்ப்பாசனத்திற்கு உகந்ததாக இருந்தாலும், அந்நீரில் சோடியம் உப்புக்கள் அதிகமாக இருந்தால் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாது. களர்த்தன்மையால் ஏற்படும் பாதிப்பு சோடிய அயனிகளின் படிமான விகிதத்தால் அளக்கப்படுகிறது.
கார்பனேட்டால் ஏற்படும் பாதிப்பு: கார்பனேட், பைகார்பனேட் அயனிகளால் பாசனநீரின் தரத்திற்கு ஏற்படும் பாதிப்பு எஞ்சிய சோடியம் கார்பனேட் மூலம் அறியப்படுகிறது. எஞ்சிய சோடியம் கார்பனேட் 1.25 மில்லி ஈக்குவலண்ட்ஸ் / லிட்டர் என்ற அளவு உள்ள பாசனநீர் மத்திம தரம்(சந்தேகம்) உள்ளதாக கருதப்படுகிறது. எஞ்சிய சோடியம் கார்பனேட் 2.5 மில்லி ஈக்குவலண்ட்ஸ்/ லிட்டர் என்ற அளவுக்கும் அதிகமாக இருக்கும் நீர் பாசனத்திற்கு ஏற்றதல்ல.
குளோரைடால் ஏற்படும் பாதிப்பு: குளோரைடு மண்ணில் சிறிதளவே ஈர்க்கப்படுவதால், மண்ணின் பௌதீகத் தன்மைகள் பாதிக்கப்படுவதில்லை. எனினும் புகையிலை, எலுமிச்சை, திராட்சை போன்ற பயிர்களுக்கு குளோரைடு அதிகம் உள்ள பாசனநீரை பயன்படுத்தினால் அப்பயிர்கள் பாதிக்கப்படும்.
போரான், புளூரின் அளவு: போரான் அளவு மில்லியனில் ஒரு பங்குக்கு அதிகமாகவும், புளூரின் அளவு மில்லியனில் பத்து பங்கு அதிகமாகவும் உள்ள நீர் பாசனத்திற்கு ஏற்றதல்ல.
வடிகால் வசதிகளில் ஏற்படும் பாதிப்பு: பாசனநீரின் அதிக அளவு சோடியம் உப்புக்கள் இருந்தால் மண்ணின் வடிகால் வசதியை அது பாதிக்கும். பயிர்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. மண்ணின் காற்றோட்டம் பாதிக்கப் படுகிறது. எனவே பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
தரம் குறைந்த பாசனநீர் மேலாண்மை: அதிக உப்புத்தன்மையுள்ள பாசனநீரை நல்ல நீருடன் கலந்து உபயோகிப்பதால் உப்புக்களின் அடர்த்தியைக் குறைத்து பாசனத்திற்கு பயன்படுத்தலாம். உப்புத்தன்மையுள்ள நீரை ஒருமுறை பாசனத்திற்கு பயன்படுத்தியபிறகு அடுத்த இரண்டு பாசனங்களை கால்வாய் தண்ணீர் மூலம் கொடுத்தால், பயிர்களின் விளைச்சல் அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சோடிய அயனிகள் படிமானவிகிதம், எஞ்சிய சோடியம் கார்பனேட் அதிகம் உள்ள நீரைப் பாசனத்திற்கு பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகளை அந்தநீரில் ஜிப்சத்தை கலந்து பயன்படுத்துவதால் தவிர்க் கலாம். உப்புத்தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் இடங்களில் கிடைக்கும் மழைநீரை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.
பாசனநீர் பரிசோதனை: சாகுபடி செய்யும் பயிர் நன்றாக வளர்ந்து அதிக விளைச்சல் கொடுக்க, வளமான நிலமும் நீர்ப்பாசனத்திற்கேற்ற தண்ணீ ரும் இன்றியமையாததாகும். எனவே பாசன நீரின் குணத்தையும் அறிந்து கொள்ளுதல் மண் பரிசோதனையின் மற்றொரு பகுதியாகும்.
பரிசோதனைக்கு பாசனநீர் மாதிரி எடுக்கும் முறை: சுத்தமான கண்ணாடிப் புட்டியினை முதலில் மாதிரி நீரால் கழுவி, பின்னர் சுமார் 200 மிலி மாதிரி தண்ணீரை அதில் எடுக்க வேண்டும்.
* பம்புசெட்டை 15 நிமிடங்கள் ஓட்டியபின்னரே மாதிரி நீர் எடுக்க வேண்டும். எடுத்த நீரை மண் பரிசோதனைக் கூடத்திற்கு (மண் மாதிரி அனுப்பும் தகவல்களுடன்) அனுப்ப வேண்டும். (தகவல்: முனைவர் து.செல்வி, முனைவர் வெ.வே.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர்கள், மண்ணியல் துறை, சந்தை விரிவாக்கத்துறை, விரிவாக்கக் கல்விஇயக்குநர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 0422- 661 1253.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

