
துல்லிய பண்ணையத்தில் வாழை சாகுபடி: துல்லிய பண்ணையத்திற்கு திசு வளர்ப்பு வாழையே சிறந்தது. திசு வளர்ப்பு கன்றுகளைத் தேர்வு செய்யும் போது கீழ்க்காணும் நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும்.
* இரண்டு மாத வயதுள்ள 20-30 செ.மீ உயரமுள்ள கன்றுகளைத் தேர்வு செய்தல்.
* கன்றுகளில் 4-6 நன்கு வளர்ச்சியடைந்த இலைகள் இருக்க வேண்டும்.
* வைரஸ் நோய் தாக்கிய, மாறுபட்ட வளர்ச்சியுள்ள கன்றுகளை தேர்வு செய்யக்கூடாது.
திசு வளர்ப்புக் கன்றுகளை பயன்படுத்தாவிடில் பிற வாழைக்கன்றுகளை நேர்த்தி செய்யும் நுட்பங்கள்.
* நோய் தாக்காத 1.5 முதல் 2.0 கிலோ எடையுள்ள ஈட்டி வாழையிலிருந்து கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும். நடுமுன் கன்றின் வேர்களை சீவி விட வேண்டும்.
* இரஸ்தாளி, நெய்ப்பூவன் இரகங்களின் கட்டைகளை 0.1 சதம் கார்பண்டாசிம் கரைசலில் 5 நிமிடம் நனைக்க வேண்டும்.
* கன்றுகளை சேற்று கலவையில் கிழங்குகளை முக்கி கன்று ஒன்றுக்கு 40 கிராம் கார்போபியூரான் குருணை மருந்து தூவி நட வேண்டும்.
நடவு: வாழைக்கு 45X45X45 செ.மீ அளவுள்ள குழி எடுத்து, குழியின் மேல் மண்ணுடன் 10 கிலோ தொழுஉரம், 250 கிராம் வேப்பம்புண்ணாக்கு 50 கிராம் லிண்டேன் (1.3 சதம்) தூள் சேர்த்து நடவு செய்ய வேண்டும். அதிக பரப்பளவில் நடும்பொழுது நீள்வரிசையில் ஆழ உழுது தேவைப்படும் இடைவெளியில் கன்றுகளை நட வேண்டும்.
அடர் நடவுமுறை: வழக்கமான முறையில் 1.8 மீ X 1.8 மீ இடைவெளியில் வளர்க்கலாம். தற்போது அடர் நடவு முறை மூலம் உற்பத்தியை இருமடங்காக அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அடர் நடவு முறையில் ஒரு குழிக்கு 3 கன்றுகள் வைத்து நடவு செய்யும் போது 1.8 X 3.6 மீ என்றளவில் ஒரு எக்டருக்கு 4600 கன்றுகள் நடலாம். இந்த முறையில் ரொபஸ்டா, கிராண்ட் நைன் இரகங்களைப் பயிரிட்டு பயன்பெறலாம். இதேபோல் நேந்திரன் இரகத்திற்கு 2X3 மீட்டர் என்றளவில் இடைவெளியில் ஒரு எக்டருக்கு 5000 கன்றுகள் நடவு செய்யலாம்.
சொட்டுநீர் உரப்பாசனம்: நீர்வழி உரமிடுவதன் மூலம், பரிந்துரைக்கப்பட்ட உர அளவை (110:35:330) ஒரு மரத்திற்கு கிராம் என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை பயிரின் வளர்ச்சி நிலைக்கு ஏற்றவாறு பிரித்து அளிக்க வேண்டும்.
சாதாரண நடவு முறையில் ஒரு வாழைக்கு தேவைப்படும் உர அளவு 110:35:330 கிராம் தழை, மணி, சாம்பல்சத்து என்றளவில் அடர் நடவு முறையில் 3 வாழைக்கு சேர்த்து 247.5:78.75:742.5 கிராம் அளவில் சத்துக்கள் போதுமானது.
உயிரி உரம்: ஒரு வாழைக்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம், 20 கிராம் பாஸ்போ பாக்டீரியா, உயிர் உரங்களை கன்று நடும்போதும், 5 மாதம் கழித்தும் இட வேண்டும்.
ஊட்டச்சத்து மேலாண்மை: துத்தநாக சல்பேட் 0.5 சதம், தாமிர சல்பேட் 0.2 சதம் போரிக் ஆசிட் 0.1 சதம், கலந்த கலவையைக் கன்றுகளில் தெளிக்க வேண்டும். நடவு செய்த 3, 5வது மாதத்தில் தெளிக்க வேண்டும்.
வாழை குலைக்கு உறையிடுதல்: வாழைகுலைதள்ளி கடைசி சீப்பு வெளிவந்தவுடன் 100 காஜ் தடிமன் கொண்ட ஒளி ஊடுருவும். நீளமான வெண்ணிற பாலிதீன் உறையை 4.0 சதவீதம் துளையிட்டு குலையை மறைத்து கட்டி விடலாம். சமீப காலங்களில் பாலிப்ரோபலீனால் செய்த வாழைகுலை பைகளும் சந்தையில் கிடைக்கின்றன.
வளர்ச்சி ஊக்கிகள்: கடைசி சீப்பு வெளிவந்தவுடனும் குலைதள்ளிய 20 நாட்களுக்குப் பிறகும் பொட்டாசியம் சல்பேட் உரத்தை லிட்டருக்கு 10 கிராம் அளவு கரைத்து தெளித்தால் குலைகளில் உள்ள காய்களின் தரம் நன்றாக இருக்கும். அல்லது சைக்கோசைல் (CCC) வளர்ச்சி ஊக்கியை லிட்டருக்கு 1 கிராம் அளவில் (அ) ப்ளாண்டோசைம் மருந்தை லிட்டருக்கு 2 மிலி என அளவு கரைசலை 6,8 வது மாதத்தில் தெளிக்கலாம்.
பயிர் பாதுகாப்பு: நூற்புழு, தண்டு கூண்வண்டு வேர் துளைக்கும் நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு பனாமா வாடல் நோய், சிக்டோக்கா இலைப்புள்ளி நோய் ஆகியவற்றை பரிந்துரைக்கப்பட்ட முறைகளைப் பின்பற்றி கட்டுப்படுத்த வேண்டும். (தகவல்: முனைவர் க.சூரியநாத சுந்தரம், முனைவர் ஜே.அக்ஸிலியா, முனைவர் க.விநோத், பழவியல் துறை, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.ப. கழகம், கோயம்புத்தூர்-641003. போன்: 0422 - 661 269.
- டாக்டர் கு. சௌந்தரபாண்டியன்

