sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பம்

/

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : ஆக 20, 2014

Google News

PUBLISHED ON : ஆக 20, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டு கத்தரி தொழில்நுட்பம் : ஒட்டுக்கத்தரி என்பது கத்தரியின் இனச்செடியான சுண்டைக்காய் செடியை வேர்ச் செடியாகவும், நமக்கு தேவையான கத்தரி இனத்தை தேர்வு செய்து அதிலிருந்து இளம்தளிர் தண்டினை எடுத்து ஒட்டுச்செடியாகவும் வைத்து இணைப்பதே ஒட்டுக்கத்தரி என்பதாகும். சுண்டைக்காய் செடி அதிக ஆண்டுகள் வளரும் தன்மையைக் கொண்டது. பூச்சிகள், நோய்கள், நூற்புழுக்களின் தாக்குதலையும் தாங்கி வளரும் தன்மை உடையது. இளம்தளிர் ஒட்டுக்கன்றுகளை அதிக அளவு விளைச்சலை தரவல்ல செடிகளின் இரகங்களின் விதைகளை விதைத்து அதிலிருந்து இளம்தளிர் குச்சி தேர்வு செய்யப்படுகிறது.

வேர்ச்செடி தயாரிப்பு : சுண்டைக்காய் விதைகளை 4 சதம் பொட்டாசியம் நைட்ரேட் கரைசலில் 24 மணி நேரம் ஊறவைத்து பின்பு மேட்டுப்பாத்திகளில் விதைக்க வேண்டும். சுண்டைக்காய் விதையை விதைத்த நார்களிலிருந்து 10 நாட்களுக்கு பிறகு நாற்றங்காலில் விதைக்க வேண்டும். விதைத்த 25 நாட்களுக்கு இது ஒட்டுக்கட்டுவதற்கு ஏற்ற தடிமனுடன் இருக்கும்.

ஒட்டுக்கட்டுதல்: வேர்க்குச்சியும், இளம்தளிர் குச்சிகளும் நான்கு இலைகள் விட்ட நிலையில் வேர்ச்செடியின் மேல் பகுதியை 10 செ.மீ. உயரத்தில் கூர்மையான சுத்தமான கத்தியைக் கொண்டு நீக்கி விட்டு, நீளவாக்கில் ஒரு சிறு பிளவு ஏற்படுத்த வேண்டும். பின்னர் அதே பருமனுடன் இளந்தளிர் குச்சியின் வேரை நீக்கி விட்டு தண்டின் இலைகளை இரு நுனியிலைகள் மட்டும் விட்டு விட்டு இதர இலைகளை நீக்கி விட வேண்டும். பின் 'ஏ' வடிவத்தில் இருபுறமும் சீவி வேர்க்குச்சியின் பிளவுபட்ட பகுதியில் நுழைத்து பிளாஸ்டிக் இணைப்பான் கொண்டு இணைக்க வேண்டும். அல்லது ஒரு செ.மீ. அகலமான சிறு பாலிதீன் தாளைக் கொண்டு இறுக்கமாகச் சுற்றி கட்டி விட வேண்டும். பின்னர் ஒட்டுக் கட்டிய செடிகளை ஒரு சிறு பாலிதீன் உறையை கொண்டு நுனியை மூடி நிழல்வலைக் கூடத்தினுள் சுமார் 70-80 சதவிகிதம் ஈரப்பதம் இருக்குமாறு எட்டு நாட்கள் வைக்க வேண்டும். பிறகு உறையை எடுத்து விட்டு 10-15 நாட்கள் நிழல்வலைக்குடிலில் வைக்க வேண்டும். ஒட்டு இணைத்த பிறகு 10 நாட்கள் வெளிசூழலில் வைத்து ஒட்டு செடிகளை நடவு வயலில் நடலாம்.

நடவு செய்யப்படும் நிலத்தை 4-5 முறை நன்றாக உழ வேண்டும். கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் மக்கிய தொழுஉரமிட்டு நன்கு கலக்க வேண்டும். ஒட்டுகத்தரி செடிக்கு 200 கிலோ தழைச்சத்து, 200 கிலோ மணிச்சத்து, 100 கிலோ சாம்பல் சத்து தேவைப்படும். இதில் 50 சதவிகித தழைச்சத்தான 100 கிலோவையும், மணிச்சத்து, சாம்பல் சத்து முழுவதையும் அடி உரமாக இட வேண்டும். மேலும் நடவு வயலில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, நுண்ணுயிரியை எக்டருக்கு 2 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். சூடோமோனாஸ் புளுரசன்ஸ் அல்லது டிரோகோடோமோ விதையை எக்டருக்கு 25 கிலோ என்ற அளவில் 100 கிலோ தொழுஉரத்துடன் கலந்து இட வேண்டும்.

நடவு : தயார் செய்த நடவு வயலில் ஒரு மீட்டர் இடைவெளியில் ஒரு கனஅடி அளவுள்ள சிறு குழிகளை எடுக்க வேண்டும். நன்கு ஒட்டு பிடித்த ஒட்டு கத்தரிகளை இக்குழிகளில் வரிசையாக நட வேண்டும். ஒட்டுச்செடிகளை ஜூன் - ஜூலை, டிசம்பர் - ஜனவரி மாதங்களில் நடலாம்.

நீர்ப்பாசனம் : ஒட்டுச்செடியை நடவு செய்த உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் 7 - 10 நாட்களுக்கு ஒருமுறை நீர்பாய்ச்ச வேண்டும்.

மேலுரமிடுதல்: நட்ட ஒரு மாதம் கழித்து மீதமுள்ள தழைச்சத்தான 100 கிலோவை விட்டு மண்ணை அணைக்க வேண்டும்.

தாங்கு குச்சி : தோட்டத்தில் நட்ட பிறகு தாங்கு குச்சியை கொண்டு முட்டு கொடுக்க வேண்டும்.

போத்து செடி எடுத்தல்: ஒட்டுக் கட்டிய தலைச்செடியில் ஒட்டுப்பகுதியின் கீழே உள்ள சுண்டைக்காய் செடியிலிருந்து போத்துகள் முளைத்து வரும் அவற்றை ஒவ்வொரு 10 நாட்கள் இடைவெளியில் நீக்க வேண்டும்.

அறுவடை : நடவு செய்த 35 -40 நாட்களில் முதல் அறுவடை ஆரம் பிக்கும். காய்களை 3-4 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். ஒரு செடிக்கு சுமார் 10 கிலோ வரை ஆறு மாதங்களில் கிடைக்கும்.

(தகவல் - முனைவர்கள் தி.சரஸ்வதி, வே.அ.சத்தியமூர்த்தி, சி.தங்கமலை, த.சுமதி, அ.மகாலிங்கம், காய்கறி பயிர் கள் துறை, தோட்டங்கலை கல்லூரி, த.வே.ப.கழகம், கோயம்புத்தூர் -641 008. போன்: 661 1374, 661 1283).

- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்






      Dinamalar
      Follow us