தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : ஜன 12, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 12, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுமக்காச்சோளம்-கோ.பி.சி.-1: சின்ன மக்காச்சோளம் (பேபி கார்ன்) கோ.பி.சி.-1 1998ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் சாகுபடிக்காக வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் இதன் சாகுபடி பரப்பு மிகவும் குறைந்துள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இதற்கு தற்காலத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. இம்மாநிலங்களில் பதனிடும் தொழிற்கூடங்களும் ஏற்றுமதி வாய்ப்புகளும் பெருகியதாலும், உழவர்கள் மத்தியில் ஒரு சிறந்த உணவுப்பொருளாக வளர்ச்சி அடைந்துள்ளது. சிறு மக்காச்சோளம் உண்பதற்கு காய்கறி போன்று பயன்படும். செடிகளில் விதைத்த 50 நாளில் ஒவ்வொரு கணுவிலும் ஒரு கதிர் வீதம் 2-3 கதிர்கள் வரை உருவாகும். இச் செடியின் உச்சியில் தோன்றும் ஆண் பூக்கள் உடனடியாக நீக்குவதால் மகரந்த சேர்க்கை நடைபெறுவது தடுக்கப்பட்டு பெண் (சூலகக்) கதிர்கள் மட்டும் வளரத் தொடங்கும். இளங்கதிர்களின் சூழிலை (1-3 செ.மீ.) தெரிந்த உடனே அறுவடை செய்து, மேலுறையை நீக்கி, பச்சையாகச் சாப்பிடவும், பல உணவு வகைகளை தயார் செய்யவும் பயன்படுத்தலாம். இளங் கதிர்கள் அறுவடை விதைத்த 50 முதல் 65 நாட்களுக்குள் முடிவதால் இதனுடைய பச்சைத்தட்டு ஒரு சிறந்த தீவனமாக பயன்படுகிறது. இளங்கதிர்களில் அதிக மாவுச்சத்து (7.1 சதம்), இனிப்புடன் கூடிய நல்ல சுவை (இனிப்புச்சத்து 1.3 சதம்) மற்றும் காய்கறிகளுடன் ஒப்பிடும் அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் மிகுந்தது. இந்த ரகத்தில் விதை உற்பத்தி செய்ய வேண்டுமானால் ஆண் பூக்களைச் செடியிலிருந்து நீக்கக் கூடாது. மணிகள் முற்றி முழுவதும் விதைகள் ஆவதற்கு குறைந்தது 105 நாட்கள் ஆகும். இவ்வகை கதிர்களின் மணிகள் நேர் வரிசையுடன் சிறிய மஞ்சள் நிறத்தை உடையவை.

கோபி.சி.1 ரகத்தின் சாகுபடி நுட்பங்கள்: ஆண்டு முழுவதும் இறவைப் பயிராக பயிரிடலாம். மானாவாரியில் ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை), மாசிப்பட்டம் (செப்டம்பர் - அக்டோபர்) உகந்தது. இளங்கதிர் 50-65 நாட்கள், பச்சைத்தட்டு 65-70 நாட்கள், விதை 100-105 நாட்கள் வயதுடையது. விதையளவு எக்டருக்கு 25 கிலோ தேவை. இடைவெளி - பாருக்கு பார் ஒன்றரை அடி (45 செ.மீ.) செடிக்குடிச் செடி10 அங்குலம் (25 செ.மீ.) கொடுத்து விதைக்க வேண்டும். உர அளவு - 150:60:40 கிலோ/எக்டர் (தழை, மணி சாம்பல்சத்து). அடி உரம்-எக்டருக்கு தொழு உரம் 125 டன்; யூரியா 125 கிலோ, சூப்பர் 375 கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஷ் 33 கிலோ. மேலுரம் - விதைத்த 25ம் நாள் எக்டருக்கு யூரியா 165 கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஷ் 33 கிலோ.

நீர்பாசனம்: விதைத்தவுடன் மற்றும் 4ம் நாள் 15, 25, 35, 45, 55ம் நாட்களில் நீர் பாய்ச்ச வேண்டும்.

களை நிர்வாகம்: விதைத்த 15ம் நாள் முதல் களை எடுக்க வேண்டும். 25ம் நாள் பார்களை மாற்றி மண் அணைக்க வேண் டும். 40-45 நாட்களில் ஆண் பூக்களை நீக்குதல் (பெண் பூக்களின் குஞ்சம் வெளிவந்தவுடன்) கிளைக் கதிர்களின் அறுவடை எண்ணிக்கை: 6-7 தடவை.

பயிர் பாதுகாப்பு: விதைக்கும்போது பியூரடான் 3ஜி குருணைகள் எக்டருக்கு 10 கிலோ வீதம் இடவேண்டும். நீர்பிடிப்பு பகுதிகளில் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் ஏற்றது.

மகசூல்: இளங்கதிர்கள் - 6660 கிலோ/எக்டர். பச்சைத்தட்டு 32.2 டன்/எக்டர். இளங்கதிராக அறுவடைöசெய்யாமல் விதைக்கு மட்டும் சாகுபடி செய்தால் 2000 கிலோ விதை/எக்டர் கிடைக்கும்.

தாய்லாந்து, தைவான், தென் அமெரிக்கா, ஜாம்பியா, ஜிம்பாப்வே, சைனா, நேபாளம், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யப்படுகிறது. இளங்கதிர்கள், பதனிடப்பட்ட சிறு மக்காச்சோள கதிர்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் - தாய்லாந்து, தைவான், தென் அமெரிக்கா, ஜாம்பியா, ஜிம்பாப்வே, சைனா. இறக்குமதி செய்யும் நாடுகள் - அமெரிக்கா, ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, இந்தோனேசியா, கனடா, சவுதி, நியூசிலாந்து மற்றும் பல நாடுகள்.

(தகவல்: கோ.நல்லதம்பி, க.ந.கணேசன், பெ.வீரபத்திரன், சிறுதானிய மேம்பாடு நிலையம், பயிர்பெருக்க மற்றும் மரபியல் மையம், கோயம்புத்தூர்-641 003).



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us