sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பம்

/

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : பிப் 22, 2012

Google News

PUBLISHED ON : பிப் 22, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈமு கோழிமுட்டை - பிரச்சனைகள் - தீர்வுகள்: பெண் ஈமு கோழி 18 முதல் 26 மாத வயதிலிருந்து முட்டையிட தொடங்கும். கரும்பச்சை நிறமான முட்டை யின் எடை 450 கிராம் முதல் 650 கிராம் வரை இருக்கும். முதல் வருடத்தில் 10-15 முட்டைகளும் இரண்டாவது வருடத்தில் 15-20 முட்டைகளும் பின்னர் சுமார் 25-40 முட்டைகளும் இடும். ஒரு ஆண்டில் 40-50 முட்டைகள் வரை கூட இடும். முட்டையிடும் கோழிகளுக்கு வழக்கமாக அளிக்கப்படும் இனவிருத்தி தீவனத்துடன் சில தாது மற்றும் உயிரிச்சத்துகளையும் தொடர்ந்து அளிக்க வேண்டும். கால்சியம் தாது சத்தினை தொடர்ந்து அளித்துவரவேண்டும். முட்டையிடும் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் சமச்சீர் தன்மை பாதிக்கப்படும்போது பல்வேறு பிரச்னைகள் உருவாகும்.

தோல் முட்டையிடுதல்: பொதுவாக முட்டையிடும் பருவத்தில் 2-3 தோல் முட்டைகள் இடும். கவலைப்படத் தேவை இல்லை. இந்த முட்டையில்இருந்து எந்த ஒரு பிரச்னையும் இன்றி நல்ல தரமான ஈமுக் குஞ்சுகளைப் பெறமுடியும். இந்த தருணத்தில் கால்சியம் தாதுச்சத்தினை சுண்ணாம்புக்கல், கிளிஞ்சல் துகள்களாக கொடுக்கலாம். சில சமயங்களில் முட்டைக்குழல் வீங்குதல், உணவுப் பாதையில் உள்ள பிரச்னைகள் காரணமாகவும் கால்சியம் சத்து பற்றாக்குறை ஏற்பட்டு தோல் முட்டைகள் உருவாகும்.

கருவற்ற முட்டை: ஆண் கோழிகளுடன் இனச்சேர்க்கை செய்ய வேண்டும். அல்லது செயற்கை முறையில் பெண் கோழிகளுக்கு கருவூட்டம் செய்ய வேண்டும். இனச்சேர்க்கை நன்கு நடந்தபிறகும் தொடர்ந்து கருவற்ற முட்டைகள் இடும் போது ஆண் கோழிகளின் விந்தினை பரிசோதனை செய்து குறைபாடுகளை அறியவேண்டும். ஆண் கோழிகளின் தீவனத்தில் கால்சியம் சத்து அதிகமாக இருக்கும்போதுகூட கருவற்ற முட்டைகள் உருவாகும். எனவே ஆண் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் கால்சியம் தாது சத்து அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முட்டை அடைப்பு: ஈமுக் கோழிகள் சில சமயம் முட்டை இட முடியாமல் சிரமப் படும். காரணம் முட்டைக்கரு வெளிவரும் குழாயில் அடைப்பு ஏற்படுவது. இவ்வாறான கோழிகள் அடிக்கடி உட்கார்ந்து எழுந்து நிற்பதோடு முட்டையிடுவதற்கு தொடர்ந்து முயற்சிக்கும். தீவனம் உட்கொள்ளாது. பதட்டத்துடன் காணப்படும். முட்டை அடைப்பு பொதுவாக குளிர்காலத்தில் ஏற்படும். எனவே முட்டை அடைப்பு ஏற்பட்ட கோழிகளை கதகதப்பான வெப்பமுள்ள இடத்தில் வைத்து முட்டையிடச் செய்ய வேண்டும். வழவழப்பான எண்ணெயினை ஆள்காட்டி விரலில் நனைத்து ஆசனவாய் துவாரம் வழியாக செலுத்தி தேய்த்துவிடுவதன் மூலம் ஈமுக் கோழிகளில் ஏற்படும் முட்டை அடைப்பினை சரிசெய்ய முடியும்.

ஈமுக்கோழிகள் முட்டையிடும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களில் மேற்கண்ட பிரச்னைகள் பொதுவாக காணப்படும். எனவே ஈமுக்கோழிப் பண்ணையாளர்கள் அந்த மாதங்களில் ஈமுப்பண்ணைகளில் தீவிர கண்காணிப்பினை மேற்கொண்டு ஈமுக்கோழிகள் முட்டை யிடுவதில் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிந்து உடனே சரிசெய்து கொள்ள வேண்டும்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தற்போது ஈமுக்கோழிகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோயம் புத்தூர், கரூர், திண்டுக்கல் உட்பட ஒருசில இடங்களில் ஆங்காங்கே ஈமுக்கோழிகள் பரவலாகப் பண்ணை முறையில் வளர்க்கப்படுகின்றன. தோராயமாக தமிழகத்தில் உள்ள மொத்த ஈமுக்கோழிகளின் எண்ணிக்கை 35,000 முதல் 50,000 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. (தகவல் மு.அண்ணா ஆனந்த் மற்றும் பி.என்.ரிச்சர்டு ஜெகதீசன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மண்டல ஆராய்ச்சி மையம், புதுக்கோட்டை-622 004)

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us