/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கொய்மலர் சாகுபடியில் நூற்புழு மேலாண்மை
/
கொய்மலர் சாகுபடியில் நூற்புழு மேலாண்மை
PUBLISHED ON : ஆக 07, 2013
மலைப்பகுதிகளில் பயிரிடப்படும் கொய்மலர்களில் ரோஜா, கார்னேசன் மற்றும் ஜெர்பரா மிக முக்கிய பயிராகும். வியாபார ரீதியில் முக்கியத்துவம் உள்ள இக்கொய்மலர்களின் வளர்ச்சி, மொட்டின் அளவு மற்றும் மகசூலுக்கு பயிர் பாதுகாப்பின் பங்கு மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக நூற்புழுக்களின் தாக்குதல் பயிரில் சேதத்தை ஏற்படுத்துவதுடன் வருவாய் இழப்பும் அதிகப்படுத்துகிறது.
ரோஜா: குளிர் பிரதேசங்களில் பயிரிடப்படும் கொய் மலர்களில் ரோஜா மிக முக்கிய பயிராகும். இம்மலர்களில் வேர் அழுகல், வேர்முடிச்சு, ஈட்டி வடிவ நூற்புழு, வளைய நூற்புழு மற்றும் குட்டை நூற்புழுக்கள் தாக்கி 8 முதல் 11 சத மகசூல் இழப்பினை ஏற்படுத்துகிறது.
நூற்புழு தாக்குதலின் அறிகுறிகள்: 1. நூற்புழுக்களினால் தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் வெளிர் மஞ்சள் நிறமடைந்து செடி வளர்ச்சி குன்றி ஆங்காங்கே வயலில் திட்டு திட்டாகக் காணப்படும். 2. நூற்புழுக்கள் தாக்கப்பட்ட பயிர்களின் வேர் பகுதிகளில் கருமை அல்லது சிவப்பு நிற புள்ளிகள், கீறல்கள் மற்றும் வேர்முடிச்சுகள் காணப்படும். 3. இம்முடிச்சுகள் நீர் மற்றும் சத்துப் பொருட்களின் ஓட்டத்தை தடுத்து பயிர்களின் வளர்ச்சியை தடுக்கிறது. 4. பக்கவாட்டு வேர்கள் எல்லாம் பட்டுப்போய், வேர்களின் வளர்ச்சி குறைந்து செடியின் வளர்ச்சி குன்றிவிடும்.
கார்னேசன் மற்றும் ஜெர்பரா: கொய்மலர்களான கார்னேசன் மற்றும் ஜெர்பரா சாகுபடியில் பலவகையான நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல் இருந்தாலும் வேர்முடிச்சு நூற்புழு, வளைய நூற் புழு மற்றும் குட்டை நூற்புழு என்ற நூற்புழுக்கள் வேரினை தாக்கி 15-20 சத மகசூல் இழப்பினை ஏற்படுத்துகிறது.
அறிகுறிகள்:
* நூற்புழுக்களின் தாக்குதலால் ஆங்காங்கே திட்டு திட்டாக பயிர்கள் வளர்ச்சி குறைபாடுகளுடன் காணப்படும்.
* செடிகளின் வளர்ச்சி குன்றி இலைகள் சிறுத்து காணப்படும். பூ காம்புகளின் நீளம் குறைந்து காணப் படுவதோடு அல்லாமல் பூக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும்.
* வேர்முடிச்சு நூற்புழு தாக்கப்பட்ட செடிகளில் வேர்பகுதிகள் முடிச்சு முடிச்சாக காணப்படும். இம் முடிச்சுகளில் வளர்ந்த நூற் புழுக்கள் மற்றும் இளம் நூற்புழுக்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படும்.
* நூற்புழுக்கள் வேர்களை சேதப்படுத்தி முடிச்சுகள் ஏற்படுத்தி அதில் வளர்ந்து வருவதால் சத்துப்பொருட்கள் மற்றும் நீரினை கடத்தும் திறன் குறைந்து செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும்.
* இச்செடிகளில் உண்டாகும் பூக்களின் பூ இதழ்களின் அமைப்பு, தோற்றம் மற்றும் வண்ணங்கள் சிதைந்து காணப்படும். இதனால் பூக்களின் தரம் குறைந்துவிடும்.
ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்:
* நூற்புழுக்களை அழிக்க பார்மலின் என்ற மருந்து கரைசலை (1 லிட்டர் நீருக்கு 12 மிலி) தெளித்து பின் பாலிதீன் விரிப்புகளை கொண்டு 15 நாட்கள் மூடிவைத்து பிறகு நடவுசெய்யலாம். இதனால் பார்மலின் வாயுவாக மாறி மண்ணிலுள்ள நூற்புழுக்களை அழித்துவிடுகிறது.
* வேர் உட்பூசணம் எனப்படும் (வேம்) பூஞ்சாணத்தை 1 சதுர மீட்டருக்கு 500 கிராம் என்ற அளவில் மலர்களின் நாற்று நடவு செய்வதற்கு 15 நாட்கள் முன் மண்ணில் இடவேண் டும் அல்லது டிரைகோடெர்மா, பேசிலோமைசிஸ் என்ற உயிர்கொல்லிகளை ஒரு சதுர மீட்டருக்கு 50 கிராம் என்ற அளவில் மண்ணில் இடவேண்டும்.
* நடவின்போதும் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்னும் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பாக்டீரியா கலவையை ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் தொழு எரு (அல்லது) மண்புழு எருவுடன் கலந்து மண்ணில் இடவேண்டும். இவ்வாறு செய்வதால் நூற்புழுக்களை கட்டுப்படுத்துவதுடன் செடிகளின் வளர்ச்சி மற்றும் மலர்கள் தரமும் அதிகரிக்கிறது.
* இந்நூற்புழுக்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும்போது ஒரு ஏக்கருக்கு 12 கிலோ என்ற அளவில் கார்போபியூரான் 3 சத குருணை மருந்தை மண்ணில் இட்டு நீர் பாய்ச்சுவதன் மூலம் நூற்புழுக்க ளின் செயல்பாடு மற்றும் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி அதிக மகசூலை பெறலாம்.
முனைவர் பா.வெற்றிவேல்
கொடைக்கானல்-624 103.

