வாழை சாகுபடியாளர்களின் கவனத்திற்கு...
உங்கள் வாழையில் பனாமா வாடல் நோய் ஏற்பட்டுள்ளதா என்று கண்காணியுங்கள். தாக்கப்பட்ட மரங்களின் அடி இலைகள் திடீரென முழுவதும் பழுத்து, தண்டுடன் சேரும் இடத்தில் சுற்றிலுமாக ஒடிந்து, மடிந்து வாழைத் தண்டைச் சுற்றிலும் துணி கட்டியதுபோல் காட்சியளிக்கும். பின் தண்டின் அடிப்பாகத்தில் மண்ணிலிருந்து மேல்நோக்கி நீள வாக்கில் வெடிப்பு ஏற்படும். கிழங்கினைக் குறுக்கே வெட்டிப்பார்த்தால், செம்பழுப்பு நிறத்தில் வட்ட வட்டமாக இப்பூஞ்சாணம் தாக்கி அழிந்துள்ள பகுதிகளைக் காணலாம்.
செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், விருப்பாட்சி மற்றும் பல உள்ளூர் ரகங்களை இந்நோய் தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றது. நூற்புழு பாதிப்பு இருக்கும் தோட்டத்தில் வாடல் நோயின் அறிகுறிகள் அதிக அள வில் காணப்படுகின்றன.
வாடல் நோயின் வித்துக் கள் மண்ணில் பல ஆண்டுகள் உயிருடன் இருக்கும் தன்மையுடையது. பூஞ்சாண வித்துக்கள் முளைத்து பக்க வேர்கள் மூலமாக கிழங்குப் பகுதியைத் தாக்கும். நோய் தாக்கிய கிழங்குகள் மூலமாகவும், பாசன நீர் மூலமாகவும் இந்நோய் ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்குப் பரவுகிறது.
மேலாண்மை முறைகள்: வாடல் நோய் அதிக அளவில் காணப்படும் நிலங்களில் இந்நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட பூவன் (கதலி), ரொபஸ்டா, கை போன்ற வாழை ரகங்களைப் பயிரிடலாம். வாழைக் கன்றுகளை நோய் தாக்காத தோட்டங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். விதைக்கிழங்குகளைப் பரிசோதித்து செந்நிறப் பகுதிகள் இல்லாதவற்றை தேர்வு செய்ய வேண்டும். கிழங்குகளை நடுவதற்கு முன் களிமண் குழம்பில் நனைத்த கிழங்கின் மீது பத்து கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற உயிரியல் பூசணக்கொல்லியினைச் சீராகத் தூவ வேண்டும்.
வாழை வாடல் நோய் தடுக்க...
ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளூரசன்ஸ் 20 கிலோ உலர்ந்த சாண எரு அல்லது மணலுடன் கலந்து ஒவ்வொரு வாழைக்கும் தூர்ப் பகுதியைச் சுற்றிலும் இடவேண்டும். காப்சூல் எனப்படும் மாத்திரை குப்பிகளில் 50 மில்லி கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் நிரப்பி நட்ட ஐந்தாம் மற்றும் ஏழாம் மாதங்களில் கிழங்கினுள் செலுத்த வேண்டும். வாழைக்கிழங்கில் 45 டிகிரி சாய்வாக 10 செ.மீ. ஆழ துளையிட்டு உள்ளே செலுத்த வேண்டும். வாழைத்தண்டில் செலுத்தினால் பயன் இல்லை. குப்பியினைச் செலுத்தியபின் களிமண் உருண்டை கொண்டு துளை வாயிலை மூடிவிடவும்.
மாத்திரை குப்பி வைப்பதை தக்க ஆலோசனை பெற்று வைக்க வேண்டும். நோய் தாக்கிய மரங்களை கிழங்கோடு பிடுங்கி அழித்துவிட வேண்டும். அக்குழியில் போதிய அளவு சுண்ணாம்பு (குழிக்கு 1-2 கிலோ) இடவேண்டும்.
முனைவர்
எஸ்.ஜெயராஜன் நெல்சன்,
ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.

