PUBLISHED ON : அக் 27, 2010
நெய்வேலி காட்டாமணக்கு (ஐப்போமியா கார்னியா) களைச்செடி ''தென் அமெரிக்கா'' நாட்டிலிருந்து இந்தியாவிற்கு சுமார் 50 வருடங்களுக்கு முன் அலங்காரத்திற்கும், வேலி தடுப்பானாகவும் மற்றும் பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்துவதற்கு அறிமுகப் படுத்தப்பட்டது. இது ஒரு நிரந்தரச் செடி வகையைச் சார்ந்தது. சுமார் 2.3 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் தண்டுகள் பாய்போல் நிலத்தின்மேல் பின்னிப் பிணைந்து படரும் தன்மையும் கொண்டது. தண்டின் கணுக்கள் நிலத்தில் படும்போது அதிலிருந்து வேர்கள் தோன்றி பிறகு கணுவிலிருந்து புதிய தண்டுகள் செங்குத்தாக மேல்நோக்கி வளர ஆரம்பிக்கின்றன.
இந்த செடி நீர்ப்பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களில் நீரின் சீரான போக்கைத் தடுக்கிறது. ஏராளமான நீர் ஆவியாகி வீணாகிறது. இச்செடியின் வளர்ச்சியினால் குளம் மற்றும் குட்டை போன்ற நீர்நிலைகளில் பிராணவாயு சேர்க்கை தடுக்கப்பட்டு மீன்வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.
ரசாயன முறை: களைக்கொல்லி மூலம் இச்செடியை கட்டுப்படுத்துவது மிகவும் சிறந்தது மற்றும் சிக்கனமானது. நெய்வேலி காட்டாமணக்கு செடியை கோடைகாலத்தில் 0.2 சத 2, 4-டி சோடியம் உப்பு (ஒரு லிட்டர் நீரில் 2 கிராம் மருந்து) என்ற அளவில் தெளித்து நல்ல முறையில் கட்டுப்படுத்தலாம். இம்மருந்துடன் ஒரு லிட்டர் நீருக்கு யூரியா (10 கிராம்) மற்றும் சோப்பு திரவத்தை (ஒரு மில்லி) கலந்து தெளிப்பதால் மருந்து இலைப்பரப்பில் அதிக காலம் தங்கி இருந்து விரைவாகவும் அதிக அளவிலும் உட்கிரகிக்க உதவுகிறது. இதனால் செடி வேருடன் அழிக்கப்படுகிறது. இம்மருந்து கரைசலை செடியின் இலைப்பாகம் மற்றும் தண்டுப்பாகம் நன்கு நனையும்படி மேலும் கீழும் கைத்தெளிப்பான் கொண்டு இலை நுனியிலிருந்து ஒரு சொட்டு மருந்து கீழே விழும்வரை நிதானமாகத் தெளிக்க வேண்டும். இம்முறையில் தெளிப்பதற்கு செடியின் அடர்த்தி மற்றும் உயரத்தைப் பொறுத்து ஒரு எக்டர் பரப்பளவிற்கு சுமார் 1000 முதல் 3000 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. அடர்த்தியாகவும், உயரமாகவும் உள்ள செடிகளில் மருந்து தெளிக்கும்போது ஓரிரு செடிகள் மீது படாமல் இருக்க வாய்ப்புண்டு. அவ்வாறு மருந்து படாமல் தவறிய செடிகளில் வாட்டம் இல்லாமல் இருப்பதை மருந்து தெளித்த ஓரிரு நாட்களில் கண்டுகொள்ளலாம். இவ்வாறு விடுபட்ட இச்செடிகளின்மீது மீண்டும் களைக்கொல்லி கரைசலைத் தெளிக்க வேண்டும்.
களைக்கொல்லி தெளித்த பிறகு செடியில் காணப்படும் மாற்றங்கள்: களைக்கொல்லி கரைசல் அடித்தபின்பு நெய்வேலி காட்டாமணக்கு செடியானது அடுத்த 3-4 மணி நேரத்திலேயே வாட ஆரம்பிக்கும். மூன்றாம் நாள் அடிப்பாக இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும். நான்காம் நாள் முதல் செடியின் நுனியில் இருந்து தண்டு கருக ஆரம்பித்து 21ம் நாள் செடி முழுவதும் காய்ந்து உலர்ந்துவிடும். இதைப்பிடுங்கி எரித்துவிட வேண்டும். மருந்தின் நச்சுத்தன்மையும் சுற்றுப்பற சூழ்நிலை பாதிப்பும்: இம்மருந்தின் நச்சுத்தன்மை மிகவும் குறைவு. நீரில் இம்மருந்தானது அதிவிரைவில் சிதைந்துவிடுகிறது. மேலும் இம்மருந்தைப் பரிந்துரைக்கப்பட்ட 0.2 சதவீத அடர்த்தியில் 2, 4-டி சோடியம் உப்பைத் தெளித்தலால் அதன் எஞ்சிய மருந்துகள் நிலத்தில் முதல் 10-20 நாட்கள்தான் காணப்படும். அதன்பிறகு, கோடைக்காலத்தில் நிலவும் வறட்சி மற்றும் அதிக வெப்பநிலை மற்றும் சூரிய வெளிச்சத்திலும் மருந்தின் வீரியம் சிதைந்து போய்விடுகிறது. நெய்வேலி காட்டாமணக்கு செடியை 2, 4-டி சோடியம் உப்புக்கரைசலை 0.2 சத அடர்த்தியில் கோடைகாலத்தில் தெளித்து அழிப்பதால் சுற்றுப்புற சூழ்நிலைக்கு எவ்வித மாசுபாடும் ஏற்படாது என்பது தெளிவு.
ரா.பாலசுப்பிரமணியன்,
நீ.மலர்க்கொடி, செ.நந்தகுமார்,
பெ.ஆனந்தகுமார், சு.திருமலைக்குமார்,
உழவியல் துறை,
வேளாண்மைக்கல்லூரி மற்றும்
ஆராய்ச்சி நிலையம், மதுரை.
