தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/பயிர்களின் இயற்கை பிரம்மாஸ்திரம்

பயிர்களின் இயற்கை பிரம்மாஸ்திரம்

பயிர்களின் இயற்கை பிரம்மாஸ்திரம்


PUBLISHED ON : டிச 06, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 06, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயற்கை வேளாண்மையில் பயிர் பாதுகாப்பு இயற்கை விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்தான். பஞ்சகாவ்யா, அக்னி அஸ்திரம், மூலிகை பூச்சிவிரட்டியை விவசாயிகள் தாங்களே தயாரித்தால் இயற்கை சாகுபடியில் செலவு குறையும்.

பஞ்சகாவ்யா தயாரிப்பு

பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடிய உரம். இதைக்கொண்டு பயிர்களையும், மண்ணின் தன்மையையும் மேம்படுத்தலாம்.

பசுவின் புதிய சாணம் 7 கிலோ, கோமியம் 10 லிட்டர், நெய் 1 கிலோ எடுத்து மூன்றையும் பாத்திரத்தில் எடுத்து 3 நாட்களுக்கு அடிக்கடி கலக்கிவிட வேண்டும். நான்காம் நாள் இந்தக் கலவையுடன் தயிர் 2 லிட்டர், பால் 3 லிட்டர், கரும்புச்சாறு அல்லது வெல்லம் 3 கிலோ, இளநீர் 3 லிட்டர், பழுத்த 12 பூவன் வாழைப்பழங்களை சேர்க்க வேண்டும். இதை 4 நாட்கள் வரை கலக்கிவிட்ட பின் 15 நாட்கள் வைத்திருந்து 19ம் நாள் எடுத்து பயிர்களில் தெளிக்கலாம்.

முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்சகாவ்யத்தில் பயிர் வளர்ச்சி, நோய் எதிர்ப்புக்கும் தேவையான நுண்ணுயிர்கள், பேரூட்ட, நுண்ணுாட்டச்சத்துக்கள், வளர்ச்சி ஊக்கிகள் அனைத்தும் உள்ளன.

பயன்படுத்தும் முறை

300 மில்லி கலவையை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து விசைத் தெளிப்பான், கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை தெளிக்கலாம். ஏக்கருக்கு 3 லிட்டர் கலவை தேவைப்படும். கரைசலை கைத்தெளிப்பானில் வடிகட்டியும், விசைத்தெளிப்பானில் வால்வு, குழாயின் நுனிப்பகுதியை பெரிதாக்கி பயன்படுத்த வேண்டும்.

மூலிகை பூச்சி விரட்டி

வேம்பு, எருக்கு, கொளிஞ்சி, நொச்சி, ஊமத்தை, காட்டாமணக்கு, ஆடாதோடா, புங்கன் இலைகளை சிறு துண்டுகளாக நறுக்கி தாவர வடிசல் தயாரிக்க வேண்டும். இந்த இலைகள் ஒரு பங்கு, கோமியம் ஒரு பங்கு என்ற விகிதத்தில் கலந்து 10 நாட்களுக்கு மூடி வைக்க வேண்டும். 5 லிட்டர் பஞ்சகாவ்யாவுடன் ஒரு லிட்டர் தாவர வடிசல் சாறை வடிகட்டி சேர்த்து 25 நாட்களுக்கு குலுக்கி வைக்க வேண்டும். கரைசலை வடிகட்டி 3 சதவீத தழை தெளிப்பானாக பயன்படுத்தலாம்.

செடியை நடவு செய்வதற்கு முன் 3 சதவீத கரைசலில் விதைகள் அல்லது நாற்றுகளின் வேர்களை 20 நிமிடங்கள் மூழ்க வைத்தால் விதை வளர்ச்சி, வேர் உருவாகுதல் அதிகமாக இருக்கும்.

அனைத்து காய்கறிகள் மற்றும் தோட்டப்பயிர்களுக்கும் வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும். செடியின் வளர்ச்சி, மகசூல், பயிரின் தரம் அதிகமாகும். அசுவினி, செடிப்பேன், சிலந்தி, இதர உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும். இலைப்புள்ளி, இலைக்கருகல், சாம்பல் நோயை கட்டுப்படுத்தும்.

அக்னி அஸ்திரம்

பயிர்களை தாக்கும் பூச்சி, புழுக்களை அழிப்பது அக்னி அஸ்திரம். வேப்பிலை 5 கிலோ, பச்சைமிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, கோமியம் 10 லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும். பூண்டு, பச்சைமிளகாயை விழுதாக அரைத்து வேப்பிலை, கோமியத்தில் கலந்து கொதிக்க விட வேண்டும். 10 நிமிடங்கள் அதே கொதி நிலையில் வைத்து தணலை முழுவதும் குறைத்து அரை மணி நேரம் வைக்க வேண்டும். மீண்டும் தணலை அதிகரித்து என 4 முறை இப்படி செய்ய வேண்டும். பாத்திரத்தின் வாயை துணியால் கட்டி நிழலில் 48 மணி நேரம் வைக்க வேண்டும்.

இரண்டு நாட்கள் கழித்து

துணியில் வடிகட்டி கைபடாமல் கண்ணாடி குடுவையில் சேமித்தால் 3 மாதங்கள் வரை பாதுகாக்கலாம். பத்து லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி கலந்து பூக்கும் பருவத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெளிக்க வேண்டும். தண்டு துளைப்பான், காய்ப்புழு பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்கும். அதிக பனி, அதிக வெயிலின் போது பயிர்களை தாக்கும் கொள்ளை நோய்களை கட்டுப்படுத்துகிறது.

பிரம்மாஸ்திரம்

நொச்சி இலை 10 கிலோ, வேப்ப இலை 3 கிலோ, புளிய இலை 2 கிலோ எடுத்து மண்பானையில் 10 லிட்டர் கோமியத்துடன் கலந்து வைத்தால் பிரம்மாஸ்திரம் தயாராகி விடும். 100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம், 3 லிட்டர் கோமியம் கலந்து ஏக்கருக்கு மாதம் 2 அல்லது 3 முறை தெளிக்கலாம். அசுவினி, பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்தும். எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

நீமாஸ்திரம்

வேப்பிலை, சீத்தாப்பழம், ஆமணக்கு, ஊமத்தை இலைகள் ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து சிறிதாக நறுக்க வேண்டும். அனைத்தையும் பிளாஸ்டிக் அல்லது சிமென்ட் ஜாடியில் சேர்த்து கோமியம் கலந்து குச்சியால் கிளறி விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

நிழல் வலை அல்லது சணல் சாக்கால் மூடி வைத்து நேரடியாக சூரியஒளி, மழைநீர் படாத வகையில் நிழலில் வைக்க வேண்டும். தினமும் இரண்டு முறை வீதம் இரண்டு நாட்களுக்கு முறை கிளறி விட்ட பின் வடிகட்டி கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் 6 மாதங்கள் வரை சேமிக்கலாம்.

ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீருடன் 6 முதல் 8 லிட்டர் நீமாஸ்திரா கலவையை ஸ்பிரே மூலம் பயிர்கள் மீது தெளிக்க வேண்டும். இது இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தாக பயன்படும்.

- சிங்காரலீனா

உதவி இயக்குநர்

- கண்ணன்

விதைச்சான்று அலுவலர்

- சந்தீப் சவுத்ரி

அங்ககச்சான்று ஆய்வாளர்

விதைச்சான்று மற்றும்

அங்ககச்சான்று அலுவலகம் மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us