/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பெரியார், வைகை பாசன திட்டத்தின்கீழ் நெல் சாகுபடி
/
பெரியார், வைகை பாசன திட்டத்தின்கீழ் நெல் சாகுபடி
PUBLISHED ON : ஜூலை 06, 2011

பெரியார், வைகை பாசனத் திட்டத்தின்கீழ் மதுரை, தேனி மாவட்ட விவசாயிகள் பயனடைய நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 45,500 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்ய நாற்றங்கால் தயார் செய்கிறார்கள். நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரையும், கிணற்றில் உள்ள தண்ணீரையும் உபயோகித்து விவசாயிகள் பயிர்செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள். விவசாயிகள் எடீடி 36, எடீடி 43, எடீடி 45 மற்றும் ஜே13 போன்ற நெல் ரகங்களை சாகுபடி செய்ய இருக்கிறார்கள். இதுசமயம் விவசாய இலாகா அதிகாரிகள் ஆடுதுறை36, அம்பை 16 போன்ற குறுகிய கால நெல் ரகங்களை சாகுபடி செய்ய சிபாரிசு செய்து வருகின்றனர். தேவைப்படும் நெல் விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் இவைகளை கிழக்கு விரிவாக்க அலுவலகம், ஒத்தக்கடை, கருப்பா யூரணி துணை அலுவலகங்களில் போதுமான அளவு இருப்பு வைத்து வினியோகம் செய்து வருகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நெல் உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க 'திருந்திய நெல் சாகுபடி முறையை' அனுசரித்து சாகுபடி செய்ய பிரசாரம் செய்து வருகின் றனர். இந்த முறையின் சிறப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
* ஏக்கருக்கு விதை அளவு 3 கிலோதான். சாதாரண முறை சாகுபடிக்கு தேவைப்படுவது 25 கிலோ.
* நாற்றங்கால் செலவு, நாற்று பறிக்கும் செலவு, நடவிற்கு செலவு புதிய முறையில் குறைவு.
* பயிர் வளர்ந்த மேல் களையெடுக்க செய்யும் செலவு குறைவு. ஏனெனில் கோனோவீடர் உபயோகம் நன்மை செய்கின்றது.
* கோனோவீடர் செயல்படும் போது மண்ணில் காற்று கலந்து மண் புரட்டி விடப்படுவதால் நுண்ணுயிர்களின் பணி ஊக்குவிக்கப்படுவதோடு ஊட்டச் சத்துக்கள் பயிருக்கு எளிதாகக் கிடைக்கிறது. இதனால் வேர் வளர்ச்சி சிறப்பாக வளர்ந்து பயிர் செழிப்பான வளர்ச்சியை அடைகின்றது. சாதாரணமாக ஆட்கள் களையெடுக்கும்போது இத்தகைய நன்மைகள் ஏற்படுவதில்லை.
* சாகுபடி சமயம் புதிய முறை சாகுபடியில் பாசன நீர் 30-40 சதவீதம் குறைவதோடு மின்சார உபயோகம் மற்றும் ஆட்கள் செலவு குறைவு.
* புதிய முறை சாகுபடியில் பயிர் கீழே சாய்வதில்லை. எலித்தொல்லை கிடையாது.
* சாதாரண முறையில் ஏக்கரில் 30 மூடை (மூடை 60 கிலோ) மகசூல் கிட்டும். புதிய முறையில் 45 மூடைகள் வரை மகசூல் கிட்டும். தானிய மகசூலோடு வைக்கோல் மகசூலும் கூடுதலாக கிட்டுகின்றது.
* தற்போது அம்பை-16 நெல்லினை சாகுபடி செய்யப் போகிறீர்கள். சாதாரண சாகுபடி முறையில் அம்பை-16 நெல் குறைவான தூர் வெடிக்கும் தன்மை கொண்டிருந்தாலும் புதிய முறையில் இந்த ரகம் அதிகத் தூர்கள் கொண்டதாக இருக்கும்.
விவசாயிகளுக்கு விஸ்தரிப்பு அதிகாரிகள் புதிய முறை அதாவது திருந்திய நெல் சாகுபடி முறையை செயல்விளக்கம் செய்துகாட்டி உதவி வருகின்றனர். விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையை அனுசரித்து பயனடைய வேண்டும்.
-எஸ்.எஸ்.நாகராஜன்.

