/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
குறுங்காடுகளில் உலாவும் மயில்கள், நரிகள்
/
குறுங்காடுகளில் உலாவும் மயில்கள், நரிகள்
PUBLISHED ON : ஜூன் 04, 2025

அரியலுார் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த விவசாயி ஆர்.கே.செல்வமணி, 40 ஏக்கர் பரப்பளவில் பெரும்பாலும் குறுங்காடுகளை உருவாக்கி இடையிடையே இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார். சோழன்குறிச்சியில் 20 ஆண்டுகளில் தனது காட்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்த்ததை பெருமையாக நினைவு கூர்ந்தார்.
அவர் கூறியதாவது: எம்.ஏ., படித்தபின் தோட்டக்கலை டிப்ளமோ படித்தேன். 2008ல் நிலம் வாங்கினேன். அதில் மரங்கள் தான் பிரதான பயிராக வளர்கின்றன. இந்தியாவின் பல்வேறு பாரம்பரிய ரகங்களைச் சேர்ந்த 500 நாட்டின மாடுகளை வளர்த்து வந்தேன்.
கொரோனா காலகட்டத்தில் ஆள் பற்றாக்குறை, தீவனப் பற்றாக்குறையால் மாடுகளை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது 20 மாடுகளை வளர்க்கிறேன். தேக்கு, இலுப்பை, செஞ்சந்தனம், தென்னை, வாழை, ஜாதிக்காய் உட்பட 60 வகை மரங்கள் இங்குள்ளன. மரங்களின் மேல் மிளகுக்கொடிகள் வளர்கின்றன.
மரங்கள் அடர்ந்துள்ளதால் அவற்றின் நிழலில் சோதனை முறையில் 300 அவகோடா மரக்கன்றுகளை வாங்கி நடவு செய்துள்ளோம். 2008 முதல் வளர்ந்து நெருக்கமாக இருக்கும் மரங்களை வெட்டி எடுத்த போது 400 டன் கிடைத்தது. தேக்கு உட்பட பல்வேறு வகை மரங்களை இழைத்த போது 100 டன் கிடைத்தது. அவற்றை கொண்டு பத்தாயிரம் சதுரஅடியில் பசுமை வீடு கட்டி கதவு, நிலை, ஜன்னல் உட்பட பல்வேறு மர வேலைப்பாடுகளுக்கு பயன்படுத்தினேன்.
இதற்கு வெளியில் வாங்கினால் கோடிக்கணக்கில் செலவாகும். இங்கே வளர்ந்த தேக்கு உட்பட மரங்களை பயன்படுத்தியதால் செலவை மிச்சப்படுத்தினேன். இதுவும் ஒருவகை வருமானம் தான்.
மழைநீரே உயிர்நீர்
மொட்டை மாடியில் 4000 சதுர அடியில் விழும் மழைநீரை சேகரிக்கிறேன். முதலில் பெய்யும் மழைநீரில் மரத்துகள்கள், துாசி இருக்கும். அவற்றை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறேன்.
முதல் மாடியில் 5000 லிட்டர் அளவுள்ள தண்ணீர்த் தொட்டியில் கூழாங்கல், மணல், செங்கல், ஜல்லி பரப்பி அதன் வழியே தரைத்தளத்தில் ஒன்றரை லட்சம் லிட்டர் கொள்ளவுள்ள தண்ணீர் தொட்டியில் சுத்தமான மழைநீராக சேகரிக்கிறேன். பெருமழை பெய்து தரைத்தொட்டி நிறைந்தால் அருகிலுள்ள 40ஆயிரம் லிட்டர் அளவுள்ள மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழைநீரில் வெயில், காற்று படாமல் இருந்தால் ஆண்டுக்கணக்கில் பாதுகாக்க முடியும். எங்கள் குடிநீருக்கு வெளியில் தண்ணீர் வாங்குவதில்லை. வீட்டைச் சுற்றியுள்ள மரங்கள், பூச்செடிகள், திராட்சை கொடி, காய்கறிகளுக்கு இங்கிருந்து தண்ணீர் பாய்ச்சுகிறோம்.
புங்கனுார் குட்டை ரக நாட்டின பசுக்கள் வளர்ப்பதால் அவற்றின் தீவனத்திற்காக நேப்பியா, கோ 3 பசுந்தீவன புற்களை 35 சென்ட் இடத்தில் அடர் நடவாக நீளவாக்கில் வளர்க்கிறோம். இதனால் தீவனப்புற்களுக்கு போதுமான சூரிய வெளிச்சம் கிடைக்கும். மாடுகளின் சாணத்தில் இருந்து தொழுஉரம் தயாரித்து நிலத்தில் இடுகிறோம்.
பண்ணையில் 30 சென்ட் பரப்பளவில் எட்டடி ஆழத்தில் பண்ணை குட்டை அமைத்துள்ளோம். அதில் மாடுகள் தண்ணீர் குடிக்கும், நீந்தும். கட்லா, ரோகு, மிர்கால், புல்லுக்கெண்டை உட்பட மேற்பரப்பில் வளரும் மீன்கள் முதல் ஆழத்தில் வளரும் மீன்கள் வரை பண்ணை குட்டையில் வளர்கின்றன. மேலும் 100 நாட்டுக்கோழிகள் வளர்கின்றன.
குறுங்காட்டை உருவாக்கியுள்ளதால் காட்டுப்பன்றிகள் தொல்லை உண்டு. முந்திரிப்பழம், நிலக்கடலையை சாப்பிட வரும் மயில்களை வேட்டையாட நரிகள் வந்து செல்கின்றன. குரங்குகள் பழங்களை தின்று எச்சமிட்டதால் தானாக உருவான சந்தன மரங்கள் நன்கு வளர்ந்துள்ளன. மாந்தோப்பும் உருவாக்கியுள்ளோம். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சவுக்கு மரங்களை வெட்டி எடுத்தால் ஒரு ஏக்கருக்கு 80 டன் கிடைக்கும்.
ஒரு டன் ரூ.7000 வீதம் விற்றாலே லாபம் தான். ஒருமுறை காட்டை உருவாக்கினால் போதும். அவற்றிலிருந்து விதைகள் தானாக வளர்ந்து மரங்களாக உருவாகும். 1000 தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் தொழிலாளர்களின் கூலிக்கு செலவாகி விடும்.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் விடுமுறையை கழிக்க இங்கு வருகின்றனர். இங்கேயே நீர்வீழ்ச்சி, நீச்சல்குளம், தங்குமிடம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இன்னும் சில ஆண்டுகளில் எனது நிலத்தின் மதிப்பை விட இங்குள்ள மரங்களின் மதிப்பு அதிகரித்து விடும். இங்குள்ள பறவை, விலங்குகளால் சேதம் அதிகம் என்பதால் நீண்டகால மரப்பயிர்கள் கைகொடுக்கின்றன என்றார். இவரிடம் பேச: 94431 50194.
-எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை