/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
தென்னையும் சுருள் வெள்ளை ஈக்களும்
/
தென்னையும் சுருள் வெள்ளை ஈக்களும்
PUBLISHED ON : ஜூன் 04, 2025

தென்னை மரங்களை தாக்கம் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கோவை வேளாண் பல்கலை பயிர் பாதுகாப்பு இயக்ககம், அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வெளியிட்டுள்ள வழிமுறைகள்:
தமிழகத்தில் 4.67 லட்சம் எக்டேர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. இதில் 50 சதவீத பரப்பளவில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகளவில் ஏற்பட்டு மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. 2016 முதல் இந்த ஈக்கள் தமிழக தென்னைகளில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பலவித ஆராய்ச்சி செய்து, ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை விவசாயிகளுக்கு அறிவுறுத்துகிறது.
தென்னங்கீற்றுகளின் அடிப்பரப்பை நோக்கி தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும். மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களின் இருபுறமும் விளக்கெண்ணெய் தடவி தென்னை மரத்தில் 6 அடி உயரத்தில் தொங்க விட்டோ அல்லது தண்டுப்பகுதியில் சுற்றியோ வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு 20 என்ற எண்ணிக்கையில் 20 மரங்களில் இம்முறையில் தொங்கவிட வேண்டும். 'என்கார்சியா' ஒட்டுண்ணிகளை தோப்புக்கு நுாறு என்ற எண்ணிக்கையில் விடுவதால் வெள்ளை ஈக்களை படிப்படியாக குறைக்கலாம்; அல்லது 'அப்பர்ட்டோகிரைசா' இரைவிழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 என்ற விகிதத்தில் கீற்றுகளில் இணைத்து வெள்ளை ஈக்களின் தாக்குதலை குறைக்கலாம். இந்த ஒட்டுண்ணிகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தென்னை மரங்களுக்கு இடையே வாழை, கல்வாழை, சீத்தா மரங்களை ஊடுபயிராக நடலாம்.
5 சதவீத வேப்பெண்ணெயுடன் ஒட்டும் திரவம் கலந்து கீற்றுகளின் அடியில் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும். வெள்ளை ஈக்களின் சேதத்தால் ஏற்படும் கரும்பூசணத்தை நீக்க 25 கிராம் மைதா மாவு பசையை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். பரிந்துரைக்கப்பட்ட உரங்களை பயன்படுத்துவதே ஒருங்கிணைந்த முறை பூச்சிக் கட்டுப்பாடு. ஈக்களின் இயற்கை எதிரிகளாகிய என்கார்சியா ஒட்டுண்ணி, அப்பர்ட்டோகிரைசா இரைவிழுங்கிகள் இயற்கையாகவே உருவாகும். அவற்றை காக்கும் வகையில், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.