/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
150 ஏக்கரில் 'அன்னாசி' : ரூ. 3.90 லட்சம் வருவாய்
/
150 ஏக்கரில் 'அன்னாசி' : ரூ. 3.90 லட்சம் வருவாய்
PUBLISHED ON : நவ 28, 2018

அன்னாசியில் மாங்கனீஸ், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பி உள்ளது. அன்னாசி வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இதில் புரதத்தை செரிக்கக்கூடிய 'புரோமலைன்' என்ற என்சைம் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. வைட்டமின் 'சி' சத்தும் மிகுதியாக உள்ளது. இது இருதய நோய்கள் மற்றும் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது.
அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, புளூ காய்ச்சல் உள்ளிட்ட தொற்று வியாதிகள் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள 'தையாமின்' மற்றும் வைட்டமின் 'பி' சத்து, உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதனால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது. இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள அன்னாசி பழம் அதிகளவு உண்ணலாம்.
இயற்கை விவசாயம்
அன்னாசி சாகுபடியில் தமிழக, கேரள விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். விளைச்சல் அதிகரிப்பதன் மூலம் விலை கட்டுக்குள் இருக்கிறது. கேரளா மாநிலம் எருமேலியை சேர்ந்தவர் விவசாயி சந்தோஷ். இவர் தனது 150 ஏக்கர் நிலத்தில் ரப்பர் தோட்டத்தை அழித்து விட்டு 150 ஏக்கரிலும் அன்னாசி பயிரிட்டுள்ளார்.
இயற்கை முறையில் அன்னாசி சாகுபடி செய்வதால் விளைச்சல், பழத்தின் ருசி, இனிப்பு சுவை அதிகளவு உள்ளது. சுழற்சி முறையில் தினமும் காய்கள் பறித்து தமிழகம், வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு டன் கணக்கில் அனுப்புகிறார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சராசரியாக மூன்று லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
பண்ணை விலை
அவர் கூறியதாவது: அன்னாசி பயிரிட்ட நான்காவது மாதத்தில் இருந்து பலன் தருகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காய்கள் பறிக்கலாம். ஏக்கருக்கு சராசரியாக 13 டன் அன்னாசி கிடைக்கிறது.
மதுரை சிம்மக்கல் பழ கமிஷன் மண்டிகளில் கிலோ 30 ரூபாய் விலைக்கு மொத்தமாக எடுத்து கொள்கின்றனர். அவர்கள் கிலோ 50 ரூபாய், 60 ரூபாய் வரை விற்கின்றனர்.
இயற்கை உரம் மட்டுமே வைப்பதால் செடிகள் செழிப்பாக வளர்ந்து அதிக காய்களை தருகின்றன. அன்னாசி தோட்டம் வழியாக எருமேலி செல்லும் மெயின் ரோடு உள்ளது. இங்கு வைத்து சில்லரை வியாபாரம் பார்க்கிறோம். எனினும் பண்ணை விலைக்கே அன்னாசியை தருகிறேன்.
மார்க்கெட் விலைக்கு தருவதில்லை. அனேகம் பேர் பண்ணைக்கே வந்து அன்னாசியை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர், என்றார். தொடர்புக்கு 96052 25751.
- கா.சுப்பிரமணியன், மதுரை.

