/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மரவெட்டி விதை எண்ணெய் உயிர்ம பூச்சிக்கொல்லி (ஹை-ஆக்ட்)
/
மரவெட்டி விதை எண்ணெய் உயிர்ம பூச்சிக்கொல்லி (ஹை-ஆக்ட்)
மரவெட்டி விதை எண்ணெய் உயிர்ம பூச்சிக்கொல்லி (ஹை-ஆக்ட்)
மரவெட்டி விதை எண்ணெய் உயிர்ம பூச்சிக்கொல்லி (ஹை-ஆக்ட்)
PUBLISHED ON : மே 09, 2012
மரவெட்டி: இது மரவெட்டை, மரோட்டி எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் ஹிட்னோகார்பஸ் பெண்டன்ரா என்பதாகும். இதில் 87 வகை சிற்றினங்கள் உள்ளன. இது ஒரு பசுமைமாறா வகையாகும். நீர் நிலைகளின் அருகில் காணப்படுகிறது. தொழுநோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் மரப்பலகை கட்டுமானம், பெட்டிகள் செய்தல் மற்றும் விறகாகவும் பயனாகிறது. இது பிப்ரவரி மாதத்தில் பூத்து அக்டோபரில் காய்க்கிறது. சுமார் 30 அடி உயரம் வளரக்கூடிய நடுத்தர வகையை சார்ந்தது.
வேதியியல்: மரவெட்டி விதைகளில் 'சவுல்மூக்ரா தொகுதி எண்ணெய்கள்' காணப்படுகின்றன. இவை கொழுப்பு எண்ணெய்கள் ஆகும். இத்தொகுதி எண்ணெய்களில் நிறைவுறா வளைய கொழுப்பு அமிலங்கள் மிகுந்து உள்ளன. முக்கியமாக சவுல்மூக்ரிக் அமிலம், ஹிட்னோகார்பிக் அமிலம், கோர்லிக் அமிலம், ஒலீயிக் அமிலம் மற்றும் பால்மிட்டிக் அமிலங்கள் அதிக அளவுகளிலும் தாழ்நிலை ஒருபடித்தான ஹிட்னோ கார்ப்பிக் அமிலம் குறைந்த அளவிலும் காணப்படுகின்றன.
மருத்துவப் பயன்கள்: தொழு நோயின் ஆரம்ப நிலையில் மிகவும் சக்தி வாய்ந்த மருந்தாக உள்ளது. வயிற்று அழற்சிக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. மூட்டுவாதம், சுளுக்கு, எரிச்சல் ஆகியவற்றிற்கும் மருந்தாகிறது. இதன் விதைகள் மலைவாழ் மக்களால் சேகரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.
உயிர்ம பூச்சிக்கொல்லி: பண்டைய குறிப்புகளின்படி, இதன் எண்ணெய் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எனவே, வனமரங்களை தாக்கும் பூச்சிகளுக்கு எதிராக ஆய்வு செய்ததில் பூச்சிக் கொல்லித்தன்மை கண்டறியப்பட்டது. எண்ணெய்யை பிரித்தெடுத்தலில், இது தேக்கில் இலையுண்ணியான ஹிப்லியா பியூரா, சவுக்கில் பட்டையுண்ணியுமான இண்டர்பெல்லா குவாட்ரிநொடேடா மற்றும் பெரு மரத்தில் எலிக்மா நாரிசிஸ் ஆகியவற்றுக்கெதிரான தன்மை அறியப்பட்டது.
தற்போது தயாரித்துள்ள ஹை-ஆக்ட் கூட்டுச்சேர்மம், கூட்டுப்புழு பருவத்தில் ஹிப்லியா பியூராவுக்கு எதிராக 80-90%ம், இண்டர்பெல்லா குவாட்ரிநொடேடாவுக்கு எதிராக 60-80%ம், எலிக்மா நாரிசிஸ்க்கு எதிராக 55-70% எதிர்ப்பு ஆற்றல் கொண்டதாக அறியப்பட்டது. ஹை-ஆக்ட் கலவையானது பூச்சிக்கொல்லித் தன்மை, பூச்சி உண்ணுவதை தவிர்க்கச் செய்யும் தன்மை, பயிர் வளர்ச்சி ஊக்கி, பூச்சி விரட்டி, முட்டை இடுவதை தடுக்கும் தன்மை ஆகிய பண்புகளை உள்ளடக்கியதாக இருப்பது இதன் சிறப்பு.
ஹை-ஆக்ட் தெளித்தல்: தயார் நிலையில் உள்ள இக்கலவையை ஒரு லிட்டர் நீருக்கு 10மி.லி. ஹை-ஆக்ட் என்ற அளவில் கலந்து, பூச்சி தாக்குதல் உள்ள மரங்களில் தெளித்து கட்டுப்படுத்தலாம். இது சூழலுக்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்துவது இல்லை. நன்மை தரும் உயிரினங்களும் அழிக்கப்படுவதில்லை. தொடர்புக்கு: சவு.முருகேசன், போன்: 0422-248 4100.
-கே.சத்தியபிரபா, உடுமலை.

