
நீடித்த நவீன கரும்பு சாகுபடி - நாற்றங்கால் தொழில்நுட்பம் - சாதாரண முறையில் ஒரு ஏக்கருக்கு 4 டன் விதைக்கரும்புகள் தேவைப்படும். ஆனால் குழித்தட்டு முறையில் ஒற்றைப்பரு விதை கரணை நாற்றை தயாரிக்கும்போது 50 கிலோ மட்டும் போதும். 6 முதல் 7 மிதமான கரும்புகளை விதைக்கரும்பாக தேர்வு செய்து,நல்ல தேர்ச்சியான பருக்களைத் தேர்வுசெய்து, பருவெட்டும் கருவியைக் கொண்டு வெட்டி பிரித்தெடுக்க வேண்டும். பின் பருக்களை விதைநேர்த்தி செய்து ஒரு சாக்குப்பையில் கட்டி வைக்கப்படுகிறது. 4 நாட்களுக்குப் பின் நன்றாக வேர்விட்ட பருக்களை பாதியளவு தென்னை நார்க்கழிவு நிரப்பப்பட்ட குழித்தட்டுகளில் இட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் பூவாளிகொண்டு நீர் தெளிக்க வேண்டும். 25-30 நாள் வயதான நாற்றுக்கள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இதனை அனுபவ விவசாயி புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு கிராமத்தைச் சேர்ந்த திருச்சி தேவதாசன் தெரிவிக்கிறார். தனது பண்ணையில் உற்பத்தி செய்து புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு விநியோகித்து வருகிறார். நாள் ஒன்றுக்கு 25,000 நாற்றுக்களை உற்பத்தி செய்து வருகிறார். பிற ஊர்களிலுள்ள உழவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். பருவெட்டும் கருவிகளையும் செய்து கொடுத்து வருகிறார்.
ஒரு கரும்பு நாற்று உற்பத்தி செய்வதற்கு 85 பைசா செலவாகிறது. ஒரு கரும்புநாற்று 1.25க்கு விற்பனை செய்கிறார். ஒரு மாதத்திற்கு வருமானமாக சராசரியாக ரூ.40,000 கிடைப்பதாகத் தெரிவிக்கிறார். உற்பத்தி செய்த கரும்பு நாற்றுகள் மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், சிவகங்கை போன்ற பகுதி கரும்பு விவசாயிகளுக்கு விநியோகித்து வருகிறார். (தொகுப்பு: முனைவர் செ.க.நடராஜன், முனைவர் வ.கிருஷ்ணமூர்த்தி, முனைவர் செ.கீதா, வேளாண் அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை-622 303. போன்: 04322-290 321).
காந்தள் மூலிகைப்பயிர் (குளோரியோசா சுபர்பா): பொதுவாக காந்தள் மலர் கார்த்திகை கிழங்கு, கலப்பை கிழங்கு என்ற பெயர்களில் அறியப் படுகிறது. தமிழகத்தில் மூலனூர், வெள்ளக்கோயில், சேலம், அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிபட்டி, மார்க்கம்பட்டி, திண்டுக்கல், தாராபுரம், ஒட்டன் சத்திரம், ஆத்தூர் போன்ற பகுதிகளில் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. விதைகளில் இருந்து மருந்து பொருட்களைத் தயாரிக்க இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. விதைகளில் உள்ள கோல்ச்சின் பயிர் மேம்பாட்டு ஆராய்ச்சிக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது.
இது ஒரு வெப்பமண்டலப் பயிர். எல்லா நிலங்களிலும் வேலி ஓரங்களிலும் மானாவாரி மற்றும் இறவையிலும் சாகுபடி செய்யலாம். நல்ல தரமான 60 கிராம் எடையுள்ள கிழங்குகளைத் தேர்வுசெய்து பயிர் பெருக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும். சிறிய கிழங்குகள் பலன் தருவதற்கு கால தாமதமாகும். ஒரு எக்டருக்கு சுமார் 2000 கிழங்குகள் தேவைப்படும். விதைநேர்த்தி செய்யப்பட்ட கிழங்குகளை ஆடி, ஆவணி மாதங்களில் நடவு செய்வதால் நல்ல வளர்ச்சியும் அதிக பூக்களும் உருவாகி அதிக விளைச்சல் கொடுக்கிறது.
நீள வடிவத்தில் பார்களை 45 செ.மீ. இடைவெளியில் அமைத்து அவைகளின் ஓரங்களில் 45 செ.மீ. இடைவெளியில் கிழங்குகளை 15 செ.மீ. ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கரில் 10 டன் தொழு உரம், 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா, 5 கிலோ வி.ஏ.மைக்கோரைசர், 300 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். இத்துடன் 60:50:75 கிலோ தழை, மணி, சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இடவேண்டும்.
கிழங்கு விதைத்தவுடனும், 47 நாட்களுக்கு பிறகு ஒரு முறையும் பாசனம் செய்ய வேண்டும். பூக்கும் சமயத்தில் வாரம் ஒரு முறை பாசனம் தேவைப்படும். ஒவ்வொரு கொடிக்கும் 75 முதல் 150 பூக்கள் வரை பூக்கும். பூக்கள் விரிகின்ற சமயம் தன்மகரந்த சேர்க்கை மிகவும் குறைவாக இருப்பதால் அயல் மகரந்தச் சேர்க்கை உண்டாக்க, பூக்கள் விரிந்து மகரந்தம் வெளிப்படும் சமயம் 10-15 செ.மீ. நீளம் மெல்லிய குச்சிகளை எடுத்து நுனியில் சிறிது பஞ்சை கட்டி மகரந்தத்தை பஞ்சால் தொட்டு, கொடிகளில் உள்ள பூக்களின் சூல் பகுதியின்மீது தொட்டு அயல் மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்தலாம்.
அறுவடை: கிழங்குகள் விதைத்தபின் முளைத்துவரும் கொடிகளை 3 வகையாகப் படரச் செய்யலாம். முள் இழுவை மூலமாக படரச் செய்யும் வழக்கம் மூலனூர், மாணிக்கம்பட்டி பகுதி களில் பிரபலம். முள்ளு கிழுவை குச்சிகளை (16 அடி உயரம்) வாய்க்காலின் இரண்டு ஓரங்களிலும் நட்டு பராமரிக்க வேண்டும். கொடிகளை முள்வேலியில் படரச் செய்ய வேண்டும்.
காய்ந்த விளாரிமாரில் கொடிகளைப் படரச் செய்யும் முறை சேலம் மாவட்டம் ஆத்தூரில் பின்பற்றப்படுகிறது. சில பகுதிகளில் கம்பிவேலி சுற்றிப் படரச் செய்கின்றனர். விதைத்த கிழங்குகள் 3 அல்லது 4 மாதங்களில் பூத்து காய்கள் தோன்றி காய்ந்துவிடும். பின்னர் அறுவடை செய்ய வேண்டும். ஒவ்வொரு கொடியிலிருந்தும் சுமார் 100 கிராம் காய்ந்த விதைகளும் சுமார் ஒரு கிலோ கிழங்குகளும் கிடைக்கும். மானாவாரியில் எக்டருக்கு 2000 கிலோ கிழங்குகள் கிடைக்கும்.
காய்ந்த விதைகளையும் கிழங்குகளையும் நிழலில் உலர்த்தி சேமித்து வைக்க வேண்டும். கிழங்குகளை கூடிய விரைவில் விற்பனை செய்வதால் அதனுடைய முளைப்புத்திறன் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். (தகவல்: முனைவர் பொ.பாலசுப்பிரமணி, முனைவர் அ.ராமர், பா.பானுபிரியா, தோட்டக் கலைத்துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை-625 104. போன்: 0452-242 2956)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

