தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/ஊட்டச்சத்தின் அதிசயம் கேழ்வரகு

ஊட்டச்சத்தின் அதிசயம் கேழ்வரகு

ஊட்டச்சத்தின் அதிசயம் கேழ்வரகு


PUBLISHED ON : மே 27, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தின் பாரம்பரிய உணவான கேழ்வரகு வெயில் காலத்தில் உடல் வெப்பத்தால் ஏற்படும் சோர்வைத் தடுத்து, உடலை உடனடியாகக் குளிர்ச்சிய டையச் செய்கிறது. மற்ற தானியங்களை விட ராகியில் கால்சியம் சத்து 10 மடங்கு அதிகம். மெதுவாக செரிமானமாவதால் பசி எடுப்பதைக் குறைத்து உடல் எடையைக் கட்டுப்படுத்துகிறது. இந்தியாவில் தமிழ்நாடும் கர்நாடகாவும் கேழ்வரகு சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாக உள்ளன.

பட்டங்கள், ரகங்கள்

ஆடி (ஜூன், -ஜூலை) மற்றும் புரட்டாசி (செப்டம்பர், -அக்டோபர்) பட்டங்கள் சாகுபடிக்கு ஏற்றது. மானாவாரிக்கு ஆடிப்பட்டம் சிறந்தது. நீர்வசதியைப் பொறுத்து ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.

செம்மண், வண்டல்மண் நிலங்களில் சிறப்பாக வளரும். இதன் பயிர் காலம் 95 முதல் 120 நாட்கள். ஜூன், ஜூலையில் மானாவாரி பயிராக பையூர் 1, கோ 13, கோ (ராகி) 14, பையூர் 2 ரகங்களை நடலாம். இறவைப்பயிராக செப்., அக்டோபரில் பையூர் 1, கோ (ராகி) 14, கோ 13 ரகங்களையும் டிச., ஜனவரியில் கோ 9, கோ 13, கோ (ராகி) 14, திருச்சி 1 ரகங்கள் பயிரிடப்படுகிறது. அத்தியேந்தல் 1 ரகம் வறட்சியான பகுதியில் கூட அதிக மகசூல் தரும்.

நிலமும் விதையும் தயாரித்தல்

கேழ்வரகு சாகுபடி செய்வதற்கு முன் நிலத்தை புழுதிபட 3 முறை உழுது களைகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். நிலத்தில் தண்ணீர் தேங்கக்கூடாது. ஏக்கருக்கு 12.5 டன் தொழுஉரம் இடவேண்டும். எக்டேருக்கு 15 முதல் 20 கிலோ விதைகள் தேவைப்படும்.

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திராம் அல்லது கார்பன்டசிம் கலந்து விதைநேர்த்தி செய்யவேண்டும். ஒரு எக்டேருக்கு தேவையான விதைகளை ஒரு சதவீத பொட்டாசியம் குளோரைடு ரசாயனத்தில் 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதை எடுத்து 5 மணிநேரம் நிழலில் உலர்த்தி விதைக்கவேண்டும். இந்த இருமுறைகளின் மூலம் பயிர் வறட்சியை தாங்கி வளர்ந்து மகசூல் அதிகம் தரும்.

கைவிதைப்பு முறையில் விவசாயிகள் கேழ்வரகை பரவலாக துாவுவதால் பயிரின் வளர்ச்சி சீராக இருக்காது. கொர்ரு அல்லது விதைப்பான் கொண்டு வரிசை விதைப்பு செய்தால் அதிகப்பரப்பளவில் மண்ணின் ஈரம் காயும் முன்பே விதைக்கலாம். விதைக்கும் போது 2.5 செ.மீ., ஆழத்தில் விதைக்கவேண்டும். வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ., இடைவெளி, செடிக்கு செடி 10 செ.மீ., இடைவெளி இருக்கவேண்டும்.

சிலபகுதிகளில் 22 முதல் 25 நாட்கள் வயதுடைய கேழ்வரகு நாற்றுகளை10 செ.மீ., இடைவெளியில் நாற்றுகள் நடவேண்டும். நாற்று நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 5 சென்ட் நிலத்தில் 3 அல்லது 5 கிலோ விதைகளை விதைத்து 3 வாரம் கழித்து 22.5 க்கு 10 செ.மீ. இடைவெளியில் நடவுசெய்யவேண்டும்.

நீர்ப்பாசனம்

விதைத்தவுடன் ஒரு முறை, 3ம் நாள், பூக்கும் பருவம், பால்பிடிக்கும் பருவம் என நிலத்தின் தன்மைக்கேற்ப 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

மானாவாரி சாகுபடியில் மண்ஈரம் காக்க சால் மற்றும் பார்அமைத்தல், சமஉயர வரப்பு போன்ற நுட்பங்களை கடைப்பிடிக்கலாம்.குறைந்த தண்ணீர் தேவைப்படும் பயிர் என்றாலும், கதிர்விடும் பருவத்தில் போதுமான அளவு நீர்ப்பாசனம் செய்வது மகசூலை அதிகரிக்கும்.

உர நிர்வாகம் நுண்ணுயிர் உரங்கள்

ஒரு எக்டேர் நிலத்தில் 12.5 டன் மட்கிய தொழுஉரத்தை கடைசி உழவின் போது பரப்பிய பின்னர் உழவேண்டும். மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரமிட வேண்டும். இல்லையெனில் இறவை சாகுபடிக்கு ஒரு எக்டேருக்கு பரிந்துரைக்கப்பட்ட உரஅளவான தழைச்சத்து 90 கிலோ, மணிச்சத்து 45 கிலோ, சாம்பல்சத்து 45 கிலோ இட வேண்டும்.

10 பொட்டலம் (2000 கிராம்) அசோஸ்பைரில்லம், 10 பொட்டலம் பாஸ்போபாக்டீரியத்தை மட்கிய தொழுஉரத்துடன் கலந்து ஒரு எக்டேர் நிலத்தில் பரப்பலாம். இறவையில் 5 பாக்கெட் அசோஸ்பைரில்லத்தை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு எக்டேருக்குத் தேவையான நாற்றுக்களை 15 - 30 நிமிடம், வேர்மூழ்கும் படி நனைத்து நடவுசெய்யலாம்.

களை மேலாண்மை

விதைத்த அல்லது நட்ட 18ம் நாள் ஒரு களையும், 45ம் நாள் மற்றொரு களையும் எடுக்கவேண்டும். அல்லது ஒரு எக்டேருக்கு இரண்டு லிட்டர் பியூட்டாகுளோர் களைக்கொல்லியை 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து நாற்று நட்ட மூன்றாம் நாள் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு மேலாண்மை

பருவ மாற்றத்திற்கு ஏற்ப கேழ்வரகை பூச்சிகள் தாக்கலாம். வெட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் (50சதவீத ஈசி) 200 மிலி தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

தண்டுத்துளைப்பான்களை கட்டுப்படுத்த துார்கட்டும், பூக்கும் பருவத்தில் இதை பயன்படுத்தலாம்.

வேர் அசுவினியைக் கட்டுப்படுத்த டைமித்தோயைட் 0.03 சதவீத கலவையை வேர்ப்பகுதியில் ஊற்றவேண்டும். குலைநோய் வந்தால் கட்டுப்படுத்த ஒரு எக்டேருக்கு 500 கிராம் கார்பென்டசிம் மருந்தினை நீரில் கலந்து தெளிக்கவேண்டும். செம்புள்ளி நோய்க்கு எடிபென்பாஸ் 500 மில்லி அல்லது மேன்கோசெப் ஒருகிலோ என்ற அளவில் நீருடன் கலந்து தெளிக்கவேண்டும்.

தேமல் நோய்க்கு நோய் தாக்கிய செடிகளை அகற்றவேண்டும். இந்நோய் தத்துப்பூச்சிகளால் பரவுவதால் நோய் தோன்றியவுடன் மோனோகுரோட்டோபாஸ் 0.05 சதவீதம் தெளிக்கவேண்டும். தெளித்த 15 நாட்களில் மறுமுறையும் தெளித்தால் நோய் முற்றிலும் கட்டுப்படும்.

இலைப்புள்ளி, குலைநோய் தாக்குதல் வந்தால் 0.2 சதவீதம் டைத்தேன் எம் 45 அல்லது பஞ்சகாவ்யத்துடன் வேப்பெண்ணெய், சூடோமோனஸ் அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் கலந்து பூக்கும் தருணத்தில் தெளிக்கவேண்டும்.

அஸ்வினி பூச்சியை கட்டுப்படுத்த 18 கிலோ எமிசான் துாவவேண்டும். மேலும் கேழ்வரகுடன் ஊடுபயிராக அவரை, உளுந்து பயிர்களை 8 க்கு 2 என்ற வரிசையில் பயிரிடலாம்.

அறுவடை மகசூல்

பயிர்கள் முற்றியபின் இருமுறையாவது அறுவடை செய்யவேண்டும். சரியான முறையில் பராமரித்தால் ஏக்கருக்கு 2500 முதல் 4000 கிலோ மகசூல் கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us