
மானாவாரி ஆடிப்பட்டம் (ஜூன், ஜூலை), கார்த்திகை பட்டம் (அக்டோபர் - நவம்பர்), இறவை மாசிபட்டம் (பிப்ரவரி - மார்ச்) ஆகிய பருவங்கள் எள் சாகுபடிக்கு ஏற்றவை. ஏக்கருக்கு 2 கிலோ வீதம் பயன்படுத்தலாம்.
எள்ளில் 'டி.எம்.வி.-7', வி.ஆர்.ஐ. (எஸ்.யு) 2, எஸ்.ஐ.பி.ஆர்.(1) (வெள்ளை ரகம்), என பல ரகங்கள் உள்ளன. ஒரு கிலோ விதையுடன் நான்கு கிராம் டிரைக்கோடெர்மா விரிடி சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
இதை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் செய்ய வேண்டும். 30க்கு 30 செ.மீ., இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும். ஒரு சதுர மீட்டரில் 11 செடிகள் இருப்பதே சரியாகும்.
களை நிர்வாகம்: பெண்டி மெத்தலின் என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 1 லிட்டர் (5 மில்லி / 1 லிட்டர் தண்ணீர்) என்ற அளவில் விதைத்த மூன்றாம் நாள் சரியான ஈரப்பதத்தில் தெளிக்க வேண்டும் அல்லது அலகுளோர் என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 800 மில்லி (4 மி.லி.,1 / 1 லிட்டர் தண்ணீர்) என்ற அளவில் விதைத்த மூன்றாம் நாள் தெளிக்கவும். இதனுடன் 25 ம் நாள் கைகளை எடுக்க வேண்டும்.
உர நிர்வாகம்: விதைத்த பின்பு நீர் பாய்ச்சல் செய்வதற்கு முன்பு 2 கிலோ மாங்கனீசு சல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் சீராக துாவ வேண்டும். இறவை பயிரில் 23 கிலோ யூரியா, 20 கிலோ டி.ஏ.பி., மற்றும் 9 கிலோ பொட்டாஷ் உரங்களை அளிக்க வேண்டும். தொடர்புக்கு 97152 86401
- முனைவர் ம.சரவணன்
உழவியல் தொழில்நுட்ப வல்லுனர்
காந்தி கிராம பல்கலை.

