PUBLISHED ON : ஏப் 02, 2025

தமிழகத்தில் சிறுதானியங்களின் சாகுபடி பரப்பளவையும் உற்பத்தி அளவையும் உற்பத்தி திறனையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
வறண்ட மற்றும் மானாவாரி பகுதிகளில் உள்ள தண்ணீர் தேவை குறைந்த சிறுதானியங்களை பயிரிடுவதை ஊக்குவிக்க வேண்டும். தரிசு நிலங்கள் மற்றும் மீளமைக்கப்பட்ட நிலங்களில் பயிரிட வேண்டும். பயிர் சுழற்சி முறையிலும் இவற்றை சாகுபடி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் இந்திய சிறுதானிய ஆராய்ச்சி கழகம் (ஐ.ஐ.எம்.ஆர்.,) வெளியிட்டுள்ள சிறுதானியங்களை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்ய வேண்டும். சான்றுபெற்ற விதைகளை அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், உழவர் கூட்டுறவு நிறுவனம் மூலம் பெறவேண்டும். சரியான நேரத்தில் விதைப்பதும் சரியான இடைவெளியில் விதைப்பதும் அவசியம். உயிர் உரங்கள், மண்புழு உரங்களை பயன்படுத்த வேண்டும். தண்ணீரை சேமிக்கும் வகையில் சொட்டுநீர், தெளிப்பான் முறைகளை கையாள வேண்டும்.
விதைப்பது, களையெடுப்பது, அறுவடை செய்வதற்கு சிறிய இயந்திரங்களை பயன்படுத்தினால் வேலையாட்கள் செலவு குறையும். காலநிலை மாற்றத்தை சமாளித்து பயிரிடும் தொழில்நுட்ப அறிவை விவசாயிகள் பெற்றால் தமிழகத்தில் சிறுதானிய உற்பத்தி அதிகரிக்கும்.
-வாசுகி, விதை ஆய்வு துணை இயக்குநர், மதுரை