
இக்னிமானிடே குளவிகள்: இந்த இனம் உலகத்திலேயே பெரிய குளவி இனம். இதிலே 60,000 வகைகள் உள்ளன. இந்த வகை குளவிகள், வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள், தத்துப்பூச்சிகளின் புழுக்களை தாக்கி அழிக்கும். குறிப்பாக எலிபோரா வகை குளவிகள் தென்னை கருந்தலைப்புழுவை கட்டுப்படுத்த மரத்திற்கு 10 ஒட்டுண்ணிகள் தேவை. 10 நாள் இடைவெளியில் 2-3 முறை ஒட்டுண்ணிகளை விட்டு தென்னை கருந்தலைப்புழுவை அழிக்கலாம். கூடங்களில் பூச்சியியலாளர்கள் நெல் அந்துப் பூச்சியின் புழுக்களின் மூலம் வளர்க்கின்றனர்.
ஐசோடிமா ஜவானிசிஸ் வகை குளவிகள் கரும்பு, நுனிக்குருத்துப்பூச்சியைத் தாக்கும் இயல்பு கொண்டது. புழுக்கள் கூட்டுப்புழுக்கள் ஆவதற்கு முன் இவை தாக்கும். கரும்பு நுனிக்குருத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்த கரும்பில் ஒரு எக்டருக்கு நூறு ஜோடி புழுக்களை விடலாம்.
இக்னிமானிடே குடும்ப குளவி இனங்களைப் போல நன்மை செய்யும் பூச்சிகளைக் கண்டறிந்து உழவர்கள் அவற்றை பாதுகாத்து பயனடைய வேண்டும். (தகவல்: முனைவர் தி.மனோகரன், பேராசிரியர்(பூச்சியியல்) விரிவாக்கக் கல்வி இயக்ககம், த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. 98420 40335.
ஹியூமிக் அமிலம்: பூஞ்சாணம், நிலத்தடி நீர், புதைபொருட்களின் சிதைவுகளின் மூலம் உருவாகும் பல அமிலங்கள் சேர்ந்த கலவை. இந்த அமிலத்தை களிமண்ணில் தெளிக்கும்போது அது மண்ணை இலகுவாக மாற்றி அதன்மூலம் நீர் உட்கிரகிக்கும் திறனையும் ஆரோக்கியமான வேர் வளர்ச்சிக்கும் உதவுகிறது. மணற்பாங்கான இடத்தில் தெளிக்கும்போது அதனுடன் தேவையான அங்ககப் பொருட்களைச் சேர்த்து நீர் தேக்கும் திறனை அதிகரிக்கிறது. இதன்மூலம் மண்ணிலிருந்து சத்துக்கள் வெளியேறுவது தடுக்கப்படுகிறது.
மண்ணில் தாவரத்திற்கு தேவையான சத்துக்களைதாவரம் உட்கொள்ளும் வகையில் எளிமையாக மாற்றுவதன் மூலம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு ஹியூமிக் அமிலம் உணவாகிறது. நுண்ணுயிர்கள் மண்ணில் உள்ள சத்துக்களைக் கரைத்து பயிர்கள் உட்கிரகிக்க ஏதுவாக செயல்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 1 முதல் 2 லிட்டர் அமிலத்தை 40லிட்டர் நீரில் கரைத்து தெளிப்பான் மூலம் மண்ணில் தெளிக்கலாம்.
பயிர்கள் மேல் தெளித்தல்: ஒரு ஏக்கருக்கு 1 முதல் 2 லிட்டர் ஹியூமிக் அமிலத்தை 20-40 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பான் கொண்டு பயிர்களின் மேல் தெளிக்க வேண்டும். ஹியூமிக் அமிலத்தின் முக்கிய பயனே ரசாயன உரத்தின் பாதிப்பை குறைப்பதே ஆகும். ஹியூமிக் அமிலம் சந்தையில் உள்ள அனைத்து அங்கக உரக்கடைகளிலும் கிடைக்கிறது. 30 லிட்டர் சுமார் 16-20 ரூபாய் என்ற அளவில் 25 லிட்டர் கேனாகக் கிடைக்கிறது. (தகவல்: முனைவர் மு.பவித்ரா, முனைவர் எஸ்.சுந்தரவரதன், முனைவர் எஸ்.பார்த்தசாரதி, பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காரைக்கால்.
போன்: 04368-261 372)
சுக்கு: இஞ்சியின் உலர்ந்த வடிவம்தான் இது. சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளில் வெகுவாக பயன்படுகிறது. சித்த மருத்துவத்தில் மிளகு, திப்பிலி, சுக்கு இம்மூன்றும் கலந்த திரிகடுகு என்ற கூட்டுமருந்து மிகவும் புகழ்பெற்றதாகும்.
5 கிராம் வீதம் சுக்கு, சீரகம், திப்பிலி, மிளகு ஆகியவற்றை எடுத்து பொடியாக்கி தேன்கலந்து காலை, மாலை சாப்பிட்டால் செரியாமை தீரும். சுக்கு, திப்பிலி, வால்மிளகு, ஏலம் இவைகளை வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட குரல் இனிமை பெறும்.
தாய்ப்பாலில் சுக்கை உரசி குழந்தைகளின் வயிற்றில் தடவ வயிற்று உப்புசம் குணமாகும். உடலில் வீக்கம், வலி போன்றவை இருந்தால் சுக்கை உரசி தடவி சூடுகாட்ட தொந்தரவு நீங்கும்.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

