PUBLISHED ON : ஜூன் 06, 2012

ஊட்டச்சத்து மிக்க சிறுதானிய உணவு வகைகள்: கேழ்வரகு: தானியத்தில் 7.8 முதல் 13 சதம் புரதச்சத்து உள்ளது. கால்சியம் சத்து 100 கிராமில் 344 மில்லிகிராம் உள்ளது. வைட்டமின் 'ஏ' காரணியான பீ கரோட்டின் 42 மில்லிகிராம் அளவிலும் உள்ளது. ரத்தசோகை நோயைக் கட்டுப்படுத்த தேவையான அளவு இரும்புச்சத்துக்கள் (0.4 மில்லிகிராம்) உள்ளது. இதிலுள்ள அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் ரத்தத்திலுள்ள கொலஸ்டிரால் என்னும் கொழுப்புப் பொருள் உற்பத்தியைத் தடுக்கிறது. உடலில் உள்ள சர்க்கரையின் அளவும் குறைகிறது. இதனால் உடலில் தோன்றும் புற்றுநோய், சர்க்கரை நோய்களைக் குணப் படுத்துகிறது. பெரும்பாலும் தாய்மார்கள் தாய்ப்பால் குறையும் காலங்களில் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு ஊட்டி ஈடுசெய்வார்கள்.
சோளம்: மக்காச் சோளத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்கள், நார்ச் சத்துக்கள், கார்போஹைட் ரேட், கொழுப்பு உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன. அதிக அளவில் பி வைட்டமின் கார்போஹைட்ரேட்டுடன் வினைபுரிந்து பரிணாம வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது. போலேட் என்னும் இரும்புச்சத்து உடலில் புதிய செல்களை உற்பத்தி செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. சோளத்தில் அதிக அளவில் காணப்படும் போலிக் ஆசிட் கர்ப்பக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, மலட்டுத்தன்மையை போக்குகிறது.
கம்பு: தர அடிப்படையில் நாட்டுக்கம்பு அல்லது பொட்டுக்கம்பு என்று ஒன்றும், அரிசிக்கம்பு அல்லது வீரிய ஒட்டுக்கம்பு என்று மற்றொன்றும் உள்ளது. வறட்சி தாண்டவமாடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்துவந்துள்ளது. நம் முன்னோர்கள் தங்கள் உணவில் சிறிதளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். இரவு நேரங்களில் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக வெப்பம் உமிழும் பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்கள் போன்றவர்களின் உடல் அதிக உஷ்ணம் அடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்திவந்தால் உடல் சூடு குறையும்.
உழவன் உணவகம்: களி, கம்பஞ்சோறு, சோளப்பணியாரம், வல்லாரை சுடுச்சாறு, ராகி தோசை ஆகியவை பரம்பரை பரம்பரையாக தமிழ் மண்ணில் மணக்கும் இயற்கை உணவுகள். இன்றும் பிளாட்பார கடைகளில்தான் இருக்கின்றன. மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் நாமக்கல் பாணியில் தொடங்கச் செய்திருக்கிறார்.
மதுரை நத்தம் சாலையில் உள்ள நாராயணபுரம் பகுதியிலுள்ள ராமகிருஷ்ண மடத்தில் செயல்பட்டுவரும் இந்த உணவகத்தில் தினை, கம்பு, சாமை, வரகு போன்ற சிறுதானியங்களில் செய்யப்படும் பாரம்பரிய மிக்க உணவுகள் மற்றும் மூலிகை உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அத்திப்பழ அல்வா, முள்முருங்கை தோசை, செம்பருத்தி இட்லி, குதிரைவாலி பொங்கல், தினைமாவு பணியாரம் என நீளும் உணவு வகைகளை மக்கள் ஆர்வத்துடன் சுவைத்து வருகிறார்கள். உழவன் உணவகத்தில் கடை வைத்துள்ள பழையூர் சீனிவாசன், 'இதனால் எங்கள் வருமானம் அதிகரிச்சிருக்கு. தினமும் 8 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. குறைந்த விலையில் உடம்புக்கு ஆரோக்கியமான உணவுகள் நாங்க கொடுக்கிறதால நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் அதிகமாயிட்டே இருக்காங்க. வெளிநாட்டு பயணிகளும் ஆர்வமாக வந்து சாப்பிட்டுப்பார்த்து பாராட்டுகிறார்கள்.'
உழவன் உணவகத்தை நிர்வகித்துவரும் மதுரை வேளாண் விற்பனைத்துறை அலுவலர் ஆறுமுகம் 'உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகளவில் தனக்கான சந்தையை ஏற்படுத்தி வருகிறது இந்த உழவன் உணவகம். இந்த உழவன் உணவகத்திலிருந்து இலங்கை, ஆஸ்திரேலியா, ஓமன் போன்ற நாடுகளுக்கு ஆர்டரின்பேரில் உணவு வகைகளை ஏற்றுமதி செய்து வருகிறார்கள்'.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

