PUBLISHED ON : செப் 26, 2012

மரம் வளர்ப்பு - 'மலைவேம்பு' - வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்கள், மணல் கலந்த வண்டல் மண் ஏற்றது. 15 அடி இடைவெளி தேவை. ஏக்கருக்கு 200 கன்றுகள். அறுவடைக்காலம் 7 ஆண்டுகள். 3ம் ஆண்டில் தீக்குச்சி, 4ம் ஆண்டில் பிளைவுட், 7ம் ஆண்டுக்கு மேல் மரப்பொருட்கள் தயாரிக்கலாம். வருமானம் ஏக்கருக்கு 7 லட்சம் ரூபாய்.குமிழ்:
வடிகால் வசதி கொண்ட ஆழமான மண் கண்டம் உள்ள அனைத்து வகையான மண்ணிலும் வளரும். 15 அடி இடைவெளியில் நடுவதற்கு ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும். அறுவடைக் காலம் 8 ஆண்டுகள். கதவு, நிலை, ஜன்னல், மரப்பொருட்கள் தயாரிக்க பயன்படும். உத்தேச வருமானம் 14 லட்சம் ரூபாய்.சந்தன மரம்:
உவர்நிலம் அல்லாத மண் கண்டம் உள்ள நிலங்கள் வேம்பு வளரும் நிலங்கள் அனைத்தும் சந்தனத்திற்கும் ஏற்றவை. 16 அடி இடைவெளியில் நடவும். ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவை. அறுவடை செய்ய குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் காத்திருக்கவும். வாசனைப் பொருட்கள், மரச்சாமான்கள், சிற்பங்கள் செய்ய உகந்தது. உத்தேச வருமானம் ஏக்கருக்கு ஒரு கோடி.மூங்கில்:
செம்மண் இருமண்பாடு நிலங்கள் ஏற்றவை. மற்ற நிலங்களில் குழிக்குள் செம்மண் இட்டு நடலாம். 15 அடி இடைவெளியில் நடவு செய்ய ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவை. அறுவடை 5 ஆண்டுகளுக்குப் பிறகு, கட்டட வேலை, காகித ஆலைப் பயன்பாட்டுக்கு தேவை. உத்தேச வருமானம் ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய்.சவுக்கு:
மணல், வண்டல்மண், செம்மண் நிலங்கள் ஏற்றவை. 4 அடி இடைவெளியில் நடுவதற்கு ஏக்கருக்கு 4000 கன்றுகள் தேவைப்படும். 3 ஆண்டுகளுக்குப்பின் அறுவடைக்கு தயாராகும். உபயோகம் - கட்டிட வேலை, எரிபொருள், காகிதக்கூழ் ஆகியவை. வருமானம் ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய்.தேக்கு:
நல்ல வடிகால் வசதி கொண்ட ஆற்று வண்டல் மண் மற்றும் மணற்பாங்கான செம்மண் நிலங்கள் ஏற்றவை. 6 அடி இடைவெளிவிட்டு நடவு செய்ய ஏக்கருக்கு 1000 கன்றுகள் தேவை. அறுவடைக்காலம் 25 ஆண்டுகள். 7 மற்றும் 12ம் ஆண்டுகளில் மரங்களை கலைத்துவிட வேண்டும். மரப்பொருட்களைத் தயாரிக்கலாம். வருமானம் ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய்.கூட்டு மீன் வளர்ப்பில் கூடுதல் லாபம் தரும் 'கோ? மீன்':
ஆறு வகையான வேக வளர்ச்சிக் கெண்டைகள் கூட்டு மீன் வளர்ப்பில் உரிய இருப்படர்த்தியிலும் சரியான இன விகிதங்களிலும் இருப்புச் செய்து வளர்க்கப்படுகின்றன. இம்முறை வளர்ப்பில் நீரின் மேல் மட்டத்திற்கென்றும், நடுமட்டத்திற் கென்றும் அடிமட்டத்திற் கென்றும் தக்க இயல்புகளைக் கொண்ட மீனினங்கள் தேர்வு செய்து வளர்க்கப் படுகின்றன. கோய் கெண்டை, சாதாக் கெண்டையின் அன்மை உறவென்பதால் குளத்தின் அடிமட்டத்தில் வாழும் சாதக் கெண்டைக்குப் பதிலாக கோய் கெண்டையைக் கூட்டுமீன் வளர்ப்பில் இருப்புச்செய்து வளர்க்கலாம். கோய்க் கெண்டைகள் அலங்காரமா னவை. வண்ண மயமானவை. கண்ணைக் கவர்பவை. அழகை விரும்புவோர் ஆராதனை செய்பவை. இத்தகைய கோய் கெண்டைகளுக்கான தேவை அதிகமானால் மீன்வளர்ப்புக் குளத்தில் அடிமட்டத்தில் இருப்புச் செய்வதற்கான 40 சதம் கோய் மீன்களை வளர்த்து பயன்பெறலாம். உள்நாட்டுத் தேவை மற்றும் ஏற்றுமதிக்கான கோய் மீன்களின் உற்பத்தியும் உறுதியாகும். உணவுக்காகும் கெண்டை மீன்களான கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளி, புல் மற்றும் சாதாக்கெண்டைகளை வளர்க்கும் குளத்தில் கிடைக்கும் நிகர வருமானத்தைவிட கோய் வளர்ப்பின் மூலம் கிடைக்கும் லாபம் அதிகமானது. கோய் என்னும் அலங்கார மீன் வளர்ப்பில் அறிவியல் தொழில் நுட்பங்களை திறம்பட அறிந்து, மிகத் தீவிர கோய் வளர்ப்பில் ஊக்கமுடன் ஈடுட்டால் அமோகமான லாபத் தினை அடையலாம். (தகவல்: முனைவர் வே.சுந்தரராஜ், முன்னாள் முதல்வர், மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி. 90030 13634)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்