
புதிய நெல் ரகம் 'திருப்பதி சாரம் 5' : தமிழகத்தில் தென் மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த இரகம் கார் பிந்தய பாசனப் பருவங்களில் பயிரிட ஏற்றது. இந்த இரகம் ஒரு எக்டருக்கு சராசரியாக 6300 கிலோ விளைச்சலைத் தருகிறது. ஏற்கனவே வெளியிடப்பட்டு பயன்பாட்டில் உள்ள அம்பை 16 இரகத்தை விட 14 விழுக்காடு அதிக விளைச்சலைத் தரும். விதைத்த 118 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் இந்த இரகம் தண்டு துளைப்பான், இலை சுருட்டுப்புழு புகையான் ஆகிய பூச்சிகளுக்கு மிதமாக எதிர்ப்புத்திறன் கொண்டது. இந்த இரகத்தின் அரிசி குறுகிய வடிவில் தடிமனானது. அமைலோஸ் அரிசியில் இடைப்பட்ட நிலையில் உள்ளதால் சமைக்க உகந்தது.
மேலும் நல்ல அறவைத்திறன் கொண்டது. நாமக்கல் மாவட்டத்தில் சோதனை முறையில் பயிரிடப்பட்ட போது 11,567 கிலோ விளைச்சலைத் தந்துள்ளது. மேலும் விபரங்களுக்கு தொடர்பு முகவரி: இயக்குநர், பயிர்பெருக்க மரபியல் மையம், த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422 - 661 1215.
வாழையில் எர்வினியா கிழங்கு அழுகல்நோய் : நுண்ணுயிர் கிருமியான பாக்டீரியா (எர்வினியா கரட்டோவோரா) வாழையில் கிழங்கு அழுகல் நோய் ஏற்படுவதற்கு முக்கிய நோய்க்காரணியாக உள்ளது. இந்த நோயின் தாக்கம் திசுவளர்ப்பு வாழையில் (ஜி 9 ) அதிகமாக காணப்படுகிறது.
கிழங்கு அழுகல் தாக்கப்பட்ட வாழையின் நடுக்குருத்து அழுகி வளர்ச்சி குறையும். அதற்கு சற்று முன்னால் தோன்றிய இலை தண்டு பகுதியினுள் சொருகியது போன்று காணப்படும். நோய் தாக்கப்பட்ட மரத்தினை காய்த்த தண்டுப்பகுதி கிழங்கிலிருந்து பிரிந்து கீழே விழும். கிழங்கு மட்டும் மண்ணிலேயே இருக்கும். கிழங்கானது அழுகி ''பார்மலின்'' நாற்றத்தைக் கொண்டிருக்கும்.
நோய் மேலாண்மை : நடவு செய்வதற்கு தேவையான வாழைக்கன்றுகளை நோய் தாக்கப்படாத தோட்டங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். மக்கிய தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை நிலத்தில் இட்டு மண்ணின் வளத்தை மேம்படுத்த வேண்டும். கோடைக்காலத்தில் 3 முதல் 4 முறை நீர்ப்பாய்ச்சியும் குளிர் காலத்தில் நீர் தேங்காதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். சணப்பை ஊடுபயிராக வளர்ந்து வாழை பூப்பதற்கு முன் உழுது விட வேண்டும்.
இரண்டு முதல் 5 மாதம் வரை மாதம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் 2 முதல் 6 கிராம் வீதம் மண்ணில் இட்டு நீர்பாய்ச்ச வேண்டும். வாழைக்கன்றை காப்பர்ஆக்ஸி குளோரைடு 4 கிராம் / லிட்டர் ஸ்ட்ரெப்டோசைக்ளின் 0.3 கிராம் / லிட்டர் வீதம் அதாவது காலையில் 45 நிமிடம் வரை ஊறவைத்து அதன் பின்பு நடவு செய்ய வேண்டும். இதே கலவையை நடவு செய்த முதல் மாதம் கழித்து கிழங்கினைச் சுற்றி ஊற்ற வேண்டும்.
பருவ காலத்தில் உயிர்க்கட்டுப்பாட்டு காரணியான சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் கரைசலை 3 முறை வாழைக்கு அளிக்க வேண்டும். வாழை நடவு செய்த பின், ஒரு வாழைக்கன்றுக்கு நுண்ணுயிர் கட்டுப்பாட்டு காரணியான டிரைக்கோடெர்மா விரிடி 50 கிராம் வீதம் நடவு செய்த 2 மம் 4 மாதங்களுக்கு பின்பு
இட வேண்டும். (தகவல் : முனைவர் செ.தங்கேஸ்வரி, முனைவர் எஸ்.கே.மனோரஞ்சிதம், தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர், பொள்ளாச்சி. போன்: 04253 - 288 722).
வீரிய ஒட்டு சிகப்பு தீவனச் சோளம் : மற்றும் ஐஸ்வர்யா சன்னரக நெல், ஜெயந்தி அதி சன்னரக நெல் மற்றும் பொதுவான ADT மற்றும் ஆந்திர நெல்லூர், ரக விதைகளும் BPT போன்ற சான்றிதழ் பெற்ற எல்லா நெல் விதைகளும் வாங்க தொடர்பு முகவரி : ஸ்ரீகிருஷ்ணா சீட்ஸ், WCR பிளாட் நம்பர் 13A, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், செல்லாயி அம்மன் கோயில் அருகில், துவாகுடி, திருச்சி-625 015. போன்: 75988 77573.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

