
நெல் சாகுபடி - உயர் விளைச்சல் தரும் நெல் இரகங்கள் : குறுகிய கால இரகங்கள் (110 நாட்கள்) - ஏடிடி43, ஏடிடி45, ஏஎன்டி16 கோ51. மத்திய கால இரகங்கள் (135 நாட்கள்) ஏடிடி39, ஏடிடி 49, கோ-49, கோ-50.
நெல் விளைச்சலை மேம்படுத்த : விதைகளை உப்புநீர் கரைசலின் (18 லிட்டர் நீரில் 3 கிலோ உப்பு) மூலம் தரமான விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். நன்கு மூழ்கிய விதைகளை சுத்தமான நீரில் கழுவி பின் விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான 3 கிலோ விதையுடன் 30 கிராம் சூடோமோனாஸ் புளுரசன்ஸ், ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம் (200 கிராம்), ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா (200 கிராம்) அல்லது 2 பாக்கெட் அசோபாஸ் (400 கி) உடன் கலந்து இரவு முழுவதும் ஊறவைத்து விதை நேர்த்தி செய்யவும்.
நடவு வயலில் ஏக்கருக்கு 8-10 கிலோ பசுந்தாள் உர விதையை விதைத்து பூப்பதற்கு முன் (40-45 நாட்களில்) மடக்கி உழவும். உழுவதற்கு முன் தொழுஉரம் அல்லது மக்கிய உரம் ஏக்கருக்கு 5 டன்கள் இட வேண்டும். ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சம் மற்றும் 10 கிலோ டிஎன்ஏயு நுண்ணூட்டக் கலவை அல்லது ஜிங்க் சல்பேட் ஆகியவற்றை 20 கிலோ மணலுடன் கலந்து கடைசி உழவின்போது இடவும்.
ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஒவ்வொன்றும் 4 பாக்கெட் (800 கிராம்) அல்லது அசோபாஸ் 8 பாக்கெட் (1600 கிராம்), சூடோமோனஸ் புளூரசன்ஸ் (பிஎப் 1) ஏக்கருக்கு 1 கிலோ ஆகியவற்றை 20 கிலோ மணலுடன் கலந்து நடவிற்கு முன்பு இடவும். இரசாயன உரங்கள் இடும்போது மண் பரிசோதனைப்படி தேவையான உரங்களை இட வேண்டும். குறுகிய மற்றும் மத்திய கால இரகங்களுக்கு தழை,மணி, சாம்பல் சத்துக்கள் முறையே ஏக்கருக்கு 50:20:20 கிலோவும் மற்றும் 60:20:20 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.
தழைச்சத்தை 4 சம பாகங்களாக பிரித்து அடியுரம், தூர்கட்டும் பருவம், கதிர் உருவாகும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் இட வேண்டும்.
சோளத்தில் உயர் விளைச்சல் பெற - உயர் விளைச்சல் இரகங்கள் : கோ-28, கே.நெட்டை கே.8, கோ.30
வீரிய ஒட்டு இரகங்கள் : டி.என்.ஏ.யு. சோளம் வீரிய ஒட்டு கோ.5, மற்றும் பதிவு செய்யப்பட்ட வீரிய ஒட்டு இரகங்கள். இறவை மற்றும் மானாவாரி சோளத்திற்கு ஒரு ஏக்கருக்கு 4 முதல் 5 கிலோ விதை தேவைப்படும். பொட்டாசியம் டை-ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமுடன் ஒரு லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்திய பின் விதைப்பதால் பயர் வறட்சியைத் தாங்கி வளரும்.
இறவைப் பயிருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் முறையே 36:18:18 கிலோவும், மானாவாரி பயிருக்கு தழை மற்றும் மணிச்சத்துக்கள் 16:8 மற்றும் நுண்ணூட்டக் கலவை ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.
கம்பில் உயர் விளைச்சல் பெற : ஒட்டு இரகம் கோ.9 மற்றும் ஐசிஎம்வி 221. இறவைப்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை, தகுந்த இடைவெளி (45x15 செ.மீ) பின்பற்றி சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.
மானாவாரி விதைப்புக்கு கம்பு விதைகளை கடினப்படுத்த 2 சதம் பொட்டாசியம் குளோரைடு அல்லது 3 சதம் சோடியம் குளோரைடு கரைசலில் 16 மணி நேரம் ஊறவைத்து பின்பு 5 மணி நேரம் நிழலில் உலர வைத்து பின்பு விதைக்க வேண்டும். நுண்ணூட்டசத்து கலவை ஏக்கருக்கு 5 கிலோ வீதம் இட வேண்டும்.
வீரிய ஒட்டு இரகங்களுக்கு ஏக்கருக்கு 32:16:16 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும். இரகங்களுக்கு ஏக்கருக்கு 28:14:14 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும்.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

