PUBLISHED ON : பிப் 29, 2012

வாழையில் மதிப்பூட்டுதல்: வாழைப்பழத்தில்இருந்து உலர் வாழைப்பழம், பொடி, இணை உணவு, சர்க்கரைக் கரைசலில் வாழைப்பழம், கூழ், தெளிந்த வாழைப்பழ பானம், ஸ்குவாஷ், கார்டியல் ஜாம், ஜெல்லி, சட்னி, கெட்சப், மிட்டாய், பார், ஒயின், கேண்டி, ஊறுகாய், அல்வா, பாயசம், சிரப், தேன் மற்றும் சீவல்; வாழைக்காயிலிருந்து மாவு, சாஸ், சிப்ஸ், ஊறுகாய் மற்றும் கார உருண்டை; வாழைப்பூவில்இருந்து தொக்கு, பக்கோடா, வடை; வாழைத் தண்டிலிருந்து ஜுஸ், இனிப்பு கேண்டி ஆகியவைகளை குறைந்த செலவில் தயாரித்து வீட்டளவில் சிறு தொழிலாக தொடங்கி விற்பனை செய்யலாம். மேலும் வாழை உணவுப்பொருட்களில் தேவையான அளவு பாதுகாப்பான்களைச் சேர்ப்பதன் மூலம் மூன்றிலிருந்து 12மாதங்கள் வரையில் கெடாமல் இருக்கும். இவ் வகை உணவுப் பொருட்களைத் தயாரிப்பதன் மூலம் அறுவடைக்குப்பின் வீணாவதைத் தடுப்பதுடன் அதிகளவு வருமானமும் ஈட்டலாம். மேலும் வாழை உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலையும் வேலைவாய்ப்பும் கிடைக்கும். (தகவல் முனைவர் லே.கற்பகப்பாண்டி, முனைவர் அ.சகுந்தலை, வேளாண்மை அறிவியல் நிலையம், த.வே. பல்கலைக்கழகம், சிறுகமணி, திருச்சி-639 105. 97864 87103).
இருபடிப்பாத்தி: 'வழக்கமான முறையில் வெங்காயம் போடுறப்ப அதிகளவில் புண்ணாக்கு மேலுரமாக ஊட்டம் கொடுக்கணும். களை எடுப்புச் செலவும் அதிகமாகும். இரு படிப்பாத்தி அமைக்கிறப்போ செலவு குறைவதோடு வேலையும் குறைவு' என்று கூறுகிறார் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா செங்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவசண்முகம். இவர் வேளாண் பொறியியல் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றிக்கொண்டே விவசாயத்தையும் செய்துவருகிறார். இவர் ஒரு இயற்கை விவசாய ஆர்வலர். அவருடைய 4 ஏக்கர் நிலத்தில் நெல் ஒரு ஏக்கர், சின்ன வெங்காயம் 2 ஏக்கர், மஞ்சள், கருணைக்கிழங்கு 20 சென்ட் மற்றும் காய்கறிகள் 5 சென்ட் நிலத்தில் போட்டு இருக்கிறார். 5 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் வெற்றிகரமாகச் செய்கிறார்.
தேர்வு செய்த நிலத்தில் முக்கால் அடி ஆழத்திற்கு உழவு ஓட்ட வேண்டும். 20 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்தில் தெளிப்புநீர் குழாயைப் பதிக்க வேண்டும். தெளிப்புநீர் திறப்பான் 3 அடி உயரத்தில் இருக்க வேண்டும். 20 அடி தூரத்திற்கு ஒரு திறப்பான் அமைத்தால் போதும். 4 அடி அகலம், 25 அடி நீளம், முக்கால் அடி ஆழத்திற்கு மண்ணைப் பறித்து இருபுறமும் ஒதுக்கிவைக்க வேண்டும். குழியின் உள்ளே கடப்பாறையால் குத்தி மண்ணைக்கிளற வேண்டும். பின்னர் குழிக்குள் பாதி உயரத்திற்கு கம்பஞ்சக்கை, எள்ளு சக்கை, மக்காச்சோள சக்கை மற்றும் இலை தழைகள் என அனைத்தையும் இட்டு அதன்மீது தொழு உரத்தையும் போட்டு நிரப்ப வேண்டும். அதன்பிறகு மேல் மண்ணைப் பரப்பவேண்டும். இப்போது தரையிலிருந்து முக்கால் அடி உயரத்திற்கு மேட்டுப்பாத்தி அமைக்கப்பட்டிருக்கும். இது போல 2 அடி இடைவெளியில் வரிசையாக பாத்திகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.
பாத்திகளில் சணப்பு, அவுரி, கம்பு, சோளம், எள், பச்சைப் பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பல்தானிய விதைகளை சம விகிதத்தில் கலந்து விதைக்க வேண்டும். 75 சென்ட் நிலத்துக்கும் சேர்த்து மொத்தமாக 15 கிலோ விதை தேவைப்படும். அனைத்துப் பாத்திகளுக்கும் பொதுவாக 10 அடி இடைவெளிக்கு ஒருவிதை வீதம் ஆமணக்கு விதையை ஊன்ற வேண்டும். தொடர்ந்து 20 நாட்களுக்கு ஒருமுறை 7 லிட்டர் அமுதக்கரைசலை 70 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியின்மீது தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
இரண்டு மாதங்களில் பல தானியப்பயிர்கள் சுமார் 4 அடி உயரத்திற்கு வளர்ந்திருக்கும். ஆமணக்குச் செடியை தொந்தரவு செய்யாமல் பலதானியப் பயிர்களை மட்டும் வேரோடு பிடுங்கி, பாத்தி முழுவதும் பரப்ப வேண்டும். அதன்மீது கம்பு, எள், மக்காச்சோளச் சக்கைளைப் போட்டு மூடாக்கு அமைத்து அரை அடி இடை வெளிக்கு ஒரு விதை வெங்காயம் என்ற கணக்கில் ஊன்ற வேண் டும். மூடாக்கின்மீது அழுத்திப் பதியுமாறு ஊன்றினால் போதுமானது. பலதானியத்துக்கு தெளித்ததுபோலவே அமுதக்கரைசலைத் தெளிக்க வேண்டும்.
நடவு செய்த ஒரு மாதத்துக்குள் களைகள் முளைத்தால் அவைகளைக் கைகளால் நீக்க வேண்டும். நடவு செய்த 70ம் நாளுக்கு மேல் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்யலாம். மகசூல் 75 சென்டிலிருந்து 4500 கிலோ வெங்காயம் கிடைத்தது. செலவு போக நிகர லாபமாக ரூ.64 ஆயிரம் கிடைத்தது. மேலும் விபரங்களுக்கு சிவசண்முகம், 94433 02650.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

