/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சோலார் தொழில்நுட்பம்: எல்லையில்லா லாபம் தரும் எள்
/
சோலார் தொழில்நுட்பம்: எல்லையில்லா லாபம் தரும் எள்
PUBLISHED ON : ஆக 29, 2018

சோலார் பம்ப் செட் மூலம் பல பயிர் பண்ணையம் செய்து, ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை லாபம் ஈட்டி வருகிறார் காரைக்குடி அருகே கல்லாங்குடியை சேர்ந்த கே.எம்.குமாரசாமி குமரப்பன்.
அவர் கூறியதாவது, காரைக்குடி அருகே கல்லாங்குடியில் 18 ஏக்கரில் சோலார் பம்ப் செட் மூலம் விவசாயம் செய்து வருகிறேன். சாக்கோட்டை வேளாண்துறை உதவியுடன் எட்டு ஏக்கரில் உளுந்து (வம்பன் 6 ரகம்) விதைப்பண்ணைக்காக பயிரிடப்பட்டுள்ளது. 65 நாள் பயிர். ஏக்கருக்கு 400 கிலோ கிடைக்கும்.
5 ஏக்கரில் டி.எம்.யு., 3 ரக எள் பயிரிடப்பட்டுள்ளது. எல்லையில்லா லாபம் தருவதில் எள் முதன்மை வகிக்கிறது. நிலத்தை மூன்று முறை உழுத பின்பு மானாவாரியில் புழுதி விதைப்பாக விதைக்கலாம். 80 நாளில் பலன் கொடுக்கும்.
ஏக்கருக்கு 2 கிலோ விதை தேவை.
விதைத்த 3வது நாளில் ஈரம் இருக்கும் நிலையில் களைக்கொல்லி தெளிக்க வேண்டும். 25வது நாள் கை மூலம் களையெடுப்பு, 27வது நாளில் ஏக்கருக்கு 20 கிலோ டி.ஏ.பி., 15 கிலோ பொட்டாஷ், ஒரு கிலோ போராக்ஸ் மேல் உரமாக இட வேண்டும். 30வது நாள் (பூப்பதற்கு முன்பு) டி.ஏ.பி., கரைசலை தெளிக்க வேண்டும்.
ஏக்கருக்கு அரை கிலோ போதுமானது. காய்க்கும் சமயத்தில் பூச்சி மருந்து (டிரை அசோபாஸ் ஏக்கருக்கு 400 மி.லி.,) தெளிக்க வேண்டும்.
ஏக்கருக்கு 300 கிலோ வரை கிடைக்கும்.
ரூ.6 ஆயிரம் மட்டுமே செலவாகும். 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்.
மீன் பண்ணை
மிகவும் எளிதாக மாதம் ரூ.15 ஆயிரம் என்ற அளவில் வருமானம் தருவது மீன் பண்ணை. இதுவும் ஒருவகையில் விவசாயமே. முக்கால் ஏக்கரில் இதற்காக குளம் வெட்டப்பட்டுள்ளது.
நடுப்பகுதி 11 அடி வரை ஆழம் கொண்டது. 6 ஆயிரம் ரோகு குஞ்சு விடப்பட்டுள்ளது. முதல் மாதத்தில் 25 கிலோ சோள மாவும், 75 கிலோ தவிடும் மீன்களுக்கு இரையாக வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் இதன் அளவை அதிகரித்து வர வேண்டும்.
ஆறாவது மாதத்தில் 50 கிலோ சோளம், 150 கிலோ தவிடு தேவை. ஆறு, ஏழாவது மாதத்தில் மீன்களை பிடிக்கலாம். மாதம்15 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் லாபம் கிடைக்கும். ஒரு மீன் பண்ணை இருந்தால் ஒரு குடும்பம் வாழ்நாளுக்கும் கஷ்டப்பட வேண்டியதில்லை. போர்வெல் தண்ணீர் குளத்தில் பாய்ச்சப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் குறைவதில்லை. பல பயிர் பண்ணையம் மூலம் மாதம் 4 லட்சம் ரூபாய் வரை லாபமாக கிடைக்கிறது, என்றார்.
இவரை பாராட்ட: 94433 29838.
டி.செந்தில்குமார்
காரைக்குடி.

