கோடை உழவு மானாவாரி நிலத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற தவறான எண்ணம் பரவலாக உள்ளது. குறிப்பாக கால்வாய் பாசனம் மூலம் நெல் சாகுபடி செய்யும் மாவட்டங்களில் இந்த கோடை உழவு அதிகமாக செய்வதில்லை. உதாரணமாக காவிரி பாசனப்பகுதியில் மண், பெரும்பகுதி களியாக உள்ளது. நெல் மற்றும் பயறுவகை பயிர்களில் அறுவடைக்குப் பின் நிலம் சுமார் நான்கு முதல் ஐந்து மாதங்கள் சாகுபடி செய்யாமல் கரம்பாகவே உள்ளது. கோடை காலத்தில் களிமண் சுருங்குவதால் ஆழமான வெடிப்பு ஏற்பட்டு நிலத்தின் அடிமண் ஈரம் ஆவியாகிறது. மேலும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் கழித்து இந்த நிலத்தை நெல் சாகுபடி செய்ய நீர் பாய்ச்சும்பொழுது வேர் உறிஞ்சும் மட்டத்திற்குக் கீழே சென்றுவிடுகிறது. உழவின் பொழுது கட்டிகள் பெரிதாக உடைந்து வளமான மேல் மண் வெடிப்புகள் வழியாக அடிமட்டத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. நிலத்தை தயார் செய்ய அதிக அளவு நீர் சுமார் 60 மில்லி மீட்டர் அதாவது உற்பத்திக்கான நீர் தேவையில் ஐந்து சதவீதம் கூடுதலாக தேவைப்படுகிறது. நிலம் தயார் செய்யத் தேவைப்படும் நாட்களும் அதிகமாகின்றன. இவையெல்லாம் போக்கி, மண் வளத்தைக் காக்கவும், நடவு நிலத்தைத் தயார் செய்யவும், நீரின் தேவையைக் குறைக்கவும் மிகச்சிறந்த வழி நஞ்சை நிலங்களில் கோடை உழவு செய்து அதிக வெடிப்பு விடாமல் மண்ணைப் பொலபொலவென்று வைப்பதே ஆகும்.
பயிர் அறுவடைக்குப் பின் எஞ்சியுள்ள கட்டைப்பயிர் பெரும்பாலான பூச்சிகளுக்கும் நோய்க்கிருமிகளுக்கும் உணவாகவும், உறைவிடமாகவும், இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் அமைகிறது. கோடை உழவு செய்வதால் இந்தக் கட்டைப்பயிர்கள் மண்ணில் மூடப்பட்டு மக்கிவிடுகிறது. இதனால் பூச்சி மற்றும் நோய்த்தொல்லை குறைகிறது. மேலும் இந்தக் கட்டைப்பயிர் உரமாகி, நுண்ணுயிர்களுக்கு உணவாகி மண்வளத்தைக் கூட்டுகிறது. மண்ணில் காற்றோட்டம் அதிகமாகி நுண்ணுயிர் எண்ணிக்கை பெருகி மண் வளமாகிறது. மண்ணில் வாழும் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகிறது.
சாதாரணமாக மண்ணில் கூட்டுப் புழுக்களாக வாழும் பூச்சி இனங்கள், எள் கொம்புப்புழு, காய்த்துளைப்பான், புகையிலை புழு, சிவப்பு கம்பளிப்புழு, சுருள்பூச்சி, பழ ஈ, துவரை காய் ஈ, பூசணி வண்டு, வேர்ப்புழு, முருங்கை கம்பளிப் புழு போன்றவைகள் கூட்டுப்புழு வாக மண்ணில் வாழ்கிறது. இந்த கூட்டுப் புழுக்கள் மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டு கோடை காலத்தில் அதிக சூரிய வெப்பத்தாலும் பறவைகளா லும் அழிக்கப்படுகிறது. கம்பு, சோளம், மக்காச்சோளத்தை தாக்கும் அடிச்சாம்பல் நோய்க்கிருமிகள், நிலக்கடலை, பருத்தி, பயறு வகை பயிர்களை தாக்கும் வேர் அழு கல் நோய்க்கிருமிகள், கரும்பை தாக்கும் செவ்வழுகல் நோய்க்கிருமிகள், பருத்தி, வாழை, தென்னையை தாக்கும் வாடல் நோய்க்கிருமிகள், தக்காளி, உருளையை தாக்கும் இலைக்கருகல் நோய்க்கிருமிகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
மண்ணில் இறுக்கம் தளர்ந்து நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது. இதனால் நுண்ணுயிர்கள் நன்றாக பெருக்கமடைந்து பயிர்களுக்கு சத்துக்கள் கிடைக்க வழிவகை செய்கிறது. வேர்கள் நன்றாக வளர்ந்து மண்ணின் ஆழத்திலுள்ள நீரையும் சத்துக் களையும் எடுத்து செழிப்பாக வளர்கிறது. மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கிறது. ஒரு ஆய்வு முடிவின்படி சோளத்தில் 23 சதம் கூடுதல் மகசூலும் கேழ்வரகில் 20 சதம் கூடுதல் மகசூலும் கிடைக்கிறது. எனவே உழவர் பெருமக்கள் அனைவரும் கோடை உழவு செய்து மண் வளத்தையும் அதிக விளைச்சலையும் பெற வேண்டும். (தகவல்: பேராசிரியர் ச.பன்னீர்செல்வம், கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி. போன்: 98422 79351)
-கே.சத்தியபிரபா, உடுமலை.