sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கார்த்திகைப் பட்டத்தில் கரிசல் மண்ணில் சூரியகாந்தி

/

கார்த்திகைப் பட்டத்தில் கரிசல் மண்ணில் சூரியகாந்தி

கார்த்திகைப் பட்டத்தில் கரிசல் மண்ணில் சூரியகாந்தி

கார்த்திகைப் பட்டத்தில் கரிசல் மண்ணில் சூரியகாந்தி


PUBLISHED ON : டிச 21, 2011

Google News

PUBLISHED ON : டிச 21, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐப்பசி மழை முடிந்து கார்த்திகைப் பட்டத்தில் கரிசல் நிலங்களில் மணிலாவிற்குப் பதில் சூரியகாந்தி பயிரைப் பாசனம் கொடுத்து சாகுபடி செய்யலாம். சூரியகாந்தி சாகுபடி மணிலா சாகுபடியைவிடச்சுலபமானது. சூரியகாந்தி பயிரின் வயது 80-85 நாட்கள்தான். மணிலாவின் வயதை விடக்குறைவு. இக்கட்டுரையில் சூரிய காந்தியின் சாகுபடி முறைகள், பொருளாதாரம் போன்றவைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

சாகுபடி முறைகள்: கார்த்திகை சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் அட்வான்ஸ் கார்கில், கே.பி.எஸ்.எச்.1, மாடர்ன் மற்றும் கோ.3 போன்றவை. விவசாயிகள் தங்கள் பகுதியில் வேறு ரகங்கள் அதாவது (கார்த்திகைப் பட்டத்திற்கு சாகுபடி செய்வதற்கு ஏற்றது) கிடைத்தால் அவை களையும் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும். நீண்டகால விதை ரகங்களை 60க்கு 15 செ.மீ. இடைவெளியிலும் குறுகிய கால விதை ரகங்களை 30க்கு 15 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும். விதை முளைப்பு சீராக இருப்பதற்கு தண்ணீரில் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

நீண்டகால ரகமாக இருந்தால் சதுரமீட்டரில் 12 செடிகளும், குறுகிய கால ரகமாக?இருந்தால் சதுரமீட்டரில் 24 செடிகளும் இருக்கும்படி கவனித்துக்கொள்ள வேண்டும். விதைமூலம் பரவும் சாம்பல்நோய், இலைப்புள்ளி நோய் இவைகள் முளைத்து வரும் இளஞ்செடிகளை பாதிக்காமல் கவனித்துக்கொள்ள வேண்டும். இதற்கு விதைநேர்த்தி செய்ய வேண்டும். அதாவது ஒரு கிலோ விதையுடன் 42 கிராம் திரம் என்னும் மருந்தைக் கலந்து விதைக்க வேண்டும்.

எரு, உரமிடுதல்: சூரியகாந்தி பயிருக்கு இயற்கை உரம் தவறாமல் இடவேண்டும். ஏக்கருக்கு 10 முதல் 20 வண்டிகள் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு நிலத்தைப் பண்பட உழவேண்டும். தொழு உரத்தோடு உயிர் உரமாகிய அசோஸ்பைரில்லத்தையும் கலந்து இடவேண்டும். 10 கிலோ தொழு உரம், 10 கிலோ மண் இவற்றுடன் 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தையும் கலந்து வயலில் சீராகத் தூவவேண்டும். ஏக்கருக்கு அடி உரமாக தழைச்சத்து 8 கிலோ, மணிச்சத்து 8 கிலோ, சாம்பல்சத்து 8 கிலோ ஆகியவைகள் கிடைப்பதற்கு ஏற்ற ரசாயன உரங்களை இடவேண்டும். இதற்கு 18 கிலோ யூரியா, 50 கிலோ சூப்பர் மற்றும் 14 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் இடவேண்டும். கடைசியாக 5 கிலோ நுண்ணூட்டச் சத்துக்களை 15 கிலோ ஆற்று மணலுடன் கலந்து ஏக்கர் பரப்பில் சீராகத் தூவவேண்டும்.

விதைத்தல்: விதையுடன் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தைக் கலந்து விதைக்கலாம். விதைக்கும் நிலத்தில் விதையை உளுந்து தெளிப்பது போல் தெளித்து விதையை மண்ணால் மூடி, பின் பாத்திகட்டி பாசனம் செய்து சதுரமீட்டரில் ரகங்களுக்குத் தக்கவாறு 12 அல்லது 24 செடிகள் உள்ளபடி செய்து அதிகமாக இருக்கும் செடிகளைக் களைந்துவிடலாம். இல்லையேல் பாருக்கு பார் 60 அல்லது 30 செ.மீ. உள்ளபடி அமைத்துக்கொண்டு விதையை பாருக்கு பக்கவாட்டில் 15 செ.மீ. இடைவெளியில் ஊன்றலாம். 10வது நாளில் நன்கு வளர்ந்த ஒரு செடியை விட்டு வைத்து மற்ற செடிகளைக் களையெடுக்க வேண்டும்.

களை, மேலுரம்: சூரியகாந்தி பயிருக்கு ஒருமுறை களையெடுத்து நிலத்தைக் கொத்திவிட்டு பின் மீதமுள்ள தழைச் சத்தாகிய 18 கிலோ அளவை மேலுரமாக இடவேண்டும். இதற்கு 18 கிலோ யூரியா இடவேண்டும். செடிகள் நன்கு வளர்ந்து பூமியில் நிழல் விழும்போது களை முளைக்காது. இதனால் இரண்டாவது களை க்ஷயெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

பாசனம்: சூரியகாந்திக்கு பாசன மேலாண்மையை சரியாகச் செய்தால் நல்ல மகசூல் கிட்டும். கீழ்க்கண்ட ஆறு கட்டங்களில் பாசனம் தவறாமல் கொடுக்க வேண்டும். விதை விதைப்பதற்கு முன், விதைத்த நான்காம் நாள் உயிர்த்தண்ணீர், விதைத்த 20ம் நாள், 35ம் நாள், 40ம் நாள், 60ம் நாள், 20-25வது நாள் மொட்டுகள் உருவாகும் சமயம், 30-45வது நாள் பூக்கள் மலரும்போது, 50-60வது நாள் விதை முற்றும் சமயம், மண்ணில் ஈரம் இருக்கும்படியாக நீர்பாய்ச்ச வேண்டும். நிலத்தில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும். அறுவடைக்கு ஒரு வாரம் முன் பாசனத்தை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும்.

பயிர் ஊக்கி தெளித்தல்: விதைத்த 30வது நாள் ஏக்கருக்கு 111 மில்லி பிளானோபிக்ஸ் பயிர் ஊக்கியை 250 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இது பூக்களில் அதிக விதை பிடிக்க உதவுகின்றது.

பூக்களைத் தடவுதல்: சூரியகாந்தியில் அயல் மகரந்த சேர்க்கையை ஏற்படுத்தி அதிக விதை உற்பத்தி செய்யலாம். இதற்கு பூ மலர்ந்தபிறகு காலை 9 மணியில் இருந்து 11 மணிக்குள் தொடர்ந்து 10 நாட்களுக்கு மற்றொரு பூவுடன் உரசும்படி செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு: இலை தின்னும் புழுக்கள், வண்டுகள், பூ அழுகல் நோய், துரு நோய் இவற்றை கட்டுப்படுத்திட ஏக்கருக்கு 250 மில்லி எண்டோசல்பான், 500 கிராம் டைத்தேன் எம்.45 இவற்றை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். பூக்களில் விதைகள் முதிர்ச்சி அடையும் போது பச்சைக்கிளிகள் பூக் கொண்டைகளை அலகால் கொத்தி கடும் சேதத்தை உண்டாக்கும். டப்பாக்களைத் தட்டி சத்தம் எழுப்பி கிளிகளைத் துரத்த வேண்டும்.

அறுவடை: சூரியகாந்திப் பூக்களின் அடி பாகம் மஞ்சள் நிறமாக மாறிய உடன் பூக்களை அறுவடை செய்து களத்துமேட்டில் காயப்போட வேண்டும். பூக்கள் சரியாக காயாமல் இருக்கும்போது கோணிச்சாக்கில் சேமித்தால் அவற்றில் பூசனம் வளர்ந்து நஷ்டம் ஏற்படும். களத்துமேட்டில் அடிக்கடி பூக்களைக் கிளறவிட்டு நன்கு காயப்போடவேண்டும். நன்கு உலர்ந்த பூக்களை தடியால் அடித்து விதையைப் பிரித்து அவற்றை சுத்தம் செய்து விற்பனை செய்துவிடலாம்.

பொருளாதாரம்: கட்டுக்கோப்பு சாகுபடி முறைகளை நன்கு கவனித்து அனுசரித்தோமானால் ஏக்கரில் சுமார் 1000 கிலோ வரை மகசூலாகப் பெறமுடியும். சூரியகாந்தியை திருவண்ணாமலையில் உள்ள டான்காப் நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கிக்கொள்ளும். மேலும் சேலத்தைச் சேர்ந்த செவ்வாய்பேட்டையில் உள்ள வியாபாரிகளுக்கும் சூரியகாந்தியை விற்க முடியும். விவசாயிகள் தங்கள் மதிநுட்பத்தை பயன்படுத்தி சரக்கினை விற்பனை செய்து கணிசமான அளவு லாபம் எடுக்க முடியும். சிறந்த விவசாயிகள் ஏக்கரில் ரூ.10,000 வரை லாபம் எடுக்கிறார்கள்.

-எஸ்.எஸ்.நாகராஜன்.






      Dinamalar
      Follow us