sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மானாவாரிக்கு ஏற்றது புளி சாகுபடி

/

மானாவாரிக்கு ஏற்றது புளி சாகுபடி

மானாவாரிக்கு ஏற்றது புளி சாகுபடி

மானாவாரிக்கு ஏற்றது புளி சாகுபடி


PUBLISHED ON : ஜன 29, 2025

Google News

PUBLISHED ON : ஜன 29, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரும்பாலும் விதைகள் மூலமாகவும் சிறியளவில் ஒட்டுக் கன்றுகள் மூலம் புளிய மர பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. 8 முதல் 12 மாத வயதுள்ள நாற்றுகள் நடுவதற்கு ஏற்றது.

விதைகள் மூலம் உற்பத்தி செய்த கன்றுகளை நடவு செய்யும் போது 8 முதல் 10 ஆண்டுகள் கழித்து தான் மரங்கள் காய்ப்புக்கு வரும். ஒட்டுச் செடிகள் நடவு செய்த 4 முதல் 5ம் ஆண்டில் பலன் தருகின்றன.

பக்க ஒட்டு முறையில் தாய் மரக்கிளைகளையும் அடிக்கன்றுகளையும் இணைத்துக் கட்டும் போது 80 சதவீத கன்றுகள் வெற்றி கிடைக்கும். வேர்ச்செடிகளாக 15 செ.மீ. கனமுள்ள 10 முதல் 15 செ.மீ. உயரமுள்ள 6 மாத நாற்றுக்களை பயன்படுத்த வேண்டும். குறுகிய இடைவெளியில் நட்ட தாய் செடிகள் வளர்ந்த பிறகு ஒட்டு கிளைகளில் நுண் ஒட்டு பயிர் பெருக்க முறை பயன்படுத்தப் படுகிறது.

மே முதல் ஜூன் மாதங்களில் சேகரிக்கப்பட்ட குருத்துகள் அதிகளவில் செடியாக மாறுகின்றன. 9 மாத வயதுள்ள புளிய நாற்றுகளில் மொட்டு கட்டுதல் முறையில் பயிர் பெருக்கம் செய்யும் போது 80 முதல் 90 சதவீத வெற்றி கிடைக்கும். விண் பதிய முறையில் பயிர் பெருக்கம் செய்ய தண்டுகளை ஐ.பி.ஏ., 4000 பி.பி.எம்., கரைசலில் நனைக்க வேண்டும். மென் தண்டு ஒட்டு முறையில் மார்ச் முதல் ஏப்ரல் வரை பயிர் பெருக்கம் செய்யலாம்.

பருவங்களும் இடைவெளியும்

புளிய நாற்றுக்களையும், ஒட்டுக் கன்றுகளையும் நடுவதற்கு ஜூன் முதல் ஜூலை அல்லது அக்., முதல் நவம்பர் ஏற்றவை. கன்றுகளை நடவு செய்ய ஜூன், ஜூலையில் 1 மீட்டர் நீளம், அகலம், ஆழத்தில் குழிகளை 10க்கு 10 மீட்டர் இடைவெளியில் எடுக்க வேண்டும். இம்முறையில் எக்டேருக்கு 100 செடிகள் தேவைப்படும். ஒட்டுக்கன்று குட்டையாகவும் குறைவாகப் படர்வதால் 8க்கு 8 மீட்டர் இடைவெளியிலும் அடர் நடவு முறையில் 5க்கு 5 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யலாம்.

10 கிலோ தொழுவுரம், மேல் மண் நிரப்பி குழியின் மத்தியில் ஒட்டுக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒட்டுப்பாகம் தரை மட்டத்திலிருந்து மேலே இருக்க வேண்டும். அருகில் குச்சிகளை நட்டு கயிறால் கட்ட வேண்டும்.

நீர், உர நிர்வாகம்

ஒரு மரத்திற்கு ஆண்டிற்கு 200 கிராம் தழைச்சத்து (435 கிராம் யூரியா), 150 கிராம் மணிச்சத்து (940 கிராம் சூப்பர் பாஸ்பேட்), 250 கிராம் சாம்பல் சத்து (420 கிராம் பொட்டாஷ்), 25 கிலோ தொழுவுரம், 2 கிலோ வேப்பம்புண்ணாக்கு தேவை. இவற்றை இரு சம பாகமாக பிரித்து பருவமழை காலத்தில் ஒரு முறையும், பூக்கும் சமயத்தில் ஒரு முறையும் மண்ணில் இட வேண்டும்.

இது ஒரு மானாவாரி பயிர். வறட்சியைத் தாங்கும் என்றாலும் ஒட்டுக் கன்றுகளை நட்ட பிறகு சில மாதங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது நல்லது. நட்ட செடிகள் விரைவில் வேர்ப்பிடிக்க இந்த ஈரப்பதம் போதுமானது. வறட்சி காலங்களில் 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் புளிய மரத்தின் வளர்ச்சியை ஊக்குவித்து விளைச்சலை அதிகரிக்கும்.

அறுவடையும் கவாத்தும்

புளியின் ஒட்டுக் கன்றுகளை நட்ட 2 ஆண்டுகள் வரை ஒட்டுப் பகுதிக்கு கீழே வளரும் பக்கக் கிளைகளை அகற்றவேண்டும். நடவு செடியின் இளம் பருவத்தில் ஒரே ஒரு தண்டை 4 அடி உயரம் வரை வளரச் செய்து பின் அதற்கு மேல் எல்லா திசைகளிலும் பக்கக் கிளைகளை வளரவிட வேண்டும். புளியில் ஒவ்வொரு ஆண்டும் சீரான விளைச்சல் பெற கவாத்து செய்ய வேண்டும். மரங்களில் அறுவடை முடிந்தவுடன் (ஏப்ரல் முதல் மே) 5வது கிளையிலிருந்து வரும் மரக்கிளையை கவாத்து செய்ய வேண்டும். காய்ந்த கிளைகள், நோய் தாக்கிய மற்றும் குறுக்கும் நெடுக்குமாக வளரும் கிளைகளை வெட்டிவிட வேண்டும்.

இதன் மூலம் நல்ல விளைச்சலும் தரமான பழங்களும் கிடைக்கும். புளி நடவு செய்த முதல் 5 ஆண்டுகள் வரை பயறுவகைப் பயிர்கள், எள், நிலக்கடலை, மொச்சை, செடி முருங்கை, சோளம், குறுகியகால காய்கறிகளை ஊடுபயிர்களாக சாகுபடி செய்து லாபம் பெறலாம். புளியந்தோப்பில் அவ்வப்போது இடை உழவு செய்து களைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

விதை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கன்றுகள் நடவு செய்த 8 முதல் 10 ஆண்டுகளில் காய்க்கும். ஒட்டுக்கன்றுகள் நடவு செய்த 4 முதல் 5 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும். 7 முதல் 10 ஆண்டுகளில் விளைச்சல் மேம்படும். பூக்கள் பூத்து காயாகி பழங்கள் அறுவடைக்கு வர 10 முதல் 11 மாதங்களாகும். பழங்கள் முதிர்ச்சியடைந்தவுடன் ஓடு பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறமாக மாறும். பழத்தின் மேல் ஓடு எளிதாகப் பிரியும்.

மரக்கிளைகளை உலுக்கினால் பழங்கள் கீழே விழும். இரண்டாவது அறுவடையின் போது பழங்களை குச்சியால் அடித்து எடுக்கலாம். அறுவடையான பழங்களை வெயிலில் காய வைத்து ஓடுகளை உடைத்து எடுக்கலாம். பழங்கள் பிப்., முதல் ஏப்ரல் வரை அறுவடைக்கு வரும்.

ஒரு மரம் சராசரியாக 150 முதல் 200 கிலோ பழங்கள் கொடுக்கும். எக்டேருக்கு 15 முதல் 20 டன் விளைச்சல் கிடைக்கும். தமிழகத்தில் மதுரை மற்றும் திருச்சியில் புளி விற்பனைக்கான வணிக ரீதியான முக்கிய சந்தைகள் செயல்படுகின்றன.



சோலைமலை, சஞ்சீவ்குமார் அண்ணாசாமி, பாக்கியாத்து சாலிகா

பேராசிரியர்கள், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்கோவில்பட்டி77086 03190






      Dinamalar
      Follow us