sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

விவசாயிகளை ஒருங்கிணைத்த முருங்கை இலை

/

விவசாயிகளை ஒருங்கிணைத்த முருங்கை இலை

விவசாயிகளை ஒருங்கிணைத்த முருங்கை இலை

விவசாயிகளை ஒருங்கிணைத்த முருங்கை இலை


PUBLISHED ON : மார் 05, 2025

Google News

PUBLISHED ON : மார் 05, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை அலங்காநல்லுார் கீழக்கரையில் ஆறரை ஏக்கரில் முருங்கை இலை சாகுபடி செய்து அதில் மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார் விவசாயி, பொறியியல் பட்டதாரி சரவணகுமரன்.

பொறியியல் துறையுடன் விவசாயப்பாதைக்கு திரும்பிய பயணத்தை விவரித்தார். அப்பா ராஜேந்திரன் தமிழாசிரியர். துாத்துக்குடி எட்டயபுரம் சொந்த ஊர். தாத்தா, அப்பா காலத்தில் விவசாயம் செய்தோம். நாங்கள் படித்து வந்த போது விவசாயம் செய்வதற்கென எங்களிடம் நிலம் இல்லை.

ஏதோ ஒரு விதத்தில் நிலத்தை இழந்து விட்டனர். நான் இன்ஜினியரிங் படித்து விட்டு அதுதொடர்பான வேலையில் இருந்தேன். திருமணத்திற்கு பின் மனைவி சுஜாதாவுக்காக அலங்காநல்லுார் கீழக்கரை அருகே 2004 ல் ஆறரை ஏக்கர் நிலம் வாங்கினேன். அவரது விருப்பப்படியே இயற்கை விவசாயம் செய்தோம்.

காய்கறி கட்டுப்படியாகவில்லை

ஆரம்பத்தில் காய்கறி, பூசணிக்காய் என எல்லாவித பயிர்களையும் சாகுபடி செய்தோம். 2007க்கு பிறகு விற்பனையில் தொய்வு ஏற்பட்டது. விளைந்தவற்றை சந்தைப்படுத்துவது கடினமாக இருந்தது. எங்களால் வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்க முடியவில்லை. வேறு பயிர் குறித்து சிந்தித்த போது முருங்கை மரங்கள் வளர்க்கலாம் என நண்பர்கள் ஊக்கப்படுத்தினர்.

அப்பா தமிழாசிரியர் என்பதால் முருங்கை பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகளை தேடி எடுத்து கொடுத்தார். அகத்திய முனிவரின் குணபாட நுாலில் முருங்கை பற்றி 10 வெண்பாக்களில் பாடியுள்ளதையும் முருகனின் போர்வீரர்களுக்கு வரகரசியுடன் முருங்கைக்கீரை உணவு பரிமாறப்பட்ட செவிவழி கதையையும் அப்பா விளக்கினார்.

மேலும் 80 மொழிகளில் முருங்கை என்ற சொல் முருங்கே, முருங்கா என்று தான் உள்ளது. இதையெல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் தான் சாதிக்க முடியும் என்பதால் முருங்கை இலையின் மூலம் தயாரித்த உணவு மாதிரிகளை தஞ்சாவூரில் உள்ள நிப்டெம் உணவுப்பதப்படுத்தும் நிறுவனத்தில் ஆய்வுக்கு கொடுத்தோம். இதற்கு கட்டணம் தனியாக உண்டு. முருங்கைப்பூ, காயில் இருக்கும் சத்துக்களை விட இலையில் அதிக சத்துகள் உள்ளதென நிப்டெம் நிறுவன ஆராய்ச்சியில் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஏக்கருக்கு 4000 முருங்கை செடிகள்

எனவே ஆறரை ஏக்கரில் முருங்கை பயிரிட திட்டமிட்டோம். தமிழ்நாடு வேளாண் பல்கலை பரிந்துரைப்படி ஒரு ஏக்கருக்கு 400 முருங்கை மரங்கள் வைக்கலாம். நாங்கள் முருங்கைப்பூ, முருங்கைக்காய் வரை கொண்டு செல்ல திட்டமிடவில்லை. எங்களது இலக்கு முருங்கை இலைகள் தான்.

விவசாயியாக நீடித்து வெற்றி பெற வேண்டுமெனில் இலைகள் தொடர்ந்து உற்பத்தியானால் மட்டுமே சாத்தியம். எனவே ஏக்கருக்கு 400 மரங்கள் என்பதைத் தாண்டி 4000 செடிகள் வைத்தோம். அடர் நடவு முறையில் நட்டாலும் எல்லா செடிகளுக்கும் வெயில் கிடைத்தது.

முருங்கைக்காய் உற்பத்திக்கு மரம் ஒன்றுக்கு பத்துக்கு பத்தடி இடைவெளி விட வேண்டும் என்பதையும் மாற்றி எட்டுக்கு எட்டடி இடைவெளியில் ஏக்கருக்கு 1200 மரங்கள் வைத்துள்ளோம். இலை உற்பத்தி பிரதானம் என்பதால் மரங்களை பெரிதாக வளரவிடுவதில்லை. தேயிலையும் 80 அடி வரை உயரமாக வளரும் மரம் என்றாலும் அதை போன்சாய் அளவில் சுருக்கியதைப் போல மரங்களை நெருக்கி நடவு செய்து உயரமாக வளரவிடாமல் கவாத்து செய்து கொண்டே இருக்கிறோம். பூ, காய்கள் உற்பத்தியின் போது தான் பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும். இலை உற்பத்தியில் நோய், பூச்சி தாக்குதல் குறைவு தான்.

ஒரு செடியிலிருந்து ஒரு கிலோ வீதம் ஏக்கருக்கு 4000 செடிகளில் இருந்து 4000 கிலோ இலைகள் கிடைக்கும். 45 முதல் 51 நாட்களுக்கு ஒருமுறை இலைகளை பறிக்கலாம். 52 நாட்களை கடந்து விட்டால் இலைகளில் மஞ்சள் நிறம் படிந்துவிடும். இதை சாப்பிட பயன்படுத்த முடியாது. திறந்தவெளியில் காயவைத்தால் காற்றில் உள்ள துாசி படியும். பாக்டீரியாக்கள், பறவைகளின் எச்சம் பட்டு பூஞ்சாண தாக்குதல் உருவாகி விடும். முதலில் சோலார் டிரையர் பயன்படுத்தினோம்.

அதன் பின் நாங்களே புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி 'அல்ட்ரா லோ டெம்பரேச்சர் குளோஸ்டு சேம்பர் டிரையர் சோலார்' கருவியை உருவாக்கி அதில் குறைந்த வெப்பநிலையில் இலைகளை உலரவைக்கிறோம். இந்த தொழில்நுட்பத்தை நாங்கள் தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தினோம். இம்முறையில் முருங்கை இலையில் உள்ள எளிதில் ஆவியாகக்கூடிய மூலக்கூறுகள் மீட்கப்படுவதால் சத்துகள் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கான ஸ்வீட்

குழந்தைகள் கீரையை சாப்பிட விரும்புவதில்லை. முருங்கை எனர்ஜி பார் என்ற பெயரில் நிலக்கடலை, பாதாம் பருப்பு, இயற்கை நாட்டு சர்க்கரை சேர்த்து ஒரு முருங்கை பாரில் 20 கிராம் முருங்கை இலைப்பொடி சேர்த்து உருவாக்குகிறோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

40 விவசாயிகளுடன் கலந்து பேசி எங்களது தொழில்நுட்பத்தை கற்றுத் தந்தோம். இயற்கை விவசாய முறையில் முருங்கை இலை உற்பத்தி செய்தால் வாங்கிக் கொள்வதாக உறுதியளித்தோம்.

குறைந்தபட்ச உத்தரவாத விலை

கத்தரிக்காய், தக்காளி, வெண்டை சாகுபடியை விட விவசாயிகளுக்கு இலை உற்பத்தி எளிது. மேலும் கத்தரி, தக்காளிக்கு நிரந்தர விலை கிடையாது. உற்பத்தி அதிகரித்தால் விலையே கிடைக்காது. இலையில் குறைந்தபட்ச உத்தரவாத விலை கிடைக்கிறது.

ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் கிடைக்கும். காய்கறி உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்கு லாபம். தற்போது 30 விவசாயிகள் எங்களுடன் இணைந்துள்ளனர். முருங்கையில் 58 வகையான பொருட்களை தயாரித்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.

ஒன்பது கிலோ இலைகளை காயவைத்தால் ஒரு கிலோ இலை கிடைக்கும். விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ காய்ந்த இலையை ரூ.180க்கு பெறுகிறோம். இலையை காயவைத்து உதிர்த்தால் காம்பு தனியாக உதிர்ந்து விடும். அதை ஆடு, மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். அதிலும் ஊட்டச்சத்து உள்ளது என்றார். அலைபேசி: 94435 92425.

- எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை






      Dinamalar
      Follow us