PUBLISHED ON : ஆக 22, 2018

தற்போது விவசாயம் எளிய பாதை நோக்கி பயணிக்கிறது. படித்த இளைஞர்கள் எண்ணற்றோர் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எங்கும் எதிலும் அலைபேசி மயம் தான்.
தற்போது வேளாண் புதிய கண்டுபிடிப்புகளில் ஆளில்லா பறக்கும் மருந்து தெளிப்பான் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சென்னையில் உள்ள 'ஸ்கை போர்ட் இன்னோவேஷன்' எனும் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. கரும்பு, மா உள்ளிட்ட உயரமாக வளரும் பயிர்களுக்கு தேவையான நுண்ணுாட்டச் சத்துக்கள், இயற்கை முறையிலான பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க இதனை பயன்படுத்த முடியும்.
சில பயிர் வகைகளில் சரிவர மருந்து தெளிக்க இயலாது. பறக்கும் மருந்து தெளிப்பானை, உபயோகிப்படுத்தி பயிர் முழுக்கவும் தெளிவாக மருந்து, நுண்ணீர் பாசன முறையில் தண்ணீர் தெளிக்க இயலும். இது 1.7 லிட்டர் கொள்ளளவு கொண்டது.
இதில் பூச்சிக்கொல்லி மருந்து, தண்ணீர் மட்டுமே பயன்படுத்த முடியும். தண்ணீர் பயன்படுத்த தனி கருவி உள்ளது. இது 10 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதை பயன்படுத்தி நிலத்தின் தன்மையையும், வானிலையையும் அறியலாம். இரண்டு கி.மீ., முதல் 3 கி.மீ வரை சுற்றளவில் பறக்கும் திறன் கொண்டது.
தண்ணீர் தெளிக்கும் இயந்திரத்தில் 'ரேடார்' எனும் உணர் கருவி வசதியால் மேடு, பள்ளம் அறிந்து தானியங்கியாக செயல்படுகிறது. இதன் விலை 6 லட்சம் ரூபாய். மருந்து அல்லது தண்ணீரின் அளவு குறைந்தால் சென்சார் மூலம் குறுந்தகவல் வருவதோடு, தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வந்து தண்ணீர் நிரப்பி செல்கிறது. அப்படியே செல்லும் போது திடீரென பேட்டரியில் மின்சக்தி குறைந்தால் குறைந்த மின்னழுத்த உதவியுடன் தொடங்கிய இடத்தை வந்தடையும். இதனை நாம் அலைபேசியில் 'அக்ரி அசிஸ்டன்ட்' எனும் செயலி மூலம் இயக்கலாம்.
கூட்டுப்பண்ணையம் நடத்தும் விவசாயிகள் வங்கி கடன் மூலம் ஆளில்லா விமானத்தை பெற்று தாங்களும், பிற விவசாயிகளுக்கு குத்தகை அடிப்படையிலும் வழங்கி பயனடையலாம்.
தொடர்புக்கு 90030 40078.
-எஸ்.வீரமணிகண்டன்

