PUBLISHED ON : ஏப் 16, 2025

அதிக வறட்சி சகிப்புத்தன்மை மற்றும் அதிக ஊட்டச்சத்து கொண்ட சிறுதானிய பயிர் வரகு. இந்தியா, நேபாளம், ஆப்பிரிக்காவில் முக்கியமாக பயிரிடப்படுகிறது. மானாவாரி நிலத்திற்கேற்ப குறைந்த செலவில் இதை பயிரிடலாம்.
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தும், உடல் எடையை கட்டுப்படுத்த உதவும். குளூட்டன் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இது ஏற்ற உணவு. குறைந்த கிளைசமிக் குறியீடு உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். குறைந்த செலவில் பயிரிடலாம் என்பதால் சிறு விவசாயிகளுக்கு ஏற்றது. வரகு சாகுபடி செய்யும் போது நிலத்தின் மண் தரத்தை மேம்படுத்தும், சுற்றுச்சூழல் வேளாண்மையில் இதன் பங்கு அதிகம்.
இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் பூச்சிக்கொல்லி அதிகம் தேவையில்லை. வறட்சியை தாங்கும் என்றாலும் 25 முதல் 32 டிகிரி வெப்ப நிலையில் சிறப்பாக வளர்கிறது. ஆண்டுக்கு 500 முதல் 900 மி.மீ., மழைப்பொழிவு இருந்தால் நல்லது. செம்மண், மணல் கலந்த களிமண்ணில் நன்கு வளரும். அமில கார நிலை (பி.எச்.,) 5.5 முதல் 7.5 அளவுக்குள் இருக்கவேண்டும். நிலத்தை 2 அல்லது 3 முறை ஆழமாக உழவேண்டும். கடைசி உழவின் போது எக்டேருக்கு 5 முதல் 10 டன் தொழுஉரம் இட வேண்டும். அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் நீரின் அளவை கட்டுப்படுத்த வேண்டும்.
விதைத்தேர்வு, விதைப்பு
ஒரு எக்டேர் பரப்பிற்கான நேரடிவிதைப்புக்கு 8 முதல் 10 கிலோ விதையும் வரிசை விதைப்புக்கு 5 முதல் 6 கிலோ விதை தேவைப்படும். மானாவாரி எனில் ஜூன், ஜூலை, இறவைப்பருவத்தில் செப்., அக்டோபரில் பயிரிடலாம். கோ 3, டி.என்.ஏ.ஐ.86 ரகங்கள் பயிரிட ஏற்றது. வரிசைக்கு வரிசை 25 முதல் 30 செ.மீ., செடிக்கு செடி 8 முதல்10 செ.மீ. இடைவெளி விட வேண்டும். அடியுரமாக எக்டேருக்கு 44 கிலோ நைட்ரஜன், 22 கிலோ பாஸ்பரஸ் இட வேண்டும்.
மேல் உரமாக பயிரின் வளர்ச்சி பருவத்தில் 50 சதவீத நைட்ரஜன் அளிக்க வேண்டும். செயற்கை உரம் விரும்பாவிட்டால் பசுந்தாள் உரங்கள், உயிர் உரம், மண்புழு உரமிடலாம்.
களை மேலாண்மை
பொதுவாக மானாவாரி பயிராக வளர்க்கப்படுகிறது. வறட்சி காலங்களில் வளர்ச்சி பருவம், பூக்கும் பருவத்தில் 2 அல்லது 3 முறை பாசனம் கொடுக்கலாம். அதிக நீர் தேங்காதவாறு கவனிக்க வேண்டும். களையை கட்டுப்படுத்த விதைத்த 15 முதல் 20 நாட்களிலும் 30 முதல் 35 நாட்களிலும் கையினால் களை எடுக்க வேண்டும்.
தளிர் ஈக்களை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் இமிடாக்ளோபிரிட் விதைநேர்த்தி செய்து கட்டுப்படுத்தலாம். தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த வேம்பு சார்ந்த மருந்துகளைக் கையாள வேண்டும். கருமை நோய்க்கு ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் அல்லது கார்பன்டசிம் சேர்த்து விதைநேர்த்தி செய்து கட்டுப்படுத்தலாம். இலை பழுப்பு நோய்க்கு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் மாங்கோசெப் கலந்துதெளித்து கட்டுப்படுத்தலாம்.
அறுவடை, பின்செய் நேர்த்தி
வரகு தானியத்தின் வளர்ச்சி காலம் 70 முதல் 90 நாட்கள். கதிர் நிறம் மஞ்சளாகி விதைகள் கடினமாகும் போது 80 முதல் 100 நாட்கள் கழித்து அறுவடை செய்யலாம். மானாவாரியில் ஒரு எக்டேருக்கு 1500 முதல் 1800 கிலோ தானியமும் இறவையில் 2500 முதல் 2700 கிலோ தானியமும் அறுவடையாக பெறலாம். தானியங்களை அறுவடை செய்த பின் கை அல்லது இயந்திரத்தால் சுத்தம் செய்து காயவைக்க வேண்டும். ஈரப்பதம் 10 முதல் 12 சதவீதம்இருக்கும் போது மூடப்பட்ட மொத்தக் கலங்களில் சேமித்து பாதுகாக்கலாம். தமிழகத்தில் வேளாண் துறையின் கீழ் சாகுபடி பரப்புள்ள மாவட்டங்களின் வேளாண் விரிவாக்க மையங்களில் வரகு விதைகள் கிடைக்கும்.
வாசுகி,
விதை ஆய்வு துணை இயக்குநர்,
விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை,
மதுரை