PUBLISHED ON : ஜூன் 06, 2018

பூண்டு செடியின் வேர் தான் உணவில் சேர்க்கப்படும் வெள்ளைப்பூண்டு. இவை வெள்ளையாக இருப்பதாலும், பூண்டு இனத்தை சேர்ந்தது என்பதாலும், இதற்கு வெள்ளைப்பூண்டு என்று பெயர் ஏற்பட்டது. இதன் தாயகம் ஆசியா என தாவிரவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
சீனா, இந்தியா, அமெரிக்க நாடுகளில் அதிகளவு பயிரிடப்படுகிறது. இந்தியாவில் குஜராத், ஒடியா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. வெள்ளைப்பூண்டில் கொழுப்புச்சத்து, நார்ப்பொருள், பாஸ்பரஸ், புரதம், சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, தயாமின், நிக்லோனிடிக், ஆசிட் ரைபோபிளேவின், வைட்டமின் ஏ.சி.இ., மற்றும் மைக்ரோ நியூட்ரியன்களான மெக்னிசியம், மாங்கனீசு, சல்பர் காப்பர் செலினியம், துத்தநாகம் ஆகிய சத்துக்கள், கெட்ட கொழுப்பை கரைக்கும் ஆலிசின் என்ற வேதிப்பொருளும் பொதிந்து கிடக்கின்றன. இருதய நோயை முற்றிலும் நெருங்க விடாமல் தடுக்கும் உயரிய மருத்துவ குணம் பூண்டில் மட்டுமே இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
முதல் பூண்டு சந்தை
தமிழகத்தில் வெள்ளைப்பூண்டு வியாபாரம் என்றாலே தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி தான். முதல் பூண்டு சந்தை என்ற பெருமை பெற்றது. இங்கு நுாற்றாண்டுக்கும் மேலாக பூண்டு சந்தை பீடு நடை போடுகிறது.
வடுகபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் வாரம் தோறும் வியாழன், ஞாயிறன்று பூண்டு சந்தை, களை கட்டுகிறது. பல ரகங்களில் விளைவிக்கப்படும் நாட்டுப்பூண்டு, மலைப்பூண்டு மூடைகள் ஏலம் விடப்படும். உள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பூண்டு வியாபாரிகள் வடுகபட்டிக்கு வாரம் தோறும் படையெடுப்பது வழக்கம். இங்கு நடக்கும் பூண்டு வணிகம் பங்குச்சந்தை போன்றது. விலை தாறுமாறாக ஏறி உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தும். அதே நேரம் விலை மிகவும் குறைந்து அதல பாதாளத்தில் தள்ளி விடவும் கூடும்.
பண்டமாற்று முறை
வடுகபட்டி பூண்டு வியாபாரம் பண்டமாற்று முறையில் தான் முதலில் நடந்தது. கொடைக்கானல் மலைப்பூண்டு விவசாயிகளிடம் இருந்து வெள்ளைப்பூண்டை வாங்கி கொண்டு, அதற்கு பதிலாக அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கி வந்தனர்.
போக்குவரத்து வசதி வந்து விட்ட பின் பண்ட மாற்று முறை ஒழிந்து விட்டது. கொடைக்கானல், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளைப்பூண்டுகள் பதப்படுத்தப்பட்டு, தரவாரியாக பிரித்து ஏலம் மற்றும் ஏற்றுமதி மூலம் வியாபாரம் செய்யப்படுகிறது.
பூண்டின் தரத்தை பொறுத்து விலையில் ஏற்ற, இறக்கம் இருக்கும். பூண்டு விவசாயிகள், வியாபாரிகளின் சொர்க்கபுரியாக வடுகபட்டி திகழ்கிறது.
தொடர்புக்கு 90925 75184
- ரா.ரெங்கசாமி,
முன்னாள் வங்கி மேலாளர்,
வடுகபட்டி, தேனி

