sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

புளியமரத்தின் ரகங்களும் குணங்களும்

/

புளியமரத்தின் ரகங்களும் குணங்களும்

புளியமரத்தின் ரகங்களும் குணங்களும்

புளியமரத்தின் ரகங்களும் குணங்களும்


PUBLISHED ON : ஜன 22, 2025

Google News

PUBLISHED ON : ஜன 22, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாவாரி பகுதிகளில் வறட்சியைத் தாங்கி பலன் கொடுக்கும் பழ மரங்களில் புளிய மரம் முக்கியமானது. புளி மருந்து, உணவு, உடை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மூலப் பொருளாகவும் ரசாயனப் பொருட்களைத் தயாரிக்கவும் பயன்படுகிறது.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்டில் அதிகளவில் புளியமரங்கள் பயன்தருகின்றன. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அதிகளவிலும் தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சியிலும் அதிகளவில் புளி சாகுபடி செய்யப்படுகிறது. பழுத்த புளியம்பழத்தில் 55 சதவீத கூழ், 33 சதவீத விதை, 12 சதவீத நார்ப் பொருட்கள் உள்ளது.

மண்ணும் தட்ப வெப்பநிலையும்

அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து மண் வகைகளிலும் வளரும் என்றாலும் மணல் கலந்த செம்மண் சாகுபடிக்கு ஏற்றது. வயலில் தண்ணீர் தேங்கக்கூடாது. மித வெப்பச் சூழ்நிலையில் வறட்சியான பகுதிகளில் நன்றாக வளரும். மிகக் குறைந்த வெப்பமும், பனியும், குளிர் காற்றும் புளிய மரங்களின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. காற்றின் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 48 டிகிரி, குறைந்தபட்சம் 18 முதல் 20 டிகிரி சென்டிகிரேடு வரை இருக்க வேண்டும்.

புளிய மரத்தின் காய்கள் குளிர்ந்த தட்பவெப்ப நிலையில் பழுக்கிறது. ஆண்டு மழைப்பொழிவு 750 முதல் 900 மி.மீ., வரை உள்ள பகுதிகளில் இம்மரங்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் வரையுள்ள பகுதிகளில் பயிர் செய்யலாம். புளிப்பு ரக பழங்களில் அதிக அமிலத்தன்மையும் இனிப்பு ரக பழங்கள் குறைந்த அமிலத் தன்மை உடையது.

தமிழகத்தின் ரகங்கள்

தேனி மாவட்டம் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட பி.கே.எம். 1 ரகத்தின் ஒட்டுச் செடிகள் நட்ட 4 முதல் 5 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும். பத்தாம் ஆண்டு முதல் 300 முதல் 400 கிலோ பழங்கள் கிடைக்கும். ஒரு மரத்திற்கு 250 கிலோ வீதம் எக்டேருக்கு 22 முதல் 26 டன் வரை விளைச்சல் பெறலாம். தர்மபுரி மாவட்டம் உரிகம் கிராமத்தில் உள்ள 200 ஆண்டு பழமையான புளிய மரத்தில் இருந்து தேர்வு செய்து தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையால் வெளியிடப்பட்டது உரிகம் ரகம்.

ஒரு மரம் ஆண்டுக்கு 2 டன் பழ மகசூல் தரும். வளர்ந்த மரங்கள் குடை போல் விரிந்திருக்கும். பழங்கள் நீளமாக சிவப்பு நிறத்தில் இருக்கும். ஒவ்வொரு பழமும் 150 முதல் 200 கிராம் எடையுடன் 10 முதல் 12 விதைகள் இருக்கும்.

பிறமாநில ரகங்கள்

மகாராஷ்டிரா மரத்வாடா வேளாண் பல்கலையின் பழ ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டது யோகேஷ்வரி ரகம். பழங்கள் சிவப்பு நிறத்தில் நீளமாக காணப்படும். இதன் பழம் புளிப்பு இனிப்பு சுவையுடன் இருக்கும். பூலே ஷ்ரவாணி ரகம் இரகுரி மகாத்மா பூலே வேளாண் பல்கலையில் 2021ல் வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் பலன் தரும். ஓரளவு இனிப்புத் தன்மையுடன் 62.23 சதவீத பழக்கூழ் இருக்கும். ஒரு மரம் ஆண்டிற்கு 78.44 கிலோ பழ மகசூல் தரும். அவுரங்காபாத் பழ ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டது பிரதிஸ்தான் ரகம். புளிப்பு இனிப்பு வகையைச் சேர்ந்த சிவப்பு புளி ரகம். 10 வயதுடைய மரம் ஆண்டிற்கு 300 கிலோ பழ மகசூல் தரும். பழக்கூழை நீண்ட காலத்திற்கு சேமித்து பயன்படுத்தலாம். இந்நிலையத்தின் மற்றொரு ரகமான புளி 263 ஆண்டுதோறும் பலன் தரும்.

ஒரு மரம் 6 முதல் 10 குவிண்டால் மகசூல் தரும். இதன் பழக்கூழ் இளம் சிவப்பு முதல் லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும். பழங்கள் பெரிதாக 22.25 கிராம் எடையில் இருக்கும். மற்றொரு ரகமான அஜந்தா ஆண்டுதோறும் பலன் தரும். அடர் நடவு முறையில் (5 மீட்டர் வரிசைக்கு வரிசை மற்றும் 5 மீட்டர் செடிக்கு செடி இடைவெளி), ஒரு மரம் ஆண்டிற்கு 40 கிலோ மகசூல் தரும்.

குஜராத்தின் கோத்ரா மத்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் வெளியிடப்பட்ட ரகம் கோமா பிரதீக். நான்காம் ஆண்டில் மகசூல் தரும். பழம் சிறிது வளைந்து சிவப்பு நிறத்தில் இருக்கும்; பதப்படுத்தலுக்கு ஏற்றது. மானாவாரியில் நட்ட 9ம் ஆண்டில் இருந்து 58.5 கிலோ பழ மகசூல் தரும்.

கர்நாடக மாநிலம் ஆரபாவி தோட்டக்கலைக் கல்லுாரியில் இருந்து டி.டி.எஸ். 1 ரகம் வெளியிடப்பட்டது. பழங்கள் ஓரளவு வளைந்து காணப்படும். பழத்தில் 51 சதவீத கூழ் மற்றும் 13.6 சதவீத அமிலத் தன்மை இருக்கும். இது பின் பருவ அறுவடை ரகம். பூ பூப்பது முதல் காய் அறுவடை வரை 310 நாட்களாகும்.

டி.டி.எஸ்.2 ரக பழத்தில் 53 சதவீத கூழ், 12.2 சதவீத அமிலத்தன்மை உள்ளது. இது முன்பருவ அறுவடை ரகம். பூப்பது முதல் காய் அறுவடை வரையிலான காலம் 280 நாட்கள்.

-சோலைமலை, சஞ்சீவ்குமார் அண்ணாசாமி, பாக்கியாத்து சாலிகா

பேராசிரியர்கள்

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் கோவில்பட்டி

அலைபேசி: 77086 03190






      Dinamalar
      Follow us