/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
விதைநேர்த்திக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்கள்
/
விதைநேர்த்திக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்கள்
PUBLISHED ON : ஜன 22, 2025

தமிழகத்தில் வேளாண் துறையின் கீழ் திரவ உர உற்பத்தி மையங்கள் திரவ நுண்ணுயிர் உரங்களை (பாக்டீரியா) தயாரிக்கின்றன. மேலும் கோவை வேளாண் பல்கலையிலும் திரவ உயிர் உரம் தயாரிக்கப்படுகிறது.
அசோஸ்பைரில்லம் உயிர் உரங்களால் விதைநேர்த்தி செய்யும் போது 25 சதவீத தழைச்சத்து உரத்தை குறைக்க முடியும். வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி பயிர்களுக்கு கிடைக்கச் செய்யும். டி.ஏ.பி., போன்ற மணிச்சத்து உரங்களை மண்ணில் இடும் போது செடிகளுக்கு நேரடியாக மணிச்சத்து கிடைக்காது. பாஸ்போ பாக்டீரியா உயிர் உரமானது மணிச்சத்தை கரைத்து செடிகளுக்கு தருகிறது.
பயறு வகைகளுக்கு ரைசோபியம் பயறு உயிர் உரத்துடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். நெல்லுக்கு அசோஸ்பைரில்லம் நெல், பாஸ்போ பாக்டீரியா உயிர் உரமும் இதர பயிர்களுக்கு அசோஸ்பைரில்லம் இதர பயிர், பாஸ்போ பாக்டீரியா உயிர் உர விதைநேர்த்தி செய்ய வேண்டும். நிலக்கடலைக்கு ரைசோபியம் கடலை உயிர் உரம் தனியாக உள்ளது.
திட உயிர் உர விதைநேர்த்தி முறை
நாம் அளிக்கும் நுண்ணுயிர்கள் பயிரின் வேர்மண்டலத்தைச் சென்றடைவது தான் குறிக்கோள். ஒரு கிலோ திடவடிவ நுண்ணுயிர் உரத்தினை 500 மில்லி அரிசிக் கஞ்சியுடன் கலந்து பசைபோல் தயாரிக்கவேண்டும்.
ஒரு எக்டேருக்கு தேவையான விதைகளை நுண்ணுயிர் கலவையில் இட்டு அதிக அழுத்தம் கொடுக்காமல் மிதமாக கலக்க வேண்டும். இந்த விதைகளை நிழலில் 30 நிமிடம் உலர்த்தி விதைக்கலாம். நிலக்கடலை போன்ற பயிர்களில் விதை உறை மெலிதாக இருப்பதால் விதைநேர்த்தியின் போது கவனம் தேவை.
சிலவகைப் பயிர்களின் விதைகளை ஊறவைக்க வேண்டுமெனில் அந்த ஊறல் நீரில் உயிர் உரத்தினை கலந்து ஊறவைக்கலாம். விதைகள் முளைப்பு வந்த பிறகு உயிர் உர நேர்த்தி செய்யும் போது விதைகளுக்கு பாதிப்பு நேராமல் கையாள வேண்டும். காய்கறி, கீரை போன்ற சிறிய விதைகளுக்கு ஒரு எக்டேரில் விதைக்க 600 கிராம் திடஉயிர் உரத்தை சேர்த்து விதைநேர்த்தி செய்தால் போதும். திட உயிர் உரங்கள் பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள் தயாரிப்பதால் அவற்றின் தயாரிப்பு தேதியிலிருந்து ஆறுமாதத்திற்குள் பயன்படுத்த வேண்டும். காலாவதி ஆகி விட்டால் உயிர்உரங்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.
திரவ நுண்ணுயிர் உர விதை நேர்த்தி
திரவ உயிர் உரத்தை ஓராண்டு வரை பயன்படுத்தலாம். ஒரு எக்டேர் விதைக்கு 125 மில்லி திரவ உயிர் உரத்தை அரிசிக் கஞ்சியுடன் சேர்த்து கலந்து 30 நிமிடம் நிழலில் உலர்த்திய பிறகு விதைக்கலாம். நுண்ணுயிர் உர நேர்த்தி செய்து 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும். அதற்கு மேலும் தாமதமானால் விதையில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைய நேரிடும். நுண்ணுயிர் உர விதை நேர்த்தியானது ரசாயன உர நேர்த்திக்குப் பிறகு கடைசியாக செய்ய வேண்டும்.
- சுப்புராஜ்
வேளாண் இணை இயக்குநர், மதுரை