/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அன்று எல்லை காவலன் இன்று இயற்கை காவலன்
/
அன்று எல்லை காவலன் இன்று இயற்கை காவலன்
PUBLISHED ON : டிச 27, 2023

சிப்பாயாக இந்திய ராணுவத்தில் 22 ஆண்டுகள் பணிபுரிந்தேன். தற்போது விருப்ப ஓய்வு பெற்று தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரையில் 6 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்கிறேன் என்கிறார் சேதுராமன்.
எங்கள் குடும்பம் பாரம்பரிய விவசாய குடும்பம். ராணுவத்தில் இருந்தபோதே விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்தது. ஆனால் நஞ்சில்லா மேலாண்மை, பல்லுயிர் பெருக்கம், நோயில்லா வாழ்க்கை என்பதை குறிக்கோளாக நினைத்ததால் விருப்ப ஓய்வுக்கு பின் விவசாயத்திற்கு மாறினேன்.
எங்கள் தோட்டத்தில் 350 தென்னை மரம், 170 மாமரங்கள் காய்க்கின்றன. கரும்பு சாகுபடி செய்துள்ளோம். ஊடுபயிராக ஆடு, மாடுகளுக்கு தீவனப்புல்லும் சிறு விவசாயமாக காய்கறி, கீரை விவசாயம் செய்கிறோம். நம்மாழ்வாரின் தற்சார்பு மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறையை கடைப்பிடிக்கிறேன். அதனால் தோட்டம் என்பதற்கு பதிலாக ஒருங்கிணைந்த பண்ணையமாக மாற்றினோம். இங்கு ஆடு, மாடு, கோழி, வாத்து, வான்கோழி, கின்னிக்கோழிகளோடு ஆயிரக்கணக்கான பறவைகளும் சார்ந்து வாழ்கின்றன. குடும்பத்தினரும் நண்பர்களும் ஒருங்கிணைந்து உதவுகின்றனர்.
தற்சார்பு விவசாயத்தில் மாட்டுச்சாணத்தை மண்புழு உரமாக மாற்றியதால் இரட்டிப்பு மகசூல் கிடைக்கிறது. ஆடு, மாடுகளின் சாணமும் கோழி எச்சமும் மண்வளத்தை பெருக்குகிறது. அமிர்த கரைசல், பஞ்சகாவ்யம், ஜீவாமிர்தம், ஆட்டூட்டம், மீன்அமிலம், ஈ.எம்.கரைசல், இஞ்சி, பூண்டு மிளகாய் கரைசல், தேமோர் கரைசல், பத்திலை கரைசலை சொந்தமாக தயாரிக்கிறோம்.
சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாசனம் அல்லது கைத்தெளிப்பான் முறையில் பயிர்களுக்கு அளிக்கிறோம். இயற்கை உரம், பூச்சிக்கொல்லி கேட்கும் விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறோம்.
மாதத்தில் முதல் மற்றும் கடைசி ஞாயிறுகளில் விருப்பமுள்ளவர்களுக்கு செய்முறை விவசாயம் கற்றுத் தருகிறோம். பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரியுடன் இணைந்து வேளாண் சுற்றுலாவை உருவாக்கியுள்ளோம். தற்சார்பு மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது, அதன் மூலம் மகசூல் பெறுவது என அனைத்தையும் ஒரே இடத்தில் கற்றுத் தருகிறோம். விவசாயம் லாபகரமாக மாற வேண்டுமெனில் விளைபொருளை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது தான் ஒரே வழி. கரும்பில் இருந்து நாட்டுசர்க்கரை, பாலில் இருந்து 'பனீர், லஸ்ஸி, நெய், கொழுப்பில்லா மோர், 'இளநீரில் இருந்து இளநீர் சர்பத், தேங்காய், நாட்டுசர்க்கரை கலந்து கமர்கட் ஆக மாற்றி விற்பனை செய்வதால் லாபம் கிடைக்கிறது.
தேங்காய், மாங்காய், காய்கறிகள் சுவையாக தரமாக ஆரோக்கியம் நிறைந்ததாக இருப்பதால் சரியான விலையும் கிடைக்கிறது.
தினசரி வருமானம், வாரம், மாதம், ஆண்டு வருமானம் வரும்படி பண்ணையத்தை வடிவமைத்துள்ளதால் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கிறது என்றார்.
இவரிடம் பேச 94963 56815.
- எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை