PUBLISHED ON : ஜன 24, 2024

ஒரு ஏக்கரில் கரும்பும், 6 ஏக்கரில் நெல்லுமாக தொடர்ந்து அப்பா கிருஷ்ணன் காலத்தில் இருந்து விவசாயம் செய்கிறேன். அப்பா விவசாயம் செய்ததை விட தற்போது நெல்லில் கூடுதல் விளைச்சல் பெறுவது பெருமையாக இருக்கிறது என்கிறார் மதுரை கிழக்கு சத்திரப்பட்டியைச் சேர்ந்த விவசாயி திருவேங்கடம்.
ஒரு ஏக்கரில் முழுமையாக இயற்கை முறைப்படி நெல் விவசாயம் செய்தேன். விளைச்சல் குறைந்ததால் தொடர முடியவில்லை. அதற்காக உரம், பூச்சிக்கொல்லி மருந்து என முழுமையாக ரசாயன உரத்தையும் கையாளவில்லை. மாட்டுச்சாணம், ஆட்டு எரு, குப்பை உரம், இலைதழை குப்பை என உரங்களை மாற்றி மாற்றி கொடுக்கிறேன்.
நாற்று நடுவதற்கு முன்பாக வயலை தயார் செய்ய வேண்டும். பரம்படிப்பதற்கு என வண்டிமாடுகள் வைத்துள்ளேன். ஆட்கள் கிடைத்தால் ஒரு ஏக்கரில் பரம்பரடிப்பதற்கு ஆட்கள் இருந்தால் வண்டிமாடுகளை கட்டினால் 5 மணி நேரத்தில் உழுது விடும். இப்படி 5 முறை உழுதால் வயல் நடவுக்கு தயாராகும்.
வேலைக்கு ஆட்கள் கிடைக்காவிட்டால் டிராக்டரில் ஒரு ஏக்கரை ஒன்றரை மணி நேரத்தில் உழுது விடுவோம். களை வளரக்கூடாது என்பதற்காக 3 முறை டிராக்டரில் உழுகிறோம்.
ஒரு ஏக்கரில் 110 - 115 நாட்கள் வளரும் ஏ.டி.டி. 45 ரகத்தை நடவு செய்துள்ளோம். வயலுக்கு உரம் கூடுதலாக தேவை என்றால் ஆட்டுக்கிடை அமர்த்துவோம். தோப்பு, மலையடிவாரத்தில் கிடைக்கும் இலைகளை அறுத்து வயலுக்கு இட்டாலும் உரமாகி விடுவோம். கூடுதலாக வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு இடுவதும் உண்டு.
நேரடி விதைப்புக்கு ஒரு ஏக்கருக்கு 15 கிலோ விதைநெல் போதும் என்றாலும் நாற்றின் வளர்ச்சி குறைந்திருக்கும் போது மழைக்காலத்தில் அழுகல் நோயால் பாதிக்கப்படும். அதனால் தனியாக நாற்று தயாரித்து நடவு செய்கிறோம். ஏ.டி.டி. 45, சுமங்கலி, கோ 51, ஏ.டி.டி.36, இட்லி அரிசிக்கான ஏ.எஸ்.டி.16 ரகங்களை மாற்றி மாற்றி நடவு செய்கிறோம்.
ஒரு ஏக்கர் நடவுக்கு 5 சென்ட் பரப்பளவில் 30 கிலோ விதைகளை துாவ வேண்டும். பெரும்பாலும் கடைகளில் தரமான விதைகள் வாங்குவதால் அவை ஏற்கனவே விதைநேர்த்தி செய்யப்பட்டிருக்கும். நிலத்தில் திறந்த வெளியில் புழுதியாக்கி விதைப்போம்.
நெல்லை ஊறவைக்காமல் விதைத்தால் அன்றே தண்ணீர் விடுவோம். அவ்வப்போது ஈரப்பதத்திற்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 18 நாட்களில் நாற்று பக்குவத்திற்கு வந்து விடும். 25வது நாளில் நாற்றைப் பறித்து வயலில் நட வேண்டியது தான்.
வேலையாட்கள் கிடைப்பதைப் பொறுத்து 25 முதல் 35 நாட்களுக்குள் நட்டு விடுவோம். நடுவதற்கு முன் வயலில் ஒரு இன்ச் அளவுக்கு தண்ணீர் தேக்கி வைத்து ஒரு ஏக்கருக்கு 100 கிலோ அளவு காம்ப்ளக்ஸ் உரம் இட வேண்டும். நாற்று நட்டபின் தினமும் ஒரு இன்ச் அளவும், ஒரு வாரம் கழித்து 3 இன்ச் அளவு தண்ணீர் தேக்கி வைத்தால் களை வளராது. நாற்று நட்ட 15வது நாள் கையால் களை எடுத்து அமோனியம் சல்பேட், பொட்டாஷ், குருணை மருந்துகளை கலந்து துாவ வேண்டும். இது குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும்.
தினமும் 2 முதல் 3 இன்ச் அளவு தண்ணீர் தேக்க வேண்டும். முதல்முறை உரம் கொடுத்த 15வது நாளில் 2வது முறையாக கையால் களை எடுக்க வேண்டும்.
மழைக்காலத்தில் தான் காய்ச்சலும் பாய்ச்சலும் முறை சாத்தியமாகும். நாங்கள் கள்ளந்திரி கால்வாய் மூலம் நேரடி பாசனம் பெறுகிறோம். தற்போது அணையிலிருந்து 65 நாட்களாக தண்ணீர் கிடைக்கிறது.
அதன் பின் நீர்வளத்துறையினர் முறைப்பாசனம் வைத்து தண்ணீர் தரும் போது அதுவே காய்ச்சல் பாய்ச்சல் முறையாக மாறிவிடும்.
போர்வெல் உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும் போது அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடாத நிலையில் விதை பாவுவதற்கு, நாற்று தயாரிப்பதற்கு தண்ணீர் எடுப்போம். பிப்ரவரியில் அறுவடையாகும் வரை தண்ணீர் தேவைப்படும் என்பதால் தண்ணீரை தேவைக்கேற்ப கிணற்றில் இருந்து பயன்படுத்துவோம்.
60 வது நாளில் கதிர் பரிந்து விடும். 110 வது நாளில் அறுவடைக்கு தயாராகும். நெல்லை விற்க வியாபாரிகளை தேடிப் போவதில்லை. நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் கொள்முதல் மையங்களில் பதிந்து விடுவோம். அறுவடையான நெல்லை சுத்தம் செய்து காஞ்சரம்பேட்டை அல்லது வெளிச்சநத்தம் கொள்முதல் மையங்களில் கொடுத்து விடுவோம். ஏக்கருக்கு 40 - 50 மூடை கிடைக்கும். பணம் கைக்கு வந்து விடும்.
ஒரு ஏக்கரில் கடந்தாண்டு பிப்ரவரியில் கரும்புக்கரணைகளை நடவு செய்தோம். கடந்தாண்டு ஆயுதபூஜை அன்றே வியாபாரிகளுக்கு விற்பனைக்கு கொடுத்து விட்டோம். ஓராண்டு உழைப்பு, கூலியாட்கள் செலவு போக ரூ.ஒரு லட்சம் கிடைத்தது. முடிந்தவரை ரசாயனம் தவிர்த்து இயற்கையுடன் இணைந்து விவசாயம் செய்கிறோம் என்றார்.
இவரிடம் பேச9421 89840
-எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை