PUBLISHED ON : பிப் 09, 2024

மேற்கத்திய நாட்டு உணவுகளின் முக்கிய இடம் பிடித்துள்ள 'மைக்ரோ கிரீன்ஸ்' எனப்படும் நுண்கீரைகள் தமிழகத்தில் பரவலாக வளர்க்கப்படுகிறது.
முளைகட்டிய பயிர்களுக்கும் நன்கு வளர்ந்த கீரைகளுக்கும் இடைப்பட்ட பருவமே இந்த தளிர்க்கீரைகள் அல்லது நுண் கீரைகள். உண்ணும் கீரைகள் மட்டுமின்றி காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் தானியங்களை கூட இந்த முறையில் வளர்த்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். விதை விதைத்து ஏழு முதல் பத்து நாட்களுக்குள் அறுவடை செய்து சமையலுக்கு அல்லது விற்பனைக்கு கொண்டு வரலாம். சாகுபடி, மதிப்பு கூட்டுதல் மற்றும் விற்பனை தொடர்பாக தொழில் தொடங்கினால் எளிதில் சந்தையை விரிவுபடுத்தலாம்.
பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. தரமான விதைகள் வாங்கி சாகுபடி முறைகள் தெரிந்து கொண்டால் எளிதாக கையாள முடியும். வீட்டில் உள்ள ரேக் ஆகியனவற்றை பயன்படுத்தி முதலில் வீட்டு பயன்பாட்டுக்கு வளர்த்து பின்னர் அதனை தொழிலாக துவங்கலாம். சாகுபடிக்கு மணல் அவசியமில்லை, தண்ணீர் செலவும் குறைவு.
உப்பு அதிகம் உள்ள தண்ணீரினை உபயோகப்படுத்தி இதை வளர்ப்பது கடினம். ஏழு நாட்களில் அறுவடை செய்து காற்று போகாத டப்பாக்களில் அடைத்து ஓட்டல், உடற்பயிற்சி கூடம், மருத்துவமனைகளுக்கு அனுப்பலாம். காய்கறிகள், கீரைகள் முளைகட்டிய தானியங்களில் உள்ள சத்துக்களை காட்டிலும் பல மடங்கு ஊட்டச்சத்து மிக்கது.
அதிக வெப்பம், மழை, குளிர் போன்றவை நோய் தாக்குதலை ஏற்படுத்தும். எனவே சாகுபடியின் போது சரியான வெப்பநிலையை உறுதி செய்தால்
ஊட்டச்சத்தையும் ரசாயனமற்ற உணவை பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. பொதுவாகவே வேளாண்மை சார்ந்த தொழில்களை மதிப்புக்கூட்டினால் கூடுதல் வருமானம் கிடைக்கும். சாகுபடியில் கிடைக்கும் வருமானத்தை விட அதிகமான நிகர லாபம் பெறலாம். மதிப்பு கூட்டுதல் உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்களுக்கு அரசு தரப்பில் இருந்தும் பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. இனிமேல் சாகுபடி செய்தவுடன் கீரையாக பயன்படுத்துவது மட்டுமின்றி உலர்த்தி பொடியாக்கி பீட்சா, பர்கர், தோசை, மில்க் ஷேக் போன்ற எந்த வகை உணவிலும் இதனை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இது விரைவாக நீர் தன்மை குறைந்து வாடிவிடும் என்பதால் அறுவடை செய்தவுடன் விற்பனை செய்ய வேண்டும். சந்தை தேவைக்கு ஏற்ப விதைப்பினை மேற்கொள்வது சரியான முறையாக இருக்கும். இது தவிர பூஞ்சை பாதிப்பு பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். சரியான காற்றோட்டம் மற்றும் நீர் வடிகால் அவசியம்.
தினமும் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வெயில் கிடைத்தால் அந்த இடத்தினை உபயோகப்படுத்தி இதனை வளர்க்கலாம்.
கடுகு, வெந்தயம், சூரியகாந்தி, பீட்ரூட், கேரட், பயறு வகைகள், பிரக்கோலி, முட்டைக்கோஸ், முள்ளங்கி, ஆளி விதை, கோதுமை, பட்டாணி போன்ற பல வகையான விதைகளை உபயோகப்படுத்தி நுண்கீரைகளை எளிதாக வளர்க்கலாம்.
தமிழகத்தில் பச்சைப் பயறு, உளுந்து, கொள்ளு. தட்டைப் பயறு போன்ற பயறு வகைப் பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப் படுவதால் உழவர்களுக்கும் விதை உற்பத்தியாளர்களுக்கும் கூட இந்த தொழில் நுட்பம் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிக லாபம் தருவதாக அமையும்.
பயறு வகைப் பயிர்கள் வளர்ச்சிக்கு 5 முதல் 7 நாட்கள் வரையிலும் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்கள் தனியாக கொடுக்க வேண்டியது இல்லை. விதையினுள் இருக்கும் சத்துக்களைக் கொண்டே இரு இலைகள் உருவாகும் வரையிலும் வளரக்கூடியன. அதாவது தண்ணீரை மட்டும் கொடுத்து 'ஹைட்ரோபோனிக்ஸ்' முறையில் வளர்க்கலாம்.
காய்கறிப் பயிர்கள் மற்றும் பயறு வகை பயிர்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு உற்பத்தியாளராக மாறலாம். -
-மாலதி, ஜெகதாம்பாள் உதவி பேராசிரியர்கள்வேளாண் அறிவியல் நிலையம், சேலம்97877 13448