/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நீடித்த வருமானத்திற்கு வேளாண் காடுகள் வளர்ப்பு
/
நீடித்த வருமானத்திற்கு வேளாண் காடுகள் வளர்ப்பு
PUBLISHED ON : பிப் 14, 2024

நாட்டின் மொத்த பரப்பளவில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும் என்பது வரைமுறை. தற்போது 29.39 சதவீதம் மட்டுமே உள்ளது. காடுகள் வளர்ப்பதை ஊக்குவிக்கவும் அதன் மூலம் நிலையான வருமானத்தை பெறவும் உதவக்கூடிய தொழிநுட்பம்தான் வேளாண்காடுகள் வளர்ப்பு தொழில்நுட்பம்.
வேளாண காடுகள் என்பது நிலங்களில் விவசாய பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தீவனப்பயிர்களுடன்சேர்த்து மரங்களை வளர்க்கும் தொழில்நுட்பம்.
வேளாண் காடுகள் நம் நாட்டின் எரிபொருள் தேவையை 50 சதவீதம் பூர்த்தி செய்கின்றன.
தற்காலத்தில் நகரமயமாதல், குறைந்த அளவே கிடைக்கும் பாசன நீர், விவசாய தொழிலில் ஈடுபடும் கூலி ஆட்களின் பற்றாக்குறை, வரைமுறையற்ற இடுபொருட்களின் பயன்பாடு போன்றவை விவசாய தொழிலை பாதித்து செலவை அதிகப்படுத்துகிறது.
விவசாயிகள் அதிக வருமானம் பெற வேளாண் காடுகள் வளர்ப்பு தொழில்நுட்பத்தை பின்பற்றலாம்.
வறண்ட பகுதிகள், மண் சரிவு பகுதிகள், அமிலத்தன்மை, உப்புத்தன்மை அதிகமுள்ள பகுதிகள், குறைந்த மண்வள பகுதிகளிலும் வேளாண் காடுகள் வளர்க்கலாம்.
வேளாண் மா வளர்ப்பு திட்டம் என்பது மரங்களுக்கிடையே வேளாண் பயிர்களான சோளம், கம்பு, பருத்தி அல்லது நிலக்கடலை, பயறுவகை பயிர்களை இறவை அல்லது மானாவாரியில் சாகுபடி செய்வது. மரங்களுக்கு இடையே பயிர்களை
சாகுபடி செய்யும் போது ஆண்டுதோறும் வருவாய் கிடைக்கும். மரங்களுக்கிடையே சாகுபடி செய்யும் ஊடுபயிரை தேர்ந்தெடுக்கும்போது அவை நிழல் விரும்பும் பயிர்களாக இருக்க வேண்டும். சல்லிவேர் கொண்ட பயிர்களை ஊடுபயிராக பயிரிட வேண்டும்.
ஏனெனில் மரங்கள் ஆரம்பகால வளர்ச்சியின் பொது அதற்கு இடையூறு இல்லாமல் ஊடுபயிர் இருக்க வேண்டும். மேலும் தீவனத்திற்கு பயன்படக்கூடிய பயிர்களை தேர்ந்தெடுத்து வருமானம் வருவதோடு மட்டுமல்லாமல் தீவனச்செலவும் குறையும்.
ஓரளவு தண்ணீர் வசதி இருக்கக்கூடிய நல்ல நிலங்களில் தோட்டக்கலை ஊடுபயிராக சாகுபடி செய்தும் நல்ல வருமானம் பெறலாம்.
தைல மரம், மலைவேம்பு மற்றும் தேக்கு போன்ற மரங்களை வளர்க்கும்போது ஊடுபயிராக வெண்டை, கத்தரி நடவுசெய்து கூடுதல் வருமானம் பெறலாம்.
கொய்யா, நெல்லி, நாவல் மற்றும் கொடுக்காபுளி போன்ற பழவகைகளை பயிரிட்டு வருமானம் ஈட்டலாம். பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை அதிகமாக இருக்கும்போது செண்டுமல்லியை ஊடுபயிராக நடவு செய்யலாம்.
குறைவான நீர் மற்றும் குறைந்த மண் வளம் உள்ள பகுதிகளில் பழம் மற்றும் விறகு பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடிய மர வகைகளான புளி வேம்பு, வேலம் போன்ற மர வகைகளுடன் தீவனப்புற்களை சாகுபடி செய்யலாம். கோ 4, கம்பு, நேப்பியர், தீவன சோளம், தீவன தட்டாம்பயறு போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம். புரதச்சத்து நிறைந்த தீவனப்பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்து கால்நடை தீவன செலவை குறைக்கலாம். மரங்களுக்கிடையே சோளம், நிலக்கடலை, தட்டாம்பயறு போன்ற இருவழி வருமானம் தரும் பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறலாம்.
வேளாண் காடுகளில் பல்வேறு தரப்பட்ட மரங்கள் மற்றும் பயிர்கள் இருப்பதால் தேனீக்கள் நன்றாக வளர ஏதுவாகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட வேளாண் காடுகளில் பத்து
தேனீ பெட்டிகள் வைக்கலாம். ஒரு பெட்டியில் ஆண்டுதோறும் 5 முதல் 8 கிலோ வரை தேன் எடுக்கலாம். ஒரு ஆண்டில் தேனீ வளர்ப்பு மூலமாக அதிகபட்சமாக ரூ. 50ஆயிரம் வரை கூடுதல் வருமானம் பெறலாம். இப்படிச் செய்வதன் மூலம் இயற்கை காடுகள் அழிவது தடுக்கப்படுகிறது.
மண்ணில் சேரும் மரக்கழிவுகள் மண்ணை வளம்பெற செய்கின்றன.
மலைப்பகுதிகளில் மண்அரிப்பு தடுக்கப்பட்டு இயற்கை சூழல் பாதுகாக்கப்படுகிறது. மண்ணின் மேற்பரப்பு வெப்பநிலை குறைக்கப்படுகிறது. மண்ணின் ஈரப்பதம் ஆவியாவதை தடுக்கிறது.
அங்ககப் பொருட்களின் அதிகரிப்பு காரணமாக மண் அமைப்பு மேம்படுகிறது.
'ஜிங்குனியானா' என்ற சவுக்கு ரகம் மூலம் காற்றின் சேதாரத்தை குறைக்கலாம். காற்று காலங்களில் வாழை, முருங்கை கொட்டைமுந்திரி மற்றும் தென்னை போன்ற பயிர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. இவற்றை சரி செய்யும் நோக்கில் நிலத்தின் வரப்பை சுற்றி மூன்று வரிசைகளில் 'ஜிங்குனியானா' ரக சவுக்கையை வரிசைக்கு வரிசை இடைவெளியிலும் மரத்திற்கு மரம் 2 மீட்டர் இடைவெளியிலும் நட வேண்டும். மூன்று வரிசைகளையும் ஒரே நேர்கோட்டில் அமைக்காமல் 'இசட்' ஆங்கில எழுத்து போன்று அமைத்தால் காற்று உட்புகுவது தடுக்கப்பட்டு காற்றின் வேகத்தை குறைக்கலாம். வரப்பை சுற்றி அமைப்பதால் ஒரு ஏக்கருக்கு 240 மரங்கள் வளர்க்கலாம். இதனால் 13 டன் வரை சவுக்கு மகசூல் கிடைக்கும். நான்கு ஆண்டுகளில் ரூ. 69 ஆயிரம் வரை கூடுதல் மகசூல் பெறலாம்.
- மகேஸ்வரன், சபரிநாதன் அருண்ராஜ்
தொழில் நுட்ப வல்லுநர்கள்
வேளாண் அறிவியல் மையம் , தேனி96776 61410