/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
விவசாய சுற்றுலாவும் வருமானம் தரும் தொழிலே
/
விவசாய சுற்றுலாவும் வருமானம் தரும் தொழிலே
PUBLISHED ON : பிப் 14, 2024

விவசாயத்தோடு தன் தோட்டத்தை பார்க்க வரும் மாணவர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் மாதிரி வேளாண் சுற்றுலா அமைத்து விவசாய விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் வருமானம் ஈட்டுகிறார் மதுரை மாத்தூர் செட்டிகுளத்தைச் சேர்ந்த விவசாயி அருள் ஜேம்ஸ் எட்வின் தம்பி.
வெளிநாடுகளில் விழிப்புணர்வு பெற்று வரும் வேளாண் சுற்றுலா குறித்து அவர் கூறியதாவது: எனது மூன்றரை ஏக்கர் நிலத்தில் மா, தென்னை, கொய்யா, எலுமிச்சை மரக்கன்றுகள் சாகுபடி செய்துள்ளேன். அனைத்தும் பலன் தருகின்றன. பண்ணை குட்டை அமைத்து மீன் வளர்ப்பு செய்கிறேன். மீன் வளர்ப்பை பார்வையிட வருபவர்கள் அங்கேயே குளிக்க வசதியாகவும் குளத்தை மாற்றியுள்ளேன். ஆடு, மாடு, வாத்து, கோழி, கின்னி கோழி, வான்கோழி உட்பட பல்வேறு இறைச்சி இனங்கள் வளர்க்கிறேன். இயற்கை முறையில் மேய்ச்சல் நிலத்தை பயன்படுத்துவதால் இவற்றின் இறைச்சி சுவையாகவும் சத்தான உணவாகவும் பயன்படுகிறது. இங்கே சோலார் பேனல் அமைத்து அதன் மூலம் நீர் பாய்ச்சும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வருகிறேன். இந்த மூன்றரை ஏக்கர் விவசாய நிலத்தை மாதிரி பண்ணையமாக மாற்றி இதுபோல மற்ற விவசாயிகளையும் ஈடுபடுத்தும் நோக்கத்தில் மாதிரி வேளாண் சுற்றுலா திட்டத்தை உருவாக்கியுள்ளேன்.
குறைந்தது 100 முதல் 200 விவசாயிகள் அல்லது தொழில் முனைவோர்கள் இணைந்து 100 ஏக்கர் நிலத்தை இதுபோல ஒருங்கிணைத்து சுற்றுச்சூழல் கிராமமாக மாற்ற திட்டமிட்டுள்ளேன். இயற்கை விவசாயத்தின் கீழ் தொழில்நுட்பம் செய்வது, விதைப்பது, உரமிடுவது, பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது வரை அனைத்தும் ரசாயனமின்றி செயல்படுத்துவோம். வெளிநாடுகளில் இதுபோன்ற திட்டம் உள்ளது. முதற்கட்டமாக மதுரை விருதுநகரில் எருமைகுளம் பகுதியில் 20 ஏக்கர் நிலத்தை ஒருங்கிணைத்து விவசாய சுற்றுலா திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். சுற்றுலா பயணிகள் விவசாயத் தோட்டத்தில் நேரம் செலவிட வேண்டும் என்பதே திட்டத்தின் முக்கிய நோக்கம். இளைஞர்கள் தொழில் முனைவோர் இங்கு வந்து பார்வையிடும் போது இதன் மூலம் விவசாயிகளுக்கு வருமானமும் கிடைக்கும்.
நீர் பாய்ச்சுவது, களை எடுப்பது, விதை நடுவது போன்ற பணிகளை சுற்றுலா பயணிகளுக்கும் கற்றுத் தருகிறோம். இங்கு விளையும் காய்கறிகளை அறுவடை செய்து சமைத்து பரிமாறுவோம். இந்த நேரடி சந்தைப்படுத்தும் வாய்ப்பின் மூலம் விவசாயிகள் வியாபாரிகளை தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களும் தோட்டத்திற்கு சென்று காய்கறிகளை வாங்கும் போது விவசாயிகளுக்கு இடைத்தரகர் இன்றி கூடுதல் வருமானம் கிடைக்கிறது என்றார். இவரிடம் பேச 98946 10778.
-- எம்.எம்.ஜெயலெட்சுமிமதுரை