/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
முலாம் பூசிய எள்ளில் முத்தான விளைச்சல்
/
முலாம் பூசிய எள்ளில் முத்தான விளைச்சல்
PUBLISHED ON : ஏப் 24, 2024

குறைந்த காலத்தில் நிறைந்த லாபம் தரக்கூடியது எள் பயிர். தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகையில் எள்ளெண்ணெய் என்ற நல்லெண்ணெய் அதிக மருத்துவகுணம் கொண்டது. எள்ளிற்கு திலம் என்ற பெயரும் உண்டு. எள்ளில் அதிக கால்சியம் சத்து உள்ளதால் எலும்பு, பற்கள், தலைமுடியை வலுப்படுத்த உதவுகிறது.
எள்ளிற்கு மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. எள் சாகுபடி செய்வதற்கு பிப்ரவரி, மார்ச் மாத மாசி பட்டம் சிறந்தது. குறைந்த தண்ணீர் போதுமானது. 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். கோ 1, டி.எம்.வி. 3, 7, எஸ்.வி.பி.ஆர்.2 ரகங்கள் நல்ல விளைச்சல் தரும். எள்விதைகளை முலாம் பூசி விதைத்து அதிக மகசூல் பெறலாம்.
பூஞ்சாண விதை நேர்த்தி
எள் விதைப்புக்கு நன்கு விளைந்த திரட்சியான பூச்சி நோய் தாக்காத கலப்பு இல்லாத விதையாக தேர்வு செய்யவேண்டும். விதைநேர்த்தி அவசியம். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி உலர் பூஞ்சாணக்கொல்லியை கலக்க வேண்டும், விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நுண்ணுயிர் விதை நேர்த்தி
விதையில் பூஞ்சாண மருந்து விதை நேர்த்தி செய்த பின்பு 50 மில்லி அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா அல்லது 50 மில்லி அசோஸ்பாஸ் திரவ உயிர் உரங்களுடன் விதைநேர்த்தி செய்ய வேண்டும். நுண்ணுயிர் நேர்த்தி செய்வதன் மூலம் பயிர்களுக்கு இயற்கையாகவே தழைச்சத்து கிடைக்கும். நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்த விதையை நிழலில் உலர வைத்து 24 மணி நேரத்திற்குள் விதைக்கவேண்டும்.
முலாம் பூசுதல்
எள்ளின் விதைகள் அளவில் சிறிதாக இருப்பதால் முலாம் பூசுதல் அவசியம். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ எள் விதை தேவை. 20 கிராம் கார்பாக்ஸில் மீத்தைல் செல்லுலோஸ் துாளை 500 மில்லி தண்ணீரில் கரைக்க வேண்டும். தனியாக 500 மில்லி தண்ணீரை கொதிக்க வைத்து கரைசலுடன் சேர்க்க வேண்டும். இதன்மூலம் தண்ணீரால் வரும் பாக்டீரியா பூஞ்சாண தாக்குதல் கட்டுப்படுத்தப்படும். பசைக்கலவை ஆறிய பின் கால் கிலோ வேப்பிலை பொடியைக் கலந்து மூன்று பங்காக மூன்று பாத்திரத்தில் பிரித்து வைக்க வேண்டும்.
முதல் பாத்திரத்தில் எள் விதையை கலந்து அரை மணிநேரம் உலர விட வேண்டும். அந்த விதைகளை அடுத்தடுத்த இரண்டு மூன்றாம் பாத்திரத்தில் கலந்து அரை மணி நேர இடைவெளியில் உலர விட வேண்டும். இவ்வாறு மூலாம் பூசுவதால் நேர்த்தி செய்யப்பட்ட விதையின் அளவு அதிகரிக்கிறது. கையால் துாவியோ, இயந்திர முறையிலோ விதைத்தால் விதைகள் சீராகப் பரவும்.
பயிர்கள் பூஞ்சாண எதிர்ப்பு சக்தி பெறும். மானாவாரியில் ஈரப்பதம் கிடைக்கும் வரையில் வறட்சியை தாங்கி வளரும். நல்ல தரமான எள் விதை 97 சதவீத சுத்தத்தன்மை, 9 சதவீத ஈரப்பதம் மற்றும் 80 சதவீத முளைப்புத் திறனுடன் இருத்தல் வேண்டும். வேளாண் விதை உற்பத்தியாளர்கள் மற்றும் வேளாண் விதை விற்பனையாளர்களிடம் விதை வாங்கும் விவசாயிகள் அதன் தரத்தை அறிந்து கொள்ள அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு விதைப்பரிசோதனை நிலையத்தில் விதை மாதிரி ஒன்றிற்கு ரூ.80 கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்யலாம்.
- மகாலட்சுமி விதைப்பரிசோதனை அலுவலர்
ராமலட்சுமி, கமலாராணி வேளாண் அலுவலர்கள் விதைப் பரிசோதனை அலுவலகம்
நாகமலை புதுக்கோட்டை மதுரை.
0452- 245 8773