PUBLISHED ON : ஏப் 24, 2024

சரியான விதைத்தேர்வு, விதைநேர்த்தி, களை, உர, பூச்சி, நோய் நிர்வாகம் செய்வதன் மூலம் மானாவாரி சாகுபடியில் கூட எக்டேருக்கு 6352 கிலோ மக்காச்சோளம் மகசூல் பெறமுடியும்.
யு.எம்.ஐ 1200 ரகம், வி. ஐ.எம் 419 ரகங்கள் மூலம் உருவாக்கப்பட்ட புதிய வீரிய ஒட்டுரகம் வி.ஜி.ஐ.எச்.(எம்) 2. இந்தாண்டு ஜனவரியில் இந்த ரகம் வெளியிடப்பட்டது. இது 95 முதல் 100 நாட்கள் வயதுடையது. மானாவாரியில் ஒரு எக்டேருக்கு சராசரியாக 6352 கிலோ மகசூல் எடுக்கலாம். படைப்புழு, தண்டு துளைப்பான் தாக்குதலுக்கும் டாசிகம் இலைக்கருகல், கரிக்கோல் அழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.
தமிழகத்தில் அதிக விளைச்சல் தரக்கூடிய மானாவாரிக்கு மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது. வறட்சியை தாங்க வல்லது. மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற பெரிய கதிர் மணிகள் மற்றும் அதிக விதை எடையுடையது. (385 கிராம் கதிரில் 1000 மணிகள் இருக்கும். இதன் ஆண் மற்றும் பெண் (4:2) உள்ளக விருத்தி வரிகளை ஒரே நாளில் விதைப்பதால் விதை உற்பத்தி செய்வது எளிது.
மானாவாரிக்கான புரட்டாசிப் பட்டத்தில் எக்டேருக்கு 20 கிலோ விதைக்கலாம். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் மெட்டலாக்ஸில் (ரிடோமில்) கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். இறவை பாசனத்தில் பயிர் இடைவெளி 60க்கு 25 செ.மீ., மானாவாரியில் 45க்கு 25 செ.மீ., இடைவெளி விட வேண்டும்.
இறவை பாசனத்திற்கு ஒரு எக்டேருக்கு 12.5 டன் தொழுஉரத்துடன் 250 : 75: 75 வீதம் தழை, மணி, சாம்பல்சத்து இடவேண்டும். மானாவாரியில் 60:30:30 தழை, மணி, சாம்பல்சத்து இடவேண்டும்.
இறவையில் மண் தன்மையைப் பொறுத்து 8 - 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்று நாட்களுக்குள் எக்டேருக்கு 500 கிராம் அட்ரசின் களைக்கொல்லியை 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்த பின் நீர் பாய்ச்சினால் களைகள் கட்டுப்படும். இந்த முறையில் பயிர் நிர்வாகம் செய்தால் ஒரு எக்டேருக்கு மானாவாரியில் 6352 கிலோ மகசூல் கிடைக்கும்.
அமெரிக்கன் படைப்புழு மேலாண்மை
ஆழ உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்களை அழிக்கமுடியும். எக்டேருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதன் மூலம் கூட்டுப்புழுவிலிருந்து தாய் அந்துப் பூச்சி வெளிவருவதைத் தடுக்கலாம். இறவையில் வரப்புப் பயிராக தட்டைப்பயிறு, எள் அல்லது சூரியகாந்தியும் மானாவாரியில் தீவனச்சோளம் ஊடுபயிராக விதைக்க வேண்டும்.
ஆண் அந்துப்பூச்சியின் எண்ணிக்கையைக் கண்காணிக்க எக்டேருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைக்க வேண்டும். விதை முளைத்த 15 - 20 நாட்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி குளோரோடேரேனிலிபுருள் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
முளைத்த 35 - 40 நாட்களில் 10 லிட்டர் தண்ணீரில் 5 மில்லி ஸ்பைநிடோரம் கலந்து தேவைக்கு ஏற்ப தெளிக்க வேண்டும். பூ பருவத்திலும், கதிர் உருவாகும் பருவத்திலும் தேவை எனில் இமாமெக்டின் 4 கிராம் / 10 லி தெளிக்க வேண்டும்.
- செல்வகுமார் இணைப்பேராசிரியர்சத்தியசீலா உதவி பேராசிரியைமக்காச்சோள ஆராய்ச்சி நிலையம், வாகரைதிண்டுக்கல்