/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மானாவாரியில் மகத்தான மகசூல் தரும் நாவல்
/
மானாவாரியில் மகத்தான மகசூல் தரும் நாவல்
PUBLISHED ON : மே 29, 2024

எப்போதும் பசுமையாக காட்சி தரும் நாவல் மரங்கள் வனங்களிலும் கிராம எல்லைகளிலும் சாலையோரங்களிலும் வளர்க்கப்படுகின்றன.
நாவல் பழத்தில் பழரச பானம் தயாரிப்பதற்கான கச்சாப் பொருள் உள்ளது. இதில் இரும்புச்சத்து அதிகம் என்பதால் விஞ்ஞானிகள் இதை மூலிகை மரம் என்கின்றனர். மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், அசாமில் அதிகளவில் காணப்படுகிறது.
தற்போது விதையில்லா ரகங்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. வட இந்தியாவில் ராஜ ஜாமூன் ரகம் பிரபலமாகி வருகிறது. இதன் பழங்கள் நீள்வட்ட வடிவில் பெரிதாக இருக்கும். குஜராத்தில் பாரஸ் ரகம், உத்தரப்பிரதேசத்தில் நரேந்திரா ஜாமூன் 6 ரகம் பயிரிடப்படுகிறது. கோமா, பிரியங்கா, தார் கிராந்தி ரகங்களும் விதையில்லா ரகங்கள் தான்.
தமிழ்நாடு வெளியீடு
தேனி பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 2022ம் ஆண்டு பி.கே.எம். 1 விதையில்லா ரகம் வெளியிடப்பட்டது. இது பல்லாண்டு பயிர் வகையைச் சேர்ந்தது என்பதால் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை நடவு செய்யலாம். மரங்கள் ஓரளவு படர்ந்து வளர்ந்து தொங்கும் கிளைகளுடன் காணப்படும். எக்டேருக்கு 12.81 டன்கள் பழ மகசூல் கிடைக்கும். சிவப்பு துரு, இலைப்புள்ளி மற்றும் கரும்படல நோய்களுக்கு மிதமாக எதிர்ப்புத்திறன் உடையது. களர், உவர் மற்றும் தரிசு நிலங்களில் மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது. வடிகால் வசதியுள்ள ஆழமான வண்டல் மண், களிமண் பகுதிகளில் நன்கு வளரும். ஆண்டுதோறும் சீராக காய்க்கும் தன்மை உடையது. பழங்கள் பெரிய அளவில் (17 கிராம் எடை) நல்ல மணத்துடன் இனிப்பு, புளிப்புத் தன்மையுடன் இருக்கும்.
தட்ப வெப்பநிலை
வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் ஆண்டு மழைப்பொழிவு 350 முதல் 500 மி.மீ., உள்ள பகுதிகளில் பயிரிட ஏற்றது. 1300 மீட்டர் உயரம் வரை மலையின் தாழ்வான பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம். பூக்கும், காய்க்கும் பருவத்தில் வறட்சியான சூழ்நிலை தேவைப்படும்.
விதைகளின் மூலம் நாவல் மரங்களை பயிர் பெருக்கம் செய்யலாம் என்றாலும் தாய் மரத்தின் பண்புகளை ஒத்த மரக்கன்றுகளைப் பெற விதையில்லா முறையைக் கையாள வேண்டும். விண் பதிய முறையில் குச்சியின் வெட்டுப்பகுதியில் என்.ஏ.ஏ., அல்லது ஐ.பி.ஏ., வளர்ச்சி ஊக்கியை லனோலின் பசை வடிவில் தடவும் போது 80 முதல் 90 சதவீத குச்சிகளில் வேர் தோன்றும் வாய்ப்புள்ளது. தாய் மரத்தின் சிறிய கிளைகளை வளைத்து தரையின் மேற்பரப்பில் படுமாறு வைத்தும், வீனீர் ஒட்டு முறையிலும், போர்கெர் முறையில் வளர் மொட்டுகளை ஒட்டு கட்டுதல் முறைகளின் மூலம் தரமான கன்றுகளைப் பெறலாம்.
நடவு செய்தல்
ஒரு கனமீட்டர் குழியில் வரிசைக்கு வரிசை 10 மீட்டர், செடிக்கு செடி 10 மீட்டர் இடைவெளியில் கன்றுகளை நடவு செய்யலாம். அல்லது வரிசைக்கு வரிசை 8 மீட்டர், செடிக்கு செடி 8 மீட்டர் இடைவெளி அல்லது செடிக்கு செடி 5 மீட்டர் இடைவெளியில் மண்வளத்தைப் பொறுத்து நடவு செய்யலாம். சி.ஐ.எஸ்.எச்.ஜே. 37 ரகத்தை 5 க்கு 5 மீட்டர் இடைவெளியில் அடர் நடவு முறையில் சாகுபடி செய்யலாம்.
உர நிர்வாகம் தேவை
இளம் மரங்களின் வளர்ச்சியைத் துாண்டுவதற்கு மரத்திற்கு 20 கிலோ தொழுவுரம் இடவேண்டும். பலன் தரும் சூழலில் ஆண்டுதோறும் மரம் ஒன்றுக்கு 20 கிலோ தொழுவுரம், 100 கிராம் தழைச்சத்து (220 கிராம் யூரியா), 100 கிராம் மணிச்சத்து (625 கிராம் சூப்பர் பாஸ்பேட்), 100 கிராம் சாம்பல்சத்து (170 கிராம் பொட்டாஸ்) உரங்களை இட வேண்டும். நடவு செய்த ஆரம்பத்தில் மரத்திற்கு வறட்சி ஏற்படக்கூடாது. போதுமான அளவு வளர்ந்த பின் வறட்சியையும், நீர் தேங்குதலையும் தாங்கி வளரும். நட்ட பின் 2 முதல் 3 ஆண்டுகள் வரை சரியான இடைவெளியில் இளம் மரங்களுக்கு ஆண்டுக்கு 8 முதல் 10 முறை நீர்ப்பாசனம் தேவை.
பின்செய் நேர்த்தி
ஆரம்ப காலத்தில் கிளைகள் தோன்றுவதற்கு வசதியாக செடியின் நுனியை தரையிலிருந்து 100 செ.மீ., உயரத்தில் கிள்ளி விட வேண்டும். வளமான மண்ணுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தும் போது பூ மொட்டுகள் அதிகளவில் தோன்றும். மார்ச் முதல் வாரம் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை பூக்கும். தேனீக்கள், ஈக்கள், காற்று மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. மொத்தப் பூக்கள் உற்பத்தியில் 12 முதல் 15 சதவீதம் வரை மட்டுமே காய்களாக மாறுகின்றன. மீதி பூக்கள் இயற்கையாகவே உதிர்ந்து விடும். பூக்கும் சமயத்திலும் காய்கள் தோன்றிய 15 நாட்கள் கழித்தும் யு.ஏ., வளர்ச்சி ஊக்கியை (60 பி.பி.எம்.) தெளிப்பதால் பூக்கள் உதிர்வதைக் குறைக்கலாம்.
ஊடுபயிருக்கு வாய்ப்பு
நடவு செய்த புதிதில் அதிக இடைவெளி இருக்கும் போது பயறுவகை மற்றும் காய்கறி பயிர்களை மழைக்காலத்தில் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். இளம் செடிகளில் கிளைகள் தரை மட்டத்தில் இருந்து 60 முதல் 100 செ.மீ வரை இல்லாமலும் ஒரு செடியில் 3 முதல் 5 கிளைகளை மட்டும் எல்லா பக்கங்களில் பரவி இருக்கும்படி அனுமதிக்க வேண்டும். பழத் தோட்டத்தின் உற்பத்தியை பெருக்க மரங்களின் வரிசைகளுக்கு இடையே வளரும் களைகளை ஆண்டுக்கு 2 முதல் 3 முறை களையை வெட்டி இடை உழவு செய்ய வேண்டும்.
பயிர் பாதுகாப்பு முறை
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி டைமெத்தோயேட் அல்லது மாலத்தியான் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிப்பதன் மூலம் இலை தின்னும் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். பூக்கும் சமயத்தில் தேனீக்களுக்குச் சேதம் விளைவிக்காத எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்க வேண்டும். இலை மற்றும் பழப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் இண்டோபில் இசட் 78 பூஞ்சாணக் கொல்லி மருந்தைத் தெளிக்க வேண்டும்.
அறுவடை எப்போது
விதை மூலம் உற்பத்தியான கன்றுகள் 10 ஆண்டுகளிலும், விதையில்லாத முறை கன்றுகள் நட்ட 5 முதல் 6 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும். ஜூன், ஜூலை மாதங்களில் பழங்களை அறுவடை செய்யலாம். முழுமையாகப்பழுத்த பழங்களை மரத்தின் மீதேறி கையால் பறிக்கலாம். ஆண்டுக்கு ஒரு மரம் 50 முதல் 80 கிலோ வரை பழங்கள் தரும். 5 நாட்களில் அழுகி விடுவதால் உடனடியாக விற்பனை செய்ய வேண்டும். 9 டிகிரி சென்டிகிரேடு வெப்பமும், 85 முதல் 90 சதவீத ஈரப்ப சூழ்நிலையில் 3 வாரங்கள் வரை பழங்களைச் சேமிக்கலாம்.
100 கிராம் நாவல் பழத்தில் 19.7 கிராம் மாவுச்சத்தும், சாம்பல் சத்து, புரதம், பாஸ்பரஸ், கொழுப்பு, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, நார் சத்துகள் உள்ளன. ஆடி மாதத்தில் இப்பழம் கிடைக்கும். இதன் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது.
-சோலைமலை, பாக்கியாத்து சாலிகா, மணிகண்டன் சஞ்சீவ்குமார்
பேராசிரியர்கள்
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்
கோவில்பட்டி
77086 03190