PUBLISHED ON : மே 29, 2024

வெப்ப மண்டலத்தில் குறைந்த பராமரிப்பில் அதிக வருமானம் தரும் பயிர் துவரை. செம்மண்ணில் செழித்து வளரும். களிமண் வகை, உவர் மற்றும் களர் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றதல்ல. துவரம்பருப்பில் புரதம் அயோடின் அதிகளவில் உள்ளது. லைசின், சிஸ்டின், தையோசின், அர்ஜினைன் போன்ற முக்கிய அமினோஅமிலங்கள் உள்ளது. இதன் இலையும், காயின் மேல் தோலும் கால்நடைகளுக்கு தீவனமாகிறது.
நிலம் தயாரிக்க வேண்டும்
துவரைக்கு ஆழமான வேர் அமைப்பு இருப்பதால் 2 அல்லது 3 முறை ஆழமாக உழவேண்டும். இறுதி உழவின் போது ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழுஉரத்தை இடவேண்டும். ஒரு ஏக்கருக்கு அடியுரமாக 5 கிலோ தழைச்சத்து, 10 கிலோமணிச்சத்து, 5 கிலோ சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும். குவாலியர் 3 (ஜி 3) ரகம் கோடை சாகுபடிக்கு ஏற்றது. வறட்சியை தாங்கி வளரும். 230 - 240 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். எக்டேருக்கு 15 முதல் 18 டன் மகசூல் தரும்.
விதையும் விதைநேர்த்தியும்
ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவை. ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் டிரைக்கோடெர்மா விரிடி உயிர் பூஞ்சாணக் கொல்லியை கலக்க வேண்டும். 24 மணி நேரம் கழித்து 600 கிராம் ரைசோபியத்தை ஆறிய வடிகஞ்சியுடன் கலந்து விதைநேர்த்தி செய்து நிழலில் உலர்த்தவேண்டும். பின்னர் 6 அடிக்கு ஒரு அடி என்ற இடைவெளியில் விதைக்க வேண்டும். சித்திரை பட்டத்தில் மானாவாரியாக துவரை சாகுபடி செய்யப்படுகிறது. விதைத்த 20வது நாள் கையால் களை எடுக்க வேண்டும். 2வது முறை 40வது நாளில் களை எடுக்கவேண்டும்.
காய் பிடிப்பை அதிகப்படுத்தும் வழி
கோவை வேளாண் பல்கலையின் பயறு வொண்டர் பூஸ்டரை வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தலாம். ஏக்கருக்கு 2 கிலோ பயறு அதிசயத்தை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து பூக்கும், காய் பிடிக்கும் பருவத்தில் தெளிக்கவேண்டும். இதனால் பூக்கள் உதிர்வது குறைந்து காய் பிடிக்கும் திறன் அதிகமாகி விளைச்சல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும். வறட்சி காலத்தில் 2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு, 0.1 சதவீதம் போரான் கலந்து இலை வழியாக தெளிக்கவேண்டும்.
ஊடுபயிர் முறைகள்
துவரையில் வரிசைக்கு வரிசை அதிக இடைவெளி இருப்பதால் நிலக்கடலையை 1 க்கு 6 என்ற வரிசையிலும் சாமை போன்ற சிறுதானியங்களை 1க்கு 4 என்ற வரிசையில் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். ஊடுபயிருக்கு ஏற்ப கூடுதல் உரமிட வேண்டும். இதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். காய்கள் முதிர்ந்தபின் போரடித்தல் மூலம் விதைகளை பிரித்து 7 - 8 சதவீத ஈரப்பதத்திற்கு உலர வைத்து சேமிக்க வேண்டும். பூச்சிகள் தாக்காமலிருக்க களிமண், புகையிலைத்துாள், நொச்சி இலைத்துாள் கலந்து சேமிக்க வேண்டும்.
- மகேஸ்வரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) அருண்ராஜ், சபரிநாதன், தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம்தேனி. 96776 61410