/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கொண்டாட வைக்கும் கோ 55 நெல் ரகம்
/
கொண்டாட வைக்கும் கோ 55 நெல் ரகம்
PUBLISHED ON : ஜூன் 19, 2024

தமிழகத்தில் சொர்ணவாரி, கார், குறுவை, நவரை பருவத்தில் சாகுபடி செய்வதற்கு உகந்த சன்னரக நெல் கோ 55. இதன் வயது 115 நாட்கள், எக்டேருக்கு 6050 கிலோ மகசூல் தரும்.
ஏக்கருக்கு சாகுபடி செய்ய 10 முதல் 12 கிலோ விதைகள் தேவை. ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 8 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். ஒரு டன் தொழுஉரத்தை நிலத்தில் பரப்பி பின் தண்ணீர் பாய்ச்சி 2 அல்லது 3 முறை உழவேண்டும்.
நாற்று பராமரிப்பு
நெல் நாற்றுகள் செழித்து வளர ஒருசென்ட் நிலத்திற்கு 2 கிலோ வீதம் 8 சென்ட் நாற்றாங்காலுக்கு 16 கிலோ டி.ஏ.பி. உரமிட வேண்டும். அல்லது 8 கிலோ யூரியா, 50 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரமிடலாம்.
விதையை 12 மணி நேரம் நீரில் ஊற வைத்து சாக்குப்பைகளில் கட்டி இருட்டறையில் முளைக்கும் வரை (24 மணி நேரம்) வைக்க வேண்டும்.
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் கலந்து 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். முளை கட்டிய விதைகளை நாற்றாங்காலில் விதைப்பதற்கு முன் தண்ணீரை வடிக்க வேண்டும்.
இந்த விதைகளை நாற்றாங்காலில் துாவி முளைத்த பின் தண்ணீரின் அளவை உயர்த்தவேண்டும்.
அங்கக உரம் அவசியம்
தொழுஉரம் அல்லது எருவை ஏக்கருக்கு 5 டன் வீதம் முதல் உழவு செய்வதற்கு முன் பரப்ப வேண்டும். நிலத்தை உழுது தண்ணீர் பாய்ச்சி 2 நாட்கள் கழித்து 2.5 செ.மீ., உயரத்திற்கு நிலத்தில் தண்ணீர் இருக்கும் நிலையில் உழவேண்டும்.
கேஜ்வீல் கொண்டு உழுத பின் லேசர் கருவியால் நிலத்தை சமப்படுத்த வேண்டும். இதனால் பயிர்கள் சீராக வளர்ச்சி பெறும். வயலின் வரப்பு, மூலையை வெட்டி சமப்படுத்தி ஓரங்களை 2.5 செ.மீ. அளவிற்கு வெட்டி களைகள், பூச்சிகள் இல்லாமல் அழிக்க வேண்டும். வரப்பின் உயரம் மற்றும் அகலம் 15 செ.மீ. இருக்க வேண்டும்.
நாலு இலையில் நடவு
நாற்றாங்காலில் 4 இலை வந்த பிறகு அல்லது 21வது நாளில் நாற்றுகளை பறித்து நுனிகளை கிள்ளியபின் நடவேண்டும்.
இதனால் தண்டுதுளைப்பான் முட்டைகளை அழித்து பயிர்கள் வளரும். ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மில்லி அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியா கலந்து நாற்றின் வேர்ப்பகுதியை அரைமணி நேரம் ஊறவைத்து நடவேண்டும். பயிருக்கு 20க்கு 10 செ.மீ. இடைவெளி தேவை.
ஊட்டச்சத்து மேலாண்மை
மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடாத நிலையில் ஏக்கருக்கு 60 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிசத்து, 20 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். உரங்களை நான்கு பங்காக பிரிக்க வேண்டும். நடவு செய்யும் முன் அடியுரமாக 15:20:5 கிலோ விகிதத்தில் தழை, மணி, சாம்பல் சத்துகளை இட வேண்டும்.
துார் கட்டும் பருவத்தில் 15 கிலோ தழை, 5 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். பூக்கும் பருவத்தில் 15 கிலோ தழை, 5 கிலோ மணிச்சத்து; மணி பிடிக்கும் தருணத்தில் 15 கிலோ தழை, 5 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். மேலும் 10 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 20 கிலோ மண்ணுடன் கலந்து நடுவதற்கு முன் நிலத்தில் சீராக துாவ வேண்டும்.
200 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ டி.என்.ஏ.யூ. நெல் ரீப் ஊட்டச்சத்து பூஸ்டரை கலந்து பூட்டைப் பருவத்திலும், 10 நாட்கள் கழித்து 2வது முறையாக இலைவழியாக தெளிக்கவேண்டும்.
இதனால் நெற்கதிரில் ஏற்படும் மலட்டுத்தன்மை குறைந்து மணிபிடிக்கும் திறன் அதிகரிக்கும். வறட்சி மற்றும் உயர் வெப்பத்தை தாங்கும் பயிர் வளரும். மகசூல் அதிகரிக்கும் வகையில் விதைத்த 25 ம் நாளில் ஒருலிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி நானோ யூரியா கலந்தும், 45 ம் நாளில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி கலந்து இலைவழியாக தெளிக்க வேண்டும்.
களை மேலாண்மை முறை
நெல்லில் களை அதிகரிப்பதால் 10 முதல் 15 சதவீத மகசூல் இழப்பு ஏற்படுகிறது. ஏக்கருக்கு 500 கிராம் பியூட்டாகுளோர் களைக்கொல்லியை களை முளைக்கும் முன் தெளிக்கவேண்டும். அதன் பின் நடவு நட்ட 30 முதல் 35 நாட்களில் ஒருமுறை கையால் களை எடுக்க வேண்டும்.
நானோ யூரியா பயன்பாடு
குலை நோய், இலைப்புள்ளி நோய், பாக்டீரியல் இலைக்கருகல் நோய்கள் நெற்பயிர்களைத் தாக்கும். இவற்றை கட்டுப்படுத்த திரேம் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதைகளை விதைநேர்த்தி செய்யவேண்டும். ஏக்கருக்கு 60 கிலோ வேப்பம் புண்ணாக்கை இடுவதன் மூலம் நோய் பரவலை குறைக்கலாம்.
நோய்களின் தாக்குதல் செடிகளில் தென்பட்டாலோ, சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல் இருந்தாலோ ஏக்கருக்கு 6 லிட்டர் வேப்பெண்ணைய் அல்லது 400 மில்லி வேப்பங்கொட்டை சாற்றை இலைவழியாக தெளித்து கட்டுப்படுத்தலாம். தண்டுத்துளைப்பான், பச்சை தத்துப்பூச்சியை கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஒரு விளக்குபொறி வைத்து அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
நெல்லின் இலை, தண்டு வெளிரிய மஞ்சள் நிறமாகி 80 சதவீத தானியங்கள் முற்றி காணப்படும். அறுவடைசெய்வதற்கு 10 நாட்களுக்கு முன் நீர் கட்டுவதை நிறுத்தவேண்டும்.
அறுவடை செய்த நெல் மணிகளை 3 அல்லது 4 முறை வெயிலில் காயவைத்து தானியத்தின் ஈரப்பதத்தை 10 சதவீதமாக குறைத்த பின் சாக்குப்பைகளில் சேமிக்க வேண்டும்.